
“பயங்கரவாத தாக்குதலுக்குப் பின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்கிறது மத்திய அரசு. இதில் பா.ஜ.க-வுக்கு அரசியல் அஜெண்டா இருப்பதாக வீண் பழி சுமத்துகிறீர்களா?”
“காஷ்மீரில் பாதுகாப்பை உறுதி செய்வதும், நாட்டு மக்கள் நிம்மதியாக இருக்கவும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசு விரும்பாததும் மிகுந்த வேதனையளிக்கிறது. இந்தியாவைப் போர் சூழல் நோக்கிக் கொண்டு செல்ல நினைக்கிறார்கள். இஸ்ரேலைப் போல படுகொலைகள் செய்ய வேண்டும் என சமூக வலைதளங்களில் இனப்படுகொலை பிரசாரம் மேற்கொண்டு, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்த ஒத்திகை பார்க்கிறார்கள். மற்றொரு நாட்டுடன் பகை பாராட்டி அரசியல் செய்வதுதான் இவர்களின் வழக்கம். உள்துறை அமைச்சரும், பாதுகாப்புத்துறை அமைச்சரும் பதவி விலக வேண்டும். அவர்கள் அதிகாரத்திலிருக்கும் வரை இந்தியா பாதுகாப்பாக இருக்காது.”
“ஆனால், தி.மு.க-வும் காங்கிரஸும் மத்திய அரசுடன் நிற்கிறோம் என்பதோடு நிறுத்திக் கொள்கிறார்களே!”
“அப்படியில்லை. காங்கிரஸும் தி.மு.க-வும் கவலையுடன்தான் அணுகுகிறார்கள். அமைதி நிலவ மத்திய அரசோடு துணை நிற்கிறோம் என்றுதான் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பங்கேற்ற அண்ணன் திருச்சி சிவா எம்.பி-யின் கருத்து. ஆகையால், தி.மு.க-வின் நிலைப்பாட்டை விமர்சிக்க முடியாது.”

“விஜய்யும், சீமானும் எந்த கூட்டணிக்கு வர மறுக்கிறார்களே… அது குறித்து உங்கள் பார்வை என்ன?”
“விஜய்யின் அரசியல் மந்தமாக இருக்கிறது என்பதைவிட, எந்த திசையில் பயணிக்கிறது என்றே தெரியவில்லை. தி.மு.க-வை எதிர்க்க தம்பி விஜய்க்கு தார்மீகம் இருப்பதை மறுக்கவில்லை, ஆனால் அருவருக்கத்தக்க வகையில் பாசிசம் என்றால் என்னவென்றே தெரியாமல், பாசிசம் பாயாசம் எனப் பேசிக் கொண்டிருக்கிறார். இப்படியே போய்க் கொண்டிருந்தால், தேர்தல் முடிவுகள் மிக மோசமானதாக இருக்கும். சீமான் பொறுத்தவரை அவரது அரசியலை அவரே அழித்துவிட்டார். 8% வாக்குகளெல்லாம் இப்போது குட்டிச் சுவராகிவிட்டது”

“ம.தி.மு.க குறித்து..?”
“அந்த கட்சிக்கு எதிர்காலம் இருப்பதாக நான் கருதவில்லை”