
வாஷிங்டன்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து, இந்தியா – பாகிஸ்தான் இடையே ஏற்பட்டிருக்கும் பதற்றத்தைத் தணிக்கும் நோக்கில் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருடனும், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உடனும் தொலைபேசியில் பேசியதாக அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக அமெரிக்க வெளியுறவுத்துறை நேற்று (ஏப்ரல் 30) வெளியிட்டுள்ள அறிவிப்பில், "அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் ஆகியோருடன் பேசினார். பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அமெரிக்கா இரங்கல் தெரிவித்ததுடன், பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதில் இந்தியாவுக்கு தனது ஆதரவையும் தெரிவித்தது. மேலும், தெற்காசியாவில் பதட்டங்களைத் தணிக்கவும் அமைதி மற்றும் பாதுகாப்பைப் பராமரிக்கவும் பாகிஸ்தானுடன் இணைந்து பணியாற்றுமாறு அமெரிக்கா இந்தியாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.