• April 29, 2025
  • NewsEditor
  • 0

சேலம் மாவட்டம் போடிநாயக்கன்பட்டி மற்றும் அதை சுற்றி பல கிராமங்களில் 50 ஆயிரம் குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

2007 காலகட்டத்தில், இந்த பகுதியில் ரயில்வே பாலத்துக்கு கீழே ஒரு நபர் மட்டும் சென்று வருமாறு பாதை இருந்தது. அதனால், பெரிய வாகனங்கள் உள்ளே செல்ல முடியாத நிலை இருந்தது. அவசர காலத்தில் ஆம்புலன்ஸ் வண்டி இந்த வழியாகச் செல்லமுடியாமல் தவித்தது. எனவே, பாலம் வேண்டி, மக்கள் போராடினார்கள்.

இதனால், 2007 ஆம் ஆண்டு சட்ட சபையில் அன்றைய தமிழக முதல்வர் ஜெயலலிதா இந்த பாலத்திற்காக தீர்மானம் கொண்டுவந்தார். அதன் பின்னர் பத்து வருடம் கழித்து 2017 ஆம் ஆண்டு பாலம் போட்டனர்.

இணைப்பு சாலை இல்லாத பாலம்

இணைப்பு சாலை இல்லாத பாலம்..  

இப்போது பிரச்னை என்னவென்றால், பாலம் கட்டிய பிறகு அதுக்கான இணைப்பு சாலை போடாமல் விட்டுவிட்டார்கள். இந்த தாறுமாறான சாலையை கடக்க வேண்டுமென்றால் ரொம்பநேரம் ஆகிறது.

போடிநாயக்கன்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பல கிராமங்கள் மெயின் ரோட்டிற்கு வரவேண்டும் என்றால் 10 கிலோமீட்டர் சுற்றிக் கொண்டுதான் செல்ல வேண்டும். ஆனால், இந்த ரயில்வே பாலம் வழியாக வந்தால் வெறும் ஐந்து நிமிடங்களில் வந்துவிடலாம்.

இப்பகுதி மக்கள் தங்கள் அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள நகர் பகுதிக்கு அவசியம் சென்றாக வேண்டும். இந்நிலையில், சரியான வழித்தட வசதி இல்லாத காரணத்தால் மக்கள் பல இன்னல்களுக்கு ஆளாகினார்கள்.

இதை சரிசெய்ய, ஊர் மக்கள் ஒன்று திரண்டு அகிம்சை வழியில் உண்ணாவிரத போராட்டம் நடத்தியும், தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் நடத்தியும் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

மழைக்காலத்தில் சேலம் ஜங்ஷனில் இருந்து வரும் கால்வாய் நீர் சாலையை நிரப்பிவிடுகிறது. இதனால் மக்கள் நோய்களையும், விபத்துகளையும் சந்திக்க வேண்டிய அபாயத்தில் உள்ளனர்.

இணைப்பு சாலை இல்லாத பாலம்

ஆம்புலன்ஸ் வரமுடியவில்லை..

சமீபத்தில் பள்ளி மாணவன் ஒருவன் போடிநாயக்கன்பட்டி ஏரியில் தவறி விழுந்து விட்டான். அவனை அந்த சாலை வழியாகவே தூக்கிச் சென்றார்கள் ஆம்புலன்ஸ் வண்டியால் உள்ளே வரமுடியவில்லை. உழவர் சந்தை பக்கம், நின்று விட்டது.

இருசக்கர வாகனத்திலே கொண்டு போய் உழவர்சந்தையில் 30 நிமிடங்களாக காத்து நிற்கும் ஆம்புலன்ஸ் உதவியுடன் சேலம் அரசு மருத்துவமனைக்கு மாணவனை கொண்டு சென்றார்கள். ஆனால் போகும் வழியிலே மாணவன் இறந்து விட்டான் என்று மாணவனை பரிசோதித்த மருத்துவர்கள் கூறினர்.

இணைப்பு சாலை இருந்திருந்தால் விரைவாக ஆம்புலன்ஸ் உள்ளே வந்து சென்றிருக்கும். இணைப்பு சாலை இல்லாமல் போனதே இந்த துயர சம்பவத்துக்கு முக்கிய காரணமாகும் என்கிறார்கள் மக்கள்.

பாலத்தை கட்டிக்கொடுத்த அரசாங்கம் இணைப்பு சாலை எதற்கு என்று கண்டுகொள்ளாமல் இருப்பது மிகவும் கொடுமையானது என்று மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.

இந்த சம்பவம் குறித்து போடிநாயக்கான்பட்டி சமூக ஆர்வலர் வீரக்குமார் கூறுகையில்,

“இந்த பாலம் இருக்குமிடம் ரயில்வேக்கு சொந்தமான இடம் என்பதால் ரயில்வே அதிகாரிகளிடம் பேசினேன். தமிழக அரசிடம் இருந்து பணம் கொடுத்தால், நாங்க பாலத்தை கட்டிதந்த மாதிரி சாலையை போட்டுத்தரோம். என்கிறார்கள். நான் மக்களை திரட்டி நடத்திய போராட்டத்தில் தவம் இருந்து கிடைத்தது தான் இந்த பாலம். இந்த பாலத்துக்கும் சரியான இணைப்பு சாலையை அமைத்து தர வேண்டும். அரசு இதை பொறுப்புடன் முன்னெடுத்து இந்த இணைப்புச் சாலை வசதியை செய்துக்கொடுக்க வேண்டும்.” என்றார்.

மேலும், இந்த பாலத்தை அதிகாரிகள், அரசியல்வாதிகள் தலையிட்டால் இணைப்பு சாலையை போட்டுவிடலாம் ஆனால் வருவாயை எதிர்பார்த்துக் கொண்டு யாரும் இதை முன்னெடுப்பதில்லை என்று கூறினார்கள்.

இணைப்பு சாலை இல்லாத பாலம்

இது குறித்து சூரமங்கலம் நிர்வாக பொறியாளரிடம் பேசினோம். அவர் கூறுகையில், “நானும், உதவி பொறியாளர், கமிஷனர் எல்லோரும் ரயில்வே அதிகாரிகளிடம் பேசினோம். மனு எல்லாம் குடுத்து கேட்டோம். ஆனால், அவர்கள் சாலை போட அனுமதி கொடுக்கவில்லை” என்றார்.

மக்கள் கருத்தை சொல்லி கேட்டபோது, “இலவசமாக செய்து கொடுப்பதற்கு கார்பரேஷன் எப்படி பணம் கொடுக்கமுடியும் மக்களுக்காக தானே செய்கிறோம். இதை அவர்கள் தாராளமாக செய்யலாம் ஆனால் மறுக்கிறார்கள்” என்கிறார் நிர்வாக பொறியாளர்.

சேலம் கமிஷனரிடம் கேட்டோம். “இது குறித்த ஆய்வு மேற்கொண்டு விரைவில் பதில் கூறுகிறேன்” என்று முடித்துக் கொண்டார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *