தமிழக பா.ஜ.க-விலுள்ள ‘படமெடுக்கும்’ தலைவர், என்ன நிகழ்ச்சி நடத்தினாலும், அது சொதப்பிலில்தான் போய் முடிகிறதாம். கடந்தாண்டு நாடாளுமன்றத் தேர்தல் சமயத்தில், சென்னையில் ரோடு ஷோ நடத்தினார் பிரதமர் மோடி. அதற்கான இடத்தை தேர்வுசெய்து கொடுத்த ‘படமெடுக்கும்’ தலைவர், ரோடு ஷோவுக்குச் சரியாக ஆட்களை அழைத்து வராமலும், தவறான இடத்தைத் தேர்வுசெய்தும் ‘ஷோ’வைக் கந்தரகோலமாக்கினார். ஆளும் கட்சிக்கு எதிராக அவர் ஏற்பாடு செய்த போஸ்டர் ஒட்டும் போராட்டமும் அப்படித்தான் சொதப்பியது. இப்படியான அவரின் சொதப்பல் வரிசையில், பிரதமரின் ‘மனதின் குரல்’ நிகழ்ச்சியும் இப்போது சேர்ந்துள்ளதாம்.

அதாவது, கடந்த ஏப்ரல் 27-ம் தேதி பிரதமர் மோடியின் 121-வது மனதின் குரல் நிகழ்ச்சியை, பொதுமக்கள் நேரடியாகக் கேட்பதற்கு ஏதுவாக, திருவல்லிக்கேணி நடுக்குப்பம் அவ்வை சண்முகம் சாலையில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால், ‘முறையாக அனுமதி பெறவில்லை’ எனக் கூறி, அந்த நிகழ்ச்சிக்கு போலீசார் அனுமதி மறுத்துவிட்டனர். நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த ‘படமெடுக்கும்’ தலைவர், போலீஸ் அனுமதியைக்கூட முறையாகப் பெறவில்லையாம். ‘சும்மா எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்தால், எல்லாம் இப்படித்தான் சொதப்பும்…’ என்று கொதிக்கிறார்கள் பா.ஜ.க சீனியர்கள்!

மதுரையில் நீச்சல் பயிற்சி பெறுவதாகச் சொல்லிக்கொண்டு, ராமநாதபுரத்தைச் சேர்ந்த காவலர் ஒருவர் ஆடும் ஆட்டம் கொஞ்ச நஞ்சமல்ல என்கிறார்கள் காவல்துறை வட்டாரத்தில். “அவருக்கு பணியிடம் ராமநாதபுரத்தில்தான். ஆனால், நீச்சல் பயிற்சி பெறுவதாகச் சொல்லிக்கொண்டு மதுரைக்கு வந்துவிட்டார். இங்கேயே நீதிபதி ஒருவரின் வீட்டில் வேலை பார்த்துக்கொண்டு, மதுரையிலுள்ள சில நீச்சல் குளங்களைத் தன்னுடைய கட்டுப்பாட்டில் எடுத்துவிட்டார். லோக்கல் மந்திரி ஒருவரின் சமூகரீதியிலான சப்போர்ட்டும் இருப்பதால், அந்த நீச்சல் குளங்களில் அவர் வைப்பதுதான் ராஜ்ஜியம் என்றாகிவிட்டது. இஷ்டத்திற்குக் கட்டணம் விதிப்பது, பாலியல் ரீதியிலான அத்துமீறல்கள் என எல்லை மீறிப்போய்விட்டன அந்தக் காவலரின் அட்ராசிட்டிகள்” என்கிறார்கள் சக காக்கிகளே. ‘மந்திரியின் பெயரைச் சொல்வதால், நடவடிக்கை எடுக்கத் தயங்குகிறார்கள்’ என்கிறது மதுரை காக்கி வட்டாரம்!

