
சென்னை: சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ.2.40 கோடி மதிப்பீட்டில் செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் ஆய்வகத்தை சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் திறந்து வைத்தனர். தொடர்ந்து, காது, மூக்கு, தொண்டை பிரிவு முன்னாள் இயக்குநர் பேராசிரியர் மருத்துவர் முத்துக்குமார் இயற்றிய செவி எலும்பு அறுவை சிகிச்சை பயிற்சி திறன் கையேட்டை வெளியிட்டனர். பின்னர், ரூ.14 லட்சம் செலவில் வளரிளம் பருவத்தினருக்கான ஆலோசனை – சிகிச்சை மையம் மற்றும் ரூ.94 லட்சம் செலவில் நீரிழிவு சிகிச்சை சிறப்பு மையத்தை திறந்துவைத்தனர்.
சுகாதாரத் துறை செயலாளர் ப.செந்தில்குமார், தேசிய நலவாழ்வு குழும இயக்குநர் அருண்தம்புராஜ், மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்குநர் சங்குமணி, ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் சாந்தாராமன், துணை முதல்வர் கவிதா, நீரிழிவு நோயியல் துறை இயக்குநர் தர்மராஜன், காது, மூக்கு, தொண்டை நிலைய இயக்குநர் சுரேஷ்குமார், பேராசிரியர் பாரதிமோகன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.