
சென்னை: “கொடுங்கையூரில் பயோ மைனிங் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் அங்கு குப்பையிலிருந்து எரிவாயு தயாரிக்கும் திட்டமும் கொண்டுவரப்பட உள்ளது” என்று சென்னை மாநகர மேயர் பிரியா கூறியுள்ளார். முன்னதாக, உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் தூய்மைப் பணியாளர்களுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கிய மேயர், அவர்களுடன் அமர்ந்து மதிய உணவருந்தினார்.
சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர் மற்றும் மலேரியா பணியாளர்களின் சேவையை பாராட்டி நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி ரிப்பன் மாளிகை வளாகத்தில் இன்று (மே 1) நடைபெற்றது. இதில் மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா பங்கேற்று, 400 தூய்மை மற்றும் மலேரியா பணியாளர்களுக்கு ரூ.7.41 லட்சத்தில், ஒளிரும் பட்டையுடன் கூடிய தலா 2 சீருடைகள், தொப்பி, கைத்துண்டு, குளியல் துண்டு, டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டில், ஒரு பை உள்ளிட்ட நலதிட்ட உதவிகள் கொண்ட பெட்டகத்தை வழங்கினார்.