ப்பஹல்காம் தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து இந்தியாவில் வசிக்கும் பாகிஸ்தான் மக்கள் அனைவரையும் வெளியேற உத்தரவிட்டிருக்கும் மத்திய அரசு, மாநில அரசுகளுக்கும் அதற்கான ஆணையை அனுப்பி வைத்திருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக மருத்துவ உதவிகளுக்காக இந்தியா வந்தவர்களும், திருமணம் செய்துகொண்டு இந்தியாவுக்கு வந்தவர்களும் மத்திய அரசிடம் உதவி கேட்டு வருகின்றனர்.

அதன்படி இந்தியாவுக்குத் திருமணம் செய்து கொண்டு வந்த பாகிஸ்தான் பெண் ஒருவர், புதுச்சேரி முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்திருக்கிறார்.

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஹனீப்கான் என்பவருக்கும், பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பௌசியா பேகம் என்ற பெண்ணுக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

அதையடுத்து புதுச்சேரியில் உள்ள வீட்டில் இருவரும் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் இருக்கின்றன.

இந்த நிலையில் பௌசியாபேகம் உடனடியாக இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று தூதரக அதிகாரிகள் அவருக்கு நோட்டீஸ் வழங்கினர்.

ஆனால் தன்னுடைய கணவரையும், குழந்தைகளையும் பிரிந்து செல்ல மாட்டேன் என்று மறுத்துவிட்டார் பௌசியா பேகம்.

அதையடுத்து அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாகப் பேசிய ஹனீப்கான், “கடந்த 2023-ம் ஆண்டு என் மனைவி பௌசியா பேகத்திற்கு எல்.டி.வி விசா (Long Term Visa) கேட்டு, வெளிநாட்டினர் பதிவு அலுவலகத்தில் இதுவரை 8 முறை ஆன்லைனில் விண்ணப்பித்திருக்கிறோம்.

தற்போது விசா பரிசீலனைக்காக இன்று வருமாறு கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் என் மனைவியைத் திடீரென இந்தியாவில் இருந்து வெளியேறச் சொல்கிறார்கள்.

மனைவி பௌசியா பேகத்துடன் ஹனீப்கான்

பௌசியா பேகம் என்னுடைய தாய் மாமன் மகள்தான். என் மாமாவுக்கும், மாமியாருக்கும் சென்னைதான் பூர்வீகம். வேலைக்காகப் பாகிஸ்தான் சென்ற அவர்கள் அங்கேயே தங்கிவிட்டார்கள்.

கடந்த 2012-ல்தான் பௌசியா பேகத்தைத் திருமணம் செய்து கொண்டேன். இப்போது எங்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றனர். அவர்களை விட்டுவிட்டு என் மனைவி மட்டும் எப்படிப் பாகிஸ்தான் செல்ல முடியும் ?

அதனால் என் மனைவிக்கு இந்தியக் குடியுரிமை அளிக்க வேண்டும் என்று மத்திய அரசிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்றார்.

அதேபோல, `இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு என் கணவர், குழந்தைகளைப் பிரிந்து நான் எப்படிச் செல்வது? அதனால் அவர்களுடன் வாழ்வதற்குப் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அய்யாதான் எங்களுக்கு உதவ வேண்டும்” என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *