
சென்னை: கோயில்களில் ‘ரீல்ஸ்’ வீடியோ பதிவு செய்து வெளியிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். சென்னை வில்லிவாக்கத்தில் முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று கலந்துகொண்டார்.
அப்போது, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: திருநெல்வேலி நெல்லையப்பர் கோயிலில் சினிமா பாடலுக்கு நடனமாடி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்துள்ளனர். அவ்வாறு வீடியோ வெளியிட்டவர்கள் மீது புகார் கொடுத்து, சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். ஆன்மிக தலங்களில் இறையன்பர்கள் ஏற்கக்கூடிய நிகழ்ச்சியை தவிர்த்து, ரீல்ஸ் வீடியோ வெளியிடுவது உள்ளிட்ட எது நடந்தாலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்.