கொங்கு அரசியலில் கோலோச்சிக்கொண்டிருந்தவருக்கு, நீதிமன்றம் செக் வைத்துவிட்டது. ஆனாலும், மனம் தளராமல், அங்கு தீவிர அரசியல் செய்துகொண்டிருக்கிறாராம் மாஜி ஆகிவிட்டவர். அதாவது, தனது பதவியை ராஜினாமா செய்த நாளில்கூட, ‘கணக்கு’ வேலைகளில் படு சின்ஸியராக இருந்தாராம். அவர் பதவியை ராஜினாமா செய்யும் தகவல் கசிந்ததும், ‘அப்பாடா இனி கம்பெனியின் ஆதிக்கம் இருக்காது’ என்று நிம்மதி ஆகியிருக்கிறார்கள் எதிர்கோஷ்டியைச் சேர்ந்த உடன்பிறப்புகள். ஆனால், அவர்களின் ஆசை சிறிது நேரத்துக்கு கூட நீடிக்கவில்லையாம். அடுத்த ஒரு மாதத்துக்கு நடைபெறவுள்ள அரசுப் பணி டெண்டர்களுக்கு, முன்கூட்டியே துண்டு போட்டுவிட்டதாம் கம்பெனி. ‘பதவி போனாலும், கொங்குத் தலைமை அவரின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும்’ என்று மேலிடத்திலிருந்த வந்த தகவலால், கொங்கு ‘எதிர்’ உடன்பிறப்புகள் மீண்டும் கடுப்பாகிவிட்டார்களாம்!

டெல்டா மாவட்டத்திலுள்ள ஓர் அரசு மருத்துவமனையில், சமீபத்தில் பெரும் தீ விபத்து நடந்தது. அப்போது, பணியிலிருந்த தற்காலிகப் பணியாளர்கள் பலரும், தங்களின் உயிரைப் பணயம் வைத்து துரிதமாகச் செயல்பட்டு, வார்டில் இருந்த பெண்கள் மற்றும் பச்சிளம் குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்டனர். மூச்சுத் திணறலில் உடல்நிலை பாதிக்கப்பட்ட 50 பணியார்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தனர். ஆனால், மாவட்ட உச்ச அதிகாரியோ, ‘தீ விபத்தில் யாருக்கும் எந்த பாதிப்பு இல்லை’ எனப் பச்சைப்பொய்யைச் சொல்லியிருக்கிறார்.

‘பணியாளர்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், யாருக்கும் பாதிப்பில்லை என உச்ச அதிகாரி எப்படி சொன்னார். சட்டமன்றக் கூட்டத்தொடர் நடக்கும் நிலையில், இவ்வளவு அஜாக்கிரதையாகப் பேசலாமா..?’ என கேள்வி எழுந்த நிலையில், சிகிச்சையிலிருந்த பணியாளர்களைப் பாதியிலேலே டிஸ்ஜார்ஜ் செய்த அவலமும் நடந்திருக்கிறது. ‘இந்த விஷயம் வெளியே தெரிந்தால், வேலையிலிருந்து தூக்கி விடுவோம்…’ எனவும் மிரட்டி வருகிறதாம் மாவட்ட உச்ச அதிகாரித் தரப்பு!

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அ.தி.மு.க இணைந்த இரண்டாவது நாளிலிருந்தே, எடப்பாடியுடன் தினகரனைச் சந்திக்க வைப்பதற்கு பா.ஜ.க-விலுள்ள சில தலைவர்கள் முயன்று வந்தனர். ‘அவர் வீட்டுக்குத் தேடிப் போய் நான் சந்திப்பது சரியாக இருக்காது…’ என தினகரன் தரப்பில் சொல்லப்பட, ஒரு பொதுவான இடத்தில் தற்செயலாகச் சந்தித்துக்கொண்டதுபோல ‘செட்’ செய்யவும் திட்டமிடப்பட்டதாம். அ.தி.மு.க-விலுள்ள தென்கோடி மாவட்டச் செயலாளரும் அப்படி இருவரையும் சந்திக்க வைப்பதற்கான முயற்சிகளில் இறங்கினாராம்.

ஆனால், எடப்பாடி தரப்பிலிருந்து ‘க்ரீன் சிக்னல்’ வரவில்லையாம். முன்னாள் அமைச்சர்களான வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் போன்றவர்கள், ‘அவராக வீடு தேடி வரட்டும்ணே…’ எனச் சொல்லிவிட, ‘சந்திப்புக்கு இப்ப என்னங்க அவசரம்…’ எனச் சமரசம் பேசிய பா.ஜ.க-வினரிடம் சொல்லிவிட்டாராம் எடப்பாடி. அடுத்ததாக என்ன செய்வதெனப் புரியாமல் தினகரன் தரப்பு கையைப் பிசைந்துகொண்டிருக்கிறதாம்!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *