
2021-ம் ஆண்டு பெகாசஸ் விவகாரம் பெரும் பரபரப்பை கிளப்பியது.
இஸ்ரேலில் இருந்து பெகசாஸ் என்னும் உளவு மென்பொருளை வாங்கியுள்ளது மத்திய பாஜக அரசு. இதன் மூலம் எதிர்க்கட்சித் தலைவர்கள், பத்திரிகையாளர்கள், நீதிபதிகள் உள்ளிட்ட நூற்றுக்கணக்கான முக்கிய நபர்களின் செல்போன்கள் ஒட்டுக்கேட்கப்படுகின்றன என்ற புகார்கள் எழுந்து பூகம்பம் கிளம்பியது.
இதுக்குறித்த வழக்கு நேற்று உச்ச நீதிமன்றத்தின் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை நீதிபதிகள் சூர்யா காந்த் மற்றும் என்.கோடீஸ்வர் சிங் விசாரித்தனர்.
அப்போது, இந்த வழக்கு குறித்து அவர்கள் கூறியதாவது,
“நாட்டின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை குறித்த எந்த அறிக்கையையும் நீதிமன்றம் வெளியிடாது. ஒருவேளை, அது தனிப்பட்ட மனிதர்களின் உரிமையை மீறுவதாக இருந்தால் தான் நீதிமன்றம் தலையிடும்.
உளவு மென்பொருள் அரசிடம் இருந்தால், அவர்கள் அதை பயன்படுத்துவதை யாராலும் தடுக்க முடியாது.
(தேச விரோத சக்திகளுக்கு எதிராக) நாடு உளவு மென்பொருளை பயன்படுத்துவதில் என்ன தவறு? உளவு மென்பொருளை வைத்திருப்பது தவறு அல்ல. அதை யாருக்கு எதிராக பயன்படுத்துகிறார்கள் என்பது தான் கேள்வி.
நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்யவும், தியாகம் செய்யவும் முடியாது. தனிப்பட்ட நபர்களின் தனியுரிமை அரசியல் சாசன சட்டத்தின் கீழ் பாதுகாக்கப்பட்ட்டுள்ளது”.
இந்த வழக்கின் விசாரணை வரும் ஜூலை 30-ம் தேதிக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.