
சென்னை: தூத்துக்குடி – பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நின்று செல்ல ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அனுமதி வழங்கியுள்ளார். இதற்கு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நன்றி தெரிவித்துள்ளார்.
இது குறித்து தனது சமூக ஊடக எக்ஸ் தள பக்கத்தில் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள பதிவில், "திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தை தினமும் சுமார் 2 ஆயிரம் பயணிகள் வரை பயன்படுத்தி வருகின்றனர். இங்கு ஆண்டு வருமானம் சுமார் ரூ. 1.5 கோடி என்ற அளவில் இருக்கிறது. இந்த ரயில் நிலையத்தில் மூன்று எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்கின்றன. இதேபோல் தூத்துக்குடி- பாலக்காடு இடையே இயக்கப்படும் பாலருவி எக்ஸ்பிரஸ் ரயிலும் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில் நிறுத்திச் செல்ல வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். இதுதொடர்பாக எனக்கும் அண்மையில் கோரிக்கைகள் வரப்பெற்றன.