
எதிர்க்கட்சிகளின் நீண்ட நாள் கோரிக்கையான ‘சாதிவாரி கணக்கெடுப்பிற்கு’ மத்தியில் ஆளும் பாஜக அரசு செவி சாய்த்துவிட்டது.
டெல்லியில் நேற்று நடந்த பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்திற்கு பிறகு, ‘சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும்’ என்று மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்துள்ளார்.
சாதிவாரி கணக்கெடுப்பு குறித்து தெரிந்துகொள்வதற்கு முன்பு, மக்கள்தொகை கணக்கெடுப்பு குறித்து முதலில் தெரிந்துகொள்வோம்.
கடைசியாக, 2011-ம் ஆண்டு இந்தியாவில் மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்கப்பட்டது. அடுத்ததாக 2021-ம் ஆண்டு இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக தள்ளிப்போன மக்கள் தொகை கணக்கெடுப்பு, இதுவரை எடுக்கப்படவே இல்லை.
மக்கள்தொகை கணக்கெடுப்பு எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதால், இப்போது அது எடுக்கப்பட உள்ளது.
மக்கள் தொகை கணக்கெடுப்பு என்றால் என்ன?
மக்கள் தொகை – பெயரிலேயே குறிப்பிடப்பட்டிருப்பதுப்போல, மக்கள் தொகையைக் கணக்கெடுப்பதே இந்தக் கணக்கெடுப்பு ஆகும்.
இந்தக் கணக்கெடுப்பு ஒவ்வொரு பத்து ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.
1872-ம் ஆண்டு முதன்முதலாக தொடங்கப்பட்ட இந்தக் கணக்கெடுப்பு, இதுவரை 15 முறை எடுக்கப்பட்டுள்ளது.
சாதிவாரி கணக்கெடுப்பு என்றால் என்ன?
எத்தனை சாதிகள் உள்ளன?, அதன் பொருளாதார பின்னணி என்ன? அவர்களின் கல்வித்தகுதி எப்படி இருக்கிறது? போன்று சாதி அடிப்படையில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படுவதே சாதிவாரி கணக்கெடுப்பு ஆகும்.
பிரிட்டிஷ் ஆட்சியின் போது, சாதி சம்பந்தப்பட்ட தரவுகள் ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போதும் சேகரிக்கப்பட்டது. ஆனால், சுதந்திரத்திற்கு பிறகு, 1951-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு போதிலிருந்து இந்த நடைமுறையை நிறுத்திவிட்டது மத்திய அரசு.
நான்கு வகைகள்!

பட்டியலின பழங்குடியினர் (ST), பட்டியலின சாதியினர் (SC), பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் பொதுப்பிரிவு என சாதிகளை இந்திய சுதந்திரத்திற்கு பிறகு, இந்திய அரசு வரையறுத்துள்ளது.
1951-ம் ஆண்டிலிருந்து, இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடியினர், இந்து, முஸ்லீம் போன்ற மத அடிப்படையில் மட்டுமே மேற்கொள்ளப்படுகிறது.
இப்போது இருக்கும் சாதிவாரி கணக்கு தரவுகளின் என்ன சிக்கல்?
இப்போது நம்மிடம் இருக்கும் சாதிவாரி தரவுகள் 1931-ம் ஆண்டு எடுக்கப்பட்டது ஆகும். 1941-ம் ஆண்டு, இரண்டாம் உலகப் போரின் போது, சாதி வாரி தரவுகள் எடுக்கப்பட்டாலும், அவை வெளியிடப்படவே இல்லை.
மேலே குறிப்பிடப்பட்டது போல, ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது, பட்டியலின சாதியினர், பட்டியலின பழங்குடியினர், மதம் போன்றவற்றை மட்டும் கணக்கெடுத்திருப்பது பொருளாதார கொள்கைகள், கல்வி கொள்கைகள் போன்றவற்றை அரசு வரையறுக்கும்போது மிகவும் சிரமமாகிவிடுகிறது.

மாநில அரசு சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கக்கூடாதா?
1961-ம் ஆண்டு முதல், மாநில அரசு தங்களுடைய சொந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு, பிற்படுத்தப்பட்ட வகுப்பு வரையறையும் மேற்கொள்ளலாம் என்ற உரிமை கொடுக்கப்பட்டுள்ளது.
எப்போது கணக்கெடுப்பு எடுக்கப்படுகிறது?
அதுக்குறித்த தகவல்கள் இன்னும் வெளியிடப்படவில்லை.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
