மலை காய்கறி உற்பத்தியில் சிறந்து விளங்கும் மலை மாவட்டமான நீலகிரியில் கேரட் பயிர்களை அதிகளவில் சாகுபடி செய்து வருகின்றனர். வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் உயர் வீரிய ரக கேரட் விதைகளையே பெரும்பாலான விவசாயிகள் பயிரிட்டு வருகின்றனர். ஊட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் விளைவிக்கப்படும் கேரட்டை வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கும் அனுப்பி வருகின்றனர். அறுவடை செய்த கேரட்டுகளை சுத்திகரிப்பு இயந்திரங்கள் மூலம் தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர்.

கேரட் உண்ணும் காட்டு மாடு

கடந்த பல வாரங்களாக ஊட்டி கேரட் விலை வீழ்ச்சியடைந்தது வரும் நிலையில், முதல் ரக கேரட்டுகளை மட்டும் தரம் பிரித்து வெளியூர்களுக்கு அனுப்பி வருகின்றனர். டன் கணக்கான சுமார் ரக கேரட்டுகளை ஊட்டி அருகில் உள்ள கேத்தி பாலாடா நீரோடையில் கொட்டி வருகின்றனர். அளவுக்கு அதிகமாக கேரட்டை உண்ணும் காட்டு மாடுகள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன.

இது குறித்து உள்ளூர் மக்கள், ” கேரட் விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட இந்த பகுதியில் கேரட் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அதிகளவில் உள்ளன. சுத்திகரிக்கப்பட்ட கேரட்டுகளை தரம் பிரித்து அனுப்பப்படுகிறது. தற்போது ஒரு கிலோ கேரட் 10 ரூபாய் முதல் 20 ரூபாய் வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகிறது. இதனால், முதல் ரக கேரட்டுகளை மட்டும் விற்பனைக்கு அனுப்பி வருகின்றனர். அடுத்த ரக கேரட்டுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் செலவை விட விற்பனையாகும் விலை குறைவு என்பதால் இழப்பைத் தடுக்க இங்கேயே விட்டுவிடுகின்றனர்.

கேரட் உண்ணும் காட்டு மாடு

டன் கணக்கில் குவியும் கேரட்டுகளை சுத்திகரிப்பு இயந்திர உரிமையாளர்கள் நீரோடையில் கொட்டி வருகின்றனர். இவற்றால் கவரப்பட்டு இந்த பகுதிக்கு வரும் காட்டு மாடுகள் அளவுக்கு அதிகமாக உண்ணும் நிலை ஏற்பட்டிருக்கிறது. இதனால், காட்டு‌ மாடுகள் கடுமையான உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு வருகின்றன. வனத்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *