இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளரும், கேரளா உள்ளூர் கிரிக்கெட் அணியான ஏரீஸ் கொல்லம் சைலர்ஸ் (Aries Kollam Sailors) அணியின் இணை உரிமையாளருமான ஸ்ரீசாந்த் இனி கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA) தொடர்பான எந்தவொரு செயல்பாடுகளிலும் ஈடுபடக்கூடாது கூடாது 3 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

முன்னதாக, கடந்த ஆண்டு டிசம்பரில் தொடங்கி ஜனவரி வரையில் நடைபெற்ற விஜய் ஹசாரே டிராபி (50 ஓவர் உள்ளூர் போட்டி) தொடருக்கான கேரளா அணியிலிருந்து சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்பட்டார்.

பின்னர், பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபிக்கான அணியில் சஞ்சு சாம்சன் இடம்பெறாததற்கு, விஜய் ஹசாரே டிராபிக்கான கேரளா அணியிலிருந்து அவர் கழற்றிவிடப்பட்டதே காரணம் என்று பேச்சுக்கள் அடிபட்டது.

இந்த விவகாரத்தில் சஞ்சு சாம்சனின் தந்தை சாம்சன் விஸ்வநாத், KCA மீது சில குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

ஸ்ரீசாந்த் – சஞ்சு சாம்சன்

இன்னொருபக்கம், தனியார் ஊடக நேர்காணலில் ஸ்ரீசாந்த், “நமது மாநிலத்துக்காக விளையாட எதற்காக வெளி மாநிலங்களிலிருந்து வீரர்களை அழைத்து வருகிறது KCA? இது நம் மலையாள வீரர்களுக்கு அவமரியாதை.

சர்வதேச அளவில் நமக்கு இருக்கும் ஒரே வீரர் சஞ்சு மட்டும்தான். அவரை நாம் ஆதரிக்க வேண்டும். சஞ்சுவுக்குப் பிறகு ஒரு சர்வதேச கிரிக்கெட் வீரரைக்கூட KCA உருவாக்கவில்லை.

சச்சின் பேபி, நிதிஷ், விஷ்ணு வினோத் போன்ற சிறந்த வீரர்கள் நம்மிடம் இருக்கிறார்கள். ஆனால், KCA அவர்களை உயர்மட்ட அளவில் விளையாடவைக்கிறதா?” என்று KCA-வை குற்றம்சாட்டினார்.

இதனால், பிப்ரவரியில் KCA தரப்பிலிருந்து ஸ்ரீசாந்த்துக்கு, கொல்லம் சைலர்ஸ் அணியின் இணை உரிமையாளராகத் தனது ஒப்பந்த விதிமுறைகளை மீறியதற்காகவும், தவறான மற்றும் அவதூறான கருத்துக்களை வெளியிட்டதற்காகவும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டிருக்கிறது.

இந்த நிலையில்தான், ஏப்ரல் 30-ம் தேதி கொச்சியில் நடைபெற்ற KCA சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில், KCA தொடர்புடைய செயல்பாடுகளிலிருந்து ஸ்ரீசாந்த்தை 3 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்யும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA)
கேரளா கிரிக்கெட் சங்கம் (KCA)

இது குறித்து KCA, “சர்ச்சைக்குரிய கருத்துக்களுக்காக ஸ்ரீசாந்த் உட்பட கொல்லம் ஏரீஸ், ஆலப்பி ரிப்பிள்ஸ் அணிகளின் நிர்வாகிகள் உள்ளிட்டோருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

அணிகள் திருப்திகரமான பதில்களை அளித்ததால், அவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்க வேண்டாம் என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

அதேசமயம், புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும்போது அணி நிர்வாகங்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. ” என்று தெரிவித்திருக்கிறது.

மேலும், சஞ்சுவின் பெயரில் கிரிக்கெட் சங்கத்தின்மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வைத்ததற்காக சாம்சன் விஸ்வநாத் உள்ளிட்டோரிடமிருந்து இழப்பீடு கோரவும் பொதுக்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *