
ஐபிஎல் பிளேஆஃப் சுற்றுக்குச் செல்லும் வாய்ப்பில் நீடிப்பதற்கான முக்கியமான போட்டியில் நேற்று டெல்லியை எதிர்கொண்டது கொல்கத்தா.
முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, பவர்பிளேயில் நன்றாக வேகமெடுத்து, பின்னர் மிடில் ஓவர்களில் ஸ்லோடவுன் ஆகி ஒரு வழியாக 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 204 ரன்கள் குவித்தது.
அடுத்து களமிறங்கிய டெல்லி, ஓப்பனிங் தடுமாறினாலும் நடுவில் அக்சர் – டு பிளெஸ்ஸிஸ் 13 ஓவர்கள் வரை ஆட்டத்தைத் தங்கள் பக்கம் வைத்திருந்தது.
அந்த நேரத்தில் கொல்கத்தாவின் ஆன்ஃபீல்டு கேப்டனாக சுனில் நரைன் எடுத்த மாஸ்டர் மூவ்களால் கொல்கத்தா 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இப்போட்டியில் பேட்டிங் (27 ரன்கள்), பவுலிங் (3 விக்கெட்டுகள்), ஃபீல்டிங் (கே.எல். ராகுல் ரன் அவுட்) கேப்டன்சி (வருண் சக்ரவர்த்தி 18-வது ஓவர் கொடுத்தது) என அனைத்திலும் கலக்கிய நரைனுக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கபட்டது.
வெற்றிக்குப் பின்னர் பேசிய கொல்கத்தா கேப்டன் ரஹானே, “13 ஓவர்களுக்குப் பிறகு நரைன் வீசிய இரண்டு ஓவர்கள்தான் ஆட்டத்தின் திருப்புமுனை.
204 ரன்கள் நல்ல ஸ்கோர்தான், ஆனால் என்னைப் பொறுத்தவரையில் 15 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டோம். அனுகுல் ராய், வருண் ஆகியோர் நல்ல சப்போர்ட் கொடுத்தனர். நடுவில் ரஸல் ஒரு நல்ல ஓவர் வீசினார்.
இந்தப் பிட்ச்சில் இடதுகை ஸ்பின்னர்கள் எப்போதும் நன்றாகச் செயல்பட்டிருக்கின்றனர். அனுகுல் ராய் கடினமாக உழைத்து வருகிறார். இந்தப் போட்டியின் நம்பிக்கையைக் கொண்டு தொடர்ந்து முன்னேற வேண்டும்.

நரைன் எங்கள் அணியின் சாம்பியன் பவுலர். நிறைய போட்டிகளில் இதைச் செய்திருக்கிறார். நாங்கள் இக்கட்டான சூழலில் இருக்கும்போது அவரிடம் செல்ல முடியும்.
பயிற்சிக்கு சீக்கிரமாக வந்து மணிக்கணக்கில் பவுலிங் பயிற்சி எடுத்து, பேட்டிங்கிலும் பயிற்சியெடுக்கிறார். நரைனும், வருணும் நாங்கள் பெற்றிருப்பது எங்களுக்கு நல்லது.
ரஸலும் பவுலிங்கில் கடுமையாக உழைக்கிறார். வலைப்பயிற்சியில் நல்ல யார்க்கர்கள் வீசுகிறார். ஒரு அணியாக அவரை நாங்கள் ஆதரிப்போம்.
இந்த சீசனில் எப்போது பந்துவீசினாலும் விக்கெட் எடுத்து அசத்துகிறார்” என்று கூறினார். மேலும், கையில் ஏற்பட்ட காயம் குறித்து, “மோசமாக இல்லை, ஓகேதான்” என்று ரஹானே கூறினார்.
இரண்டாவது இன்னிங்ஸில் 12-வது ஓவரில் கேப்டன் ரஹானே ஃபீல்டிங்கில் காயமடைந்து வெளியேறிய பிறகு, ஆன்பீல்டு கேப்டனாக நரைன் செயல்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.