
சென்னை: “மத்திய புலனாய்வுத் துறை, அமலாக்கத் துறை ஆகிய அமைப்புகளை பாஜக கைப்பாவையாக வைத்துக் கொண்டு காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை அரசியல் ரீதியாக முடக்கி விடலாம் என முனைகிற நேரத்தில், டெல்லி நீதிமன்றம் சுரேஷ் கல்மாடி உள்ளிட்டவர்களை நிரபராதிகள் என விடுவித்திருப்பதன் மூலம், மன்மோகன்சிங் ஆட்சி மீது சுமத்தப்பட்ட அவதூறு குற்றச்சாட்டுகள் தவிடு பொடியாக்கப்பட்டிருக்கிறது. இந்த தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக வரவேற்கிறேன்,” என்று அக்கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பாஜக எப்பொழுதுமே காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் மீது ஆதாரமற்ற ஊழல் குற்றச்சாட்டுகளை கூறி வந்தது. அப்படி கூறப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுகளில் ஒன்று தான் 2010-ல் நடைபெற்ற காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் குறித்ததாகும். ஊழல் குற்றச்சாட்டுகளை எழுப்பிய பிறகு, அதுகுறித்து அன்றைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மத்திய புலனாய்வுத்துறை மூலம் விசாரணையை தொடங்கியது.