“திருமணமாகி 10 ஆண்டுகளாகிவிட்டன. இருமுறை கருத்தரித்தபோதும் இருமுறையும் உயிருக்கே ஆபத்தான எக்டோபிக் எனும் சினைக்குழாய் கர்ப்பம் என்பதால், இருமுறையும் அறுவை சிகிச்சை, இனி இயல்பாக கருத்தரிக்கவே இயலாத நிலை..”

“நாற்பது வயதுவரை குடும்பச்சூழல் காரணமாக திருமணம் குறித்த யோசனை கூட எழவில்லை. அதன்பிறகு மணமுடித்து, சில காலம் காத்திருப்பிற்குப் பிறகு, கருத்தரிப்பு சிகிச்சைக்குச் சென்றபோது, சினைமுட்டைகள் மிகவும் குறைந்து, மாதவிடாய் நிறுத்தத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்ததால் கருத்தரிப்புக்கு வாய்ப்பற்ற நிலை..”

செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை

“வயதுக்கு வந்தது முதலே கடுமையான மாதாந்தர வலி.. திருமணத்திற்குப் பின் பரிசோதனைகள் மேற்கொண்டபோது, எண்டோமெட்ரியோசிஸ் எனும் சாக்லேட் கட்டிகளின் தீவிரநிலை என்பதுடன் கருத்தரிப்பு இயல்பாக நிகழவும் வாய்ப்பற்ற நிலை..”

“கருத்தரிப்பில் சிக்கல்கள் உள்ளனவா என்பதை அறிய மேற்கொண்ட பரிசோதனைகளில், பி.ஐ.டி. (PID) எனும் நோய்த்தொற்றின் காரணமாக சினைக்குழாய்களில் அடைப்பு கண்டறியப்பட்டு, இயல்பான கருத்தரிப்பு நிகழ வாய்ப்பில்லை என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.!”

“இளவயது சர்க்கரை நோய் மற்றும் உடல் பருமன்… அவை தந்த பலனாக, மிகவும் குறைந்த விந்தணுக்கள் நிலை மற்றும் விந்துவெளியேற்றக் குறைபாட்டு நிலை. கருத்தரிப்பு என்பதே கேள்விக்குறியாக மாறிவிட்ட நிலை..”

“கல்வி, பணி, பதவி, அத்துடன் உடல் மற்றும் மன ஆரோக்கியம் என அனைத்தும் நலமாக இருந்தும், முற்றிலும் விந்தணுக்கள் இல்லாத azoospermia நிலை கண்டறியப்பட்டபோது உலகமே இருண்டுவிட்டது எனலாம். கருத்தரிப்பு சாத்தியமே இல்லை எனும் கையறுநிலை..!”

In Vitro Fertilization (IVF- ஐ.வி.எஃப்)

இதுபோன்ற பற்பல காரணங்களால், “இனிமேல் குழந்தை பாக்கியம் கிட்டவே கிட்டாது” எனும் அதீத நிலைகளில், குழந்தைப்பேறின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர், விரக்தியுடன் அடுத்து பொதுவாக நாடுவது, தத்துக்குழந்தை அல்லது வாடகைத்தாய் முறைகளைத் தான்.

ஆனால், இத்தம்பதியினரின் கையறுநிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்து, “இனி எங்களுக்கும் ஒரு குழந்தை!” என அவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விடிவெள்ளியாக, செயற்கை கருத்தரிப்பில் முக்கியமானதொரு சிகிச்சைமுறையாகத் திகழ்வதுதான், டெஸ்ட் டியூப் பேபி எனும் சோதனைக்குழாய் சிகிச்சை முறையாகும்.

அதாவது, இயல்பாக கருத்தரிக்க இயலாத இந்த நிலைகளிலும், முன்னர் சொன்ன ஐ.யூ.ஐ எனும் செயற்கை விந்தூட்டல் சிகிச்சைகள் தோல்வியுறும்போதும், அடுத்து மேற்கொள்ளப்படும் இந்த சிறப்பு சிகிச்சை, ‘In Vitro Fertilization’ (IVF- ஐ.வி.எஃப்) எனும் டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சை என வழங்கப்படுகிறது .

உண்மையில், இம்முறையில் சினைக்குழாய் அடைப்பு அல்லது விந்தணு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு, அவர்களது கருமுட்டை மற்றும் விந்தணுக்களை தனியே எடுத்து அதற்கான ஆய்வகத்தில் அவற்றைச் சேகரித்து, பின் கருவாக உருவாக்கி, அந்தக் கருவை, தக்க சமயத்தில் பெண்ணின் கருப்பையில் செலுத்தப்படுகிறது. அதாவது, இயல்பாக உடலுக்குள் கருத்தரிப்பு நிகழ்வதை (In Vivo), ஆய்வகத்தில் நிகழ்த்துவதைத் தான், In Vitro Fertilization என மருத்துவர்கள் அழைக்கின்றனர்.

