
புதுடெல்லி: நாடு முழுவதும் மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் சேர்த்து நடத்த அரசியல் விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது. கடைசியாக 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதற்கு அடுத்தபடியாக 2021-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான பணிகள் 2020 ஏப்ரல் மாதத்தில் தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், கரோனா பெருந்தொற்று பரவியதையடுத்து, இந்த பணி தள்ளிவைக்கப்பட்டது. அதன் பிறகு மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் மீண்டும் தள்ளிப்போனது. விரைவில் இந்த பணி தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.