
2k கிட்ஸின் பெரும் உழைப்பு followers எண்ணிக்கையை அதிகரிப்பதற்குதான் செலவழிக்கப்படுகிறது. அதில்தான் தங்களின் மதிப்பு இருப்பதாகக் கருதுகின்றனர். followers எண்ணிக்கை கூடும்போது கொண்டாடுவதும், குறையும் போது மன அழுத்துக்குள் செல்வதும் என அவர்களின் மன நிலை பெரும் சிக்கலை சந்திக்கிறது.
மிஷா அகர்வால் எனும் காண்டன்ட் கிரியேட்டர் கடந்த 24-ம் தேதி தற்கொலை செய்துகொண்டார். இது தொடர்பாக அவர்களின் குடும்பத்தார் சமீபத்தில் வெளியிட்ட தகவலில், “மிஷா அகர்வால் கடந்த 24-ம் தேதி உயிரிழந்தார். அந்தத் தகவலை அவரைப் பின்தொடர்பவர்களுக்கு தெரிவிக்கவே இந்தப் பதிவு. ஏன் என்றக் காரணத்தை விளக்கும் மனநிலையில் நாங்கள் இல்லை” எனக் குறிப்பிட்டிருந்தனர்.
அதைத் தொடர்ந்து, மிஷா அகர்வாலின் குடும்ப உறுப்பினர்கள் கூறியதாக வெளியான தகவலில்,“சமீப காலமாகவே அவரின் Followers எண்ணிக்கை குறைந்துவருவது குறித்து அடிக்கடி மனச்சோர்வடைந்திருக்கிறார். தொடர்ந்து பல வீடியோக்களைப் பதிவிட்டு Followers எண்ணிக்கையை அதிகரிக்க முயன்றிருக்கிறார். எந்த முயற்சியும் கைகூடாமல் போகவே அவர் மன உளைச்சலில் தற்கொலை செய்துகொண்டார்” எனக் கூறப்பட்டது.
இந்த நிலையில், நடிகை டாப்ஸி தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “சமூக ஊடகங்களின் கடுமையான அழுத்தங்கள் குறித்த இந்த செய்தி பெரும் துயரத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகத்தின் உங்கள் மதிப்பைவிட நிஜ வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கும் மதிப்பே மிகவும் அவசியமானது என்பதை இனிமேலாவது சிந்திக்க வேண்டும். சமூக ஊடகத்தில் பிரபலமடைய வேண்டும் என்ற தீவிர வெறித்தனத்தைக் கண்டு நீண்ட காலமாக அஞ்சினேன்.
சமூக ஊடகத்தில் இருக்கும் Followers எண்ணிக்கை நேரில் கிடைக்கும் அன்பை விட அதிக மதிப்பளிக்கப்படும் காலம் வரும் என அஞ்சுகிறேன். அதனால் சமூக ஊடகத்தில் உங்களுக்கு கிடைக்கும் அன்பு போன்ற தோற்றத்தால், உண்மையான அன்பை அலட்சியப்படுத்தும் சூழல் உருவாகும். இந்த உடனடி திருப்தி, லைக்ஸ், கமெண்ட் தான் உங்களை மதிப்பு மிக்கவர்களாக மாற்றுகிறது என்பது மிகவும் மனவேதனையளிக்கிறது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.