
புதுடெல்லி: பாகிஸ்தானில் இருந்து அனைத்துவிதமான இறக்குமதிகளுக்கும் தடை என்ற உத்தரவை இந்தியா பிறப்பித்த சில மணி நேரங்களிலேயே, அங்கிருந்து வரும் கடிதங்கள், பார்சல்களுக்கு தடை என்ற உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தரைவழி, வான்வழி என எந்த விதத்திலும் பாகிஸ்தானில் இருந்து வரும் கடிதங்கள், பார்சல்கள் ஊக்குவிக்கப்படாது என இந்திய தபால் துறை தெரிவித்துள்ளது. மறு உத்தரவு வரும் வரை இந்தத் தடை நீடிக்கும் எனத் தெரிகிறது.
பாகிஸ்தான் மீதான நடவடிக்கைகள்: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது ராணுவ நடாடிக்கை பாயும் என்று எதிர்பார்க்கப்படும் சூழலில், இந்தியா அடுத்தடுத்த நடவடிக்கைகளை அவிழ்த்து விடுகிறது. கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கு பகுதியில் நடைபெற்ற தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இந்தத் தாக்குதலை பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ உத்தரவின் பேரில், லஷ்கர் -இ-தொய்பா திட்டமிட்டுள்ளது என இந்தியாவின் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தனது முதல் கட்ட விசாரணை அறிக்கையில் தெரிவித்துள்ளது.