
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில் 4-வது வழித்தடத்தில், பூந்தமல்லி – போரூர் வரையிலான பாதையில் ஓட்டுநர் இல்லாத மெட்ரோ ரயிலின் சோதனை ஓட்டம் நேற்று தொடங்கியது. சென்னையில், இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டம் 116.1 கி.மீ. தொலைவில் 3 வழித்தடங்களில் செயல்படுத்தப்படுகிறது.
இவற்றில், கலங்கரை விளக்கம் – பூந்தமல்லி வரையிலான 4-வது வழித்தடம் (26.1 கி.மீ.) ஒன்றாகும். கலங்கரை விளக்கம் – கோடம்பாக்கம் மேம்பாலம் வரை சுரங்கப்பாதையாகவும், கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் – பூந்தமல்லி பைபாஸ் வரை உயர்மட்டப்பாதையாகவும் அமைகிறது. பல்வேறு இடங்களில் சுரங்கப்பாதை, உயர்மட்டப்பாதை பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன. அதிலும், போரூர் – பூந்தமல்லி பைபாஸ் இடையே பல இடங்களில் பொறியியல் கட்டுமானப்பணிகள் முழுவீச்சில் நடைபெறுகின்றன. இப்பாதையில் உயர்மட்டப்பாதை அமைக்கப்பட்டு விட்டது. அடுத்த கட்டமாக, தண்டவாளம் அமைக்கும் பணி, உயர்மட்ட மின்பாதை பணிகள் வேகமாக நடைபெறுகின்றன. இந்த வழித்தடத்தில் ஒரு பகுதியாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லை தோட்டம் வரையிலான 2.5 கி.மீ தொலைவுக்கு சோதனை ஓட்டம் மார்ச் .20-ம் தேதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது.