
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40). இவரும் இவரது சகோதரி மகன் கழுவா என்பவரும் (37) தேனி மாவட்டத்தில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர். இவர்களுக்கு ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன் என்பவர் அறிமுகமாகியுள்ளார்.
அப்போது மோகனிடம் போலி நகைகளை விற்பனை செய்ததாக சொல்லப்படுகிறது. இதனால் இருவரையும் தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு மோகன் அழைத்துள்ளார். பின்னர் முகேஷ் என்பவர் கார் மூலம் இருவரையும் தேனி அருகே உள்ள ஜெயக்குமார் என்பவரின் தோட்டத்திற்கு அழைத்துச் சென்று இருவரையும் போலி நகை குறித்து கேட்டு தாக்கியுள்ளனர்.
இதில் கழுவாவை மட்டும் இங்கிருந்து ஓடிவிடு இல்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்து திலீப்பை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்த திலீப் உறவினர் நிர்மலா (47) தேனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீஸார் வழக்கு பதிவு செய்து, முகேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் மேலும் ஜெயக்குமார், முருகன், ஆகாஷ், முத்துப்பாண்டி, சதீஷ்குமார், சௌமியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் திலிப் மற்றும் கழுவா தங்களிடம் போலி நகைகள் ஏமாற்றி விற்பனை செய்து 2 லட்சம் ரூபாய் பணம் பெற்றதாகவும், இதனால் இருவரையும் அழைத்து சென்று அடித்து விசாரித்ததாகவும் இதில் திலிப் உயிரிழந்துவிட்டதால் வேறு வழியின்றி அருகே உள்ள தோட்டத்திற்கு எடுத்துச் சென்று திலிப்பின் உடலை புதைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
இந்நிலையில் முருகனை அழைத்து வந்து திலீப்பின் உடல் புதைக்கப்பட்ட இடத்தினை அடையாளம் கண்ட பின் பெரியகுளம் தாசில்தார் மருது, தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்தர் முன்னிலையில் ஜேசிபி உதவியுடன் மண் தோண்டப்பட்டு உடல் கண்டெடுக்கபட்டது.

பின் மருத்துவர்கள் பிரதே பரிசோதனை செய்யப்பட்ட பின் திலீ ப் உடல்தான் என கண்டறியப்பட்டது. தொடர்ந்து அவரின் உடலை அவரது உறவினர்கள் கோரிக்கை அடுத்து தேனி மின்மயானத்தில் உடல் எரிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.