மருத்துவ அறிவியலில் ஒரு முக்கிய மைல் கல்லாகவும், செயற்கை கருத்தரிப்பு சிகிச்சை முறைகளில் அதிசயிக்கத்தக்க ஒரு முன்னேற்றமாகவும் விளங்கும் இந்தச் சிகிச்சையை பற்றித் தெரிந்துகொள்ளும் முன், இதற்கென வித்திட்ட மருத்துவ விஞ்ஞானிகளின் வரலாற்றையும், புராணங்கள் கூறும் சில ஆச்சர்யமான தகவல்களையும் தெரிந்துகொள்வோம்.

புராண காலத்திலேயே இருந்த செயற்கை கருவூட்டல்!

புராணக் கதைகளில் இறைவன் கண்ணனின் சகோதரரான பலராமனுக்கு, ‘சங்கர்ஷனன்’ எனும் பெயர் ஏற்படக் காரணமே, அவரது பிறப்பு தான் எனப்படுகிறது. “இழுத்து வைக்கப்பட்ட” எனும் பொருள்படும் இப்பெயருக்குப் பின்னால், தேவகி எனும் தாயின் வயிற்றில் உதித்து, கருவுற்ற காலத்திலேயே ரோகிணி எனும் தாயின் வயிற்றுக்குள் மாற்றி வைக்கப்பட்டதை, “ஒரு தாய் உதிரத்தில் உறைந்த பிள்ளை, ஒரு தாய் வயிற்றில் வந்துற்றதெம் மாயம்” எனும் வரிகள் குறிக்கின்றன.

அதேபோல, சமண சமயத்தில், பூமிக்கடவுளான சக்ரா, தேவநந்தா எனும் தாயின் கருவிலிருந்து, திரிசாலா எனும் தாயின் கருவில் மகாவீரரை மாற்றி வைத்ததாக அப்புராணக் கதை கூறுகிறது.

புராணங்கள் தாண்டி, உண்மை வரலாற்றில், 1887-ம் ஆண்டில் ஸ்கென்க் எனும் அமெரிக்க விஞ்ஞானி, முயல் மற்றும் கினி எலிகளிலும் செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை முயற்சி செய்ததும், 1891-ம் ஆண்டில், வால்டர் ஹீஃப் எனும் விஞ்ஞானி, முயல்களிலிடையே ஒரு தாய் முயலின் கருவிலிருந்து மற்றொரு தாய் முயலுக்கு கருவை மாற்றிவைக்கும் முறையை முதன்முதலாக மேற்கொண்டு, பல தோல்விகளுக்கு இடையே வெற்றியடைந்துள்ளதையும் அறிய முடிகிறது.

அதே காலகட்டத்தில், கருக்குழாய் அடைப்புநீக்க நுண் அறுவை சிகிச்சைகள் முயற்சி செய்யப்பட்டு ஆனால் அவை தோல்வியடைந்துள்ளன.

1930-களில் அமெரிக்காவின் ஹார்வர்ட் பல்கலைக்கழக மருத்துவ விஞ்ஞானிகளான் கிரெகரி ஃபின்கஸ், ஜான் ராக் மற்றும் அவர்களின் உதவியாளர் மிரியம் மென்கின் ஆகிய மூவரும், கருவிற்கு பதிலாக, முயல்களின் கருமுட்டைகளையும் விந்தணுக்களையும் தனித்தனியே சேகரித்து, ஆய்வகத்தில் கருவாக்கி, அந்தச் செயற்கை கருவை பெண் முயல்களின் கருப்பைக்குள் செலுத்தும் இன்றைய டெஸ்ட் டியூப் பேபி சிகிச்சையை முதன்முதலாக மேற்கொண்டு, அதில் வெற்றியும் கண்டுள்ளனர்.

இந்தச் செயற்கை கருவை சுமக்க உதவும் வளர்ப்பூடக திண்மங்கள் மற்றும் திரவங்கள் குறித்த ஆய்வில் ஆல்பர்ட் பிராச்செட் ஈடுபட்டிருந்தபோது, ஹார்வர்ட் பல்கலைக்கழக மும்மூர்த்தியர், மனித கருவை செயற்கையாக உருவாக்கும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.

கட்டுரையாளர்: மருத்துவர் சசித்ரா தாமோதரன்

வேறு காரணங்களுக்காக, சினைப்பை அறுவைசிகிச்சை மேற்கொண்ட பெண்களிடமிருந்து, அவர்களது சம்மதத்துடன் முழு சினைப்பையையோ அல்லது சினைப்பையின் ஒருபகுதியையோ அறுவை சிகிச்சை மருத்துவர் உதவியுடன் பெற்றுக்கொண்டு, ஆய்வகத்தில் அதிலிருந்து கருமுட்டைகளைத் தேடிப் பிரித்து, பின்னர் விந்தணுக்களுடன் கலந்து, கரு உருவாக அவர்கள் காத்திருந்தது ஆறு வருடங்களாம்.

கிட்டத்தட்ட 138 முறைகள், அவர்களது ஆராய்ச்சி முறைகள் தோற்றுக்கொண்டே இருந்தபோதும், தொடர் முயற்சிகளுக்குப் பின், 1944-ம் ஆண்டு, முதல் செயற்கை மனிதக் கரு உருவாகி, அவர்களுக்கும் இவ்வுலகிற்கும் ஒரு வெற்றிக்கனியை அறிவியல் வழங்கியது.

அதற்குப்பின், செயற்கை முறையில் உருவான கருவை, தாயின் கருப்பைக்குள் வைக்கும் தொழில்நுட்பத்தை (Embryo Transfer) உருவாக்கும் முயற்சிகளை அவர்கள் மேற்கொள்ள முயற்சிக்கும்போது, செயற்கை கரு என்பது, மிகப்பெரிய ஊழல் என்றும், இயற்கைக்கு எதிரானது என்றும், கற்பழிப்புக்கு சமமானது (Baby in vitro is Rape in vitro) என்றும் மத ரீதியான பிரசாரங்கள் மற்றும் எதிர்ப்புக் குரல்கள் எழ, அனைத்து முயற்சிகளையும் அந்த மருத்துவக் குழு, அப்படியே கைவிட்டது.

தொடர் தோல்விக்குப் பின் கிடைத்த வெற்றி…

ஆனால் அவர்களின் முயற்சியை முன்னுதாரணமாகக் கொண்டு, உலகெங்கும் sperm capacitation எனும் விந்தணு திறன்கூட்டல், சரியான முட்டைகளைத் தேர்வு செய்தல், லேப்ராஸ்கோப்பி அறுவை சிகிச்சை மூலம் சரியான முட்டைகளைச் சேகரித்தல், சரியான வளர்ப்பூடகத்தைத் தேர்வு செய்தல் போன்ற செயற்கை கருத்தரிப்பு ஆராய்ச்சிகள் தொடர்ந்து நிகழ, முதல் செயற்கை கரு உருவான நாளிலிருந்து, கிட்டத்தட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, 1978-ம் ஆண்டு, ஜூலை 25-ம் தேதி, இங்கிலாந்து மருத்துவர்கள் ராபர்ட் எட்வர்ட்ஸ் மற்றும் பாட்ரிக் ஸ்டெப்ட்டோ ஆகியோரின் பெரும் முயற்சியால் லூயிஸ் பிரவுன் என்ற உலகின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தை பிறந்து, மருத்துவ அறிவியலில் ஒரு முக்கிய மைல் கல் அரங்கேறியது.

பல தடைகற்களையும் இன்னல்களையும் கடந்துவந்த இந்த மருத்துவர்களும், இங்கிலாந்தின் போர்னே ஹாலில் செயற்கை கருத்தரிப்பு மையம் மற்றும் ஆராய்ச்சி நிலையத்தைத் தோற்றுவித்து, அடுத்த பத்து ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் அங்கு பிறந்து, பலரின் துயர் நீக்கிய சாதனையை நிகழ்த்தி, அதற்கு நோபல் பரிசையும் வென்றுள்ளனர்.

செயற்கை கருத்தரிப்பு

அதே காலகட்டத்தில் இந்தியாவின் சுபாஷ் முகர்ஜி மற்றும் பட்டாச்சாரியா உள்ளிட்ட மேற்கு வங்க மருத்துவர்கள், சோதனைக் குழாய் முயற்சியில் வெற்றியடைந்ததாகவும், ஆனால், அனுமதியின்றி சமர்ப்பித்த அவர்களது ஆய்வை அரசாங்கம் நிராகரித்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.

அதன்பிறகு, அறிவியல் பூர்வமாகவும், மருத்துவ நெறிகளைப் பின்பற்றியும், மகாராஷ்டிர மாநிலத்தில், பேராசிரியர் ஆனந்த் குமாரின் வழிகாட்டலுடன், டாக்டர் இந்திரா ஹிந்துஜா அவர்கள்,

ஷ்யாம் சாவ்தா மற்றும் மணி சாவ்தா தம்பதியினருக்கு செயற்கை கருத்தரிப்பு சிகிச்சையை மேற்கொள்ள, 1986-ம் ஆண்டு இந்தியாவின் முதல் டெஸ்ட் டியூப் குழந்தையான ஹர்ஷா சாவ்தா பிறந்து, நமது நாட்டிலும் மருத்துவ நுட்பம் செழித்தோங்கியது.

இந்த 50 ஆண்டுகளில் பற்பல முன்னேற்றங்களையும் மாற்றங்களையும் கண்ட இந்த ஐ.வி.எஃப். செயற்கை கருத்தரிப்பு முறை, இன்று உலகெங்கும் பல லட்சம் குழந்தைகள் பிறக்கவும், குழந்தைப்பேறில்லா தம்பதியினரின் துயர் நீக்கவும் காரணமாக விளங்கி வருகிறது.

55% வரை வெற்றி, கருத்தரிப்பிற்கு முன்னராகவே குரோமோசோம்களை பகுப்பாய்வு செய்யும் முறைகள் என ஒவ்வொரு நாளும் புதுப்புது அறிவியல் ஆச்சர்யங்களைத் தந்து கொண்டேயிருக்கும் இந்தச் சிகிச்சை குறித்து இனி தெரிந்து கொள்வோம்..!

பூப்பு முதல் மூப்பு வரை பயணம் தொடர்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *