
தமிழ்நாடு சட்டமன்றத்தில் ‘கட்டாயப்படுத்தி கடன் வசூலித்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும்’ என்ற மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. இந்தப் புதிய சட்ட மசோதாவின்படி, கடன் வாங்கியவா் மற்றும் அவரது குடும்பத்தினரை, கடன் வழங்கிய நிறுவனமோ அல்லது அதன் முகவரோ வலுக்கட்டாய நடவடிக்கைக்கு உட்படுத்தக் கூடாது.
கடன் வாங்கியவா்களின் குடும்பத்தினரை மிரட்டுதல், பின்தொடருதல் போன்ற குற்றங்களைச் செய்தால் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை அல்லது ரூ.5 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டும் சோ்த்தோ விதிக்கப்படும்.” என அந்த மசோதாவில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த நிலையில், சேலம் மாவட்டம் வாழப்பாடியில் வங்கி ஊழியரின் அவமரியாதையை தாங்கிக்கொள்ளமுடியாமல் விவசாயி ஒருவர் தற்கொலை செய்திருக்கிறார்.
இது தொடர்பாக பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் தன் எக்ஸ் பக்கத்தில், “சேலம் மாவட்டம் வாழப்பாடியை அடுத்த துக்கியாம்பாளையத்தைச் சேர்ந்த விவசாயி வடிவேல், தனியார் வங்கியில் பெற்ற கடனுக்கான தவணையை திரும்பச் செலுத்த 20 நாள்கள் தாமதமானதற்காக வங்கி ஊழியர்கள் திட்டியதால், மன உடைந்து நஞ்சு குடித்து தற்கொலை செய்து கொண்டிருப்பது பெரும் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கிறது.

உழவர் வடிவேலுவை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். உழவர் வடிவேல் வேளாண் பணிகளை மேற்கொள்வதற்காக தனியார் வங்கியில் நிலத்தை அடமானம் வைத்து ரூ.4.80 லட்சம் கடன் பெற்றிருக்கிறார். 4 ஆண்டுகளுக்கு முன் பெற்ற இந்த கடனுக்கான தவணையை அவர் சரியாக செலுத்தி வந்த நிலையில், போதிய வருமானம் இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதத்திற்கான தவணையை செலுத்த முடியவில்லை.
அதனால் அவரது வீட்டிற்கு சென்ற வங்கிப் பணியாளர்கள் அவரை மரியாதைக் குறைவாக திட்டியதை தாங்கிக் கொள்ள முடியாமல்தான் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். கடன் தவணையை செலுத்தத் தவறும் அல்லது தாமதிக்கும் உழவர்களை திட்டுவதற்கோ, மிரட்டுவதற்கோ யாருக்கும், எந்த அதிகாரமும் வழங்கப்படவில்லை. கடன் தவணையை செலுத்த ஒருவர் தவறினால், அவருக்கு முறைப்படி அறிவிக்கை அனுப்பி அவரிடம் விளக்கம் பெற வேண்டும்.

அவர் கடனை செலுத்த போதிய காலக்கெடு வழங்க வேண்டும்; அதன்பிறகும் அவர் கடனை செலுத்தவில்லை என்றால் மட்டும் தான் அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ஆனால், ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களை மதிக்காத தனியார் வங்கிகள் கந்துவட்டிக்காரர்களைப் போல நடந்து கொள்வது தான் உழவர்களின் தற்கொலைக்கு காரணம் ஆகும். இத்தகைய செயல்களை அனுமதிக்கக் கூடாது.
உழவர் வடிவேலின் தற்கொலைதான் கடைசி தற்கொலையாக இருக்க வேண்டும். இதற்கு மேலும் எந்த உழவரும் இதுபோல் தற்கொலை செய்துகொள்ளாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் இந்த விவகாரத்தில் தமிழக அரசும், ரிசர்வ் வங்கியும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கடனை திரும்பச் செலுத்தாதவர்களை மிரட்டினாலோ, வலுக்கட்டாயமாக வசூலித்தாலோ 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.5 லட்சம் தண்டம் விதிக்க வகை செய்யும் சட்டம் தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

அதற்கு ஆளுனர் ஒப்புதல் அளித்தாரா, இல்லையா? என்பது இன்னும் தெரியவில்லை. எனினும், புதிய சட்டம் நிறைவேற்றப்பட்ட பிறகு தான் இந்த நிகழ்வு நடந்திருக்கிறது என்பதால் புதிய சட்டத்தின்படி தனியார் வங்கி நிர்வாகம் மற்றும் அதன் ஊழியர்கள் மீது அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பொதுத்துறை வங்கிகளும், கூட்டுறவு வங்கிகளும் உழவர்களுக்கு கடன் வழங்க மறுப்பது தான் இத்தகைய தனியார் வங்கிகளிடம் உழவர்கள் சிக்கிக் கொள்வதற்கு காரணம் ஆகும். எனவே, சிறு, குறு உழவர்களுக்கு தாரளமாக கடன் வழங்க அரசு மற்றும் கூட்டுறவு வங்கிகள் முன்வர வேண்டும் என்றும் வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.