• April 29, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: சராசரி நபர் ஒரு நாளைக்கு எவ்வளவு பால் குடிக்கலாம்… குறிப்பாக, பெண்கள் எவ்வளவு பால் குடிக்கலாம்… பால் குடித்தால் வெயிட் அதிகரிக்குமா… சைவ உணவுக்காரர்கள் கால்சியம் தேவைக்கு பாலையே நம்பியிருக்க வேண்டிய நிலையில், அதைத் தவிர்க்க வேண்டும் என்றால் என்ன செய்வது?

சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்.

ஊட்டச்சத்து ஆலோசகர் திவ்யா சத்யராஜ்

பாலில் புரதம், கால்சியம் உண்டு என்றாலும் அதை எல்லோருக்கும் பொதுவாகப் பரிந்துரைக்க முடியாது.  பால் மற்றும் பால் பொருள்கள் எடுத்துக்கொள்வதால் உடல் எடை சற்று அதிகரிக்கும் என்பது உண்மைதான்.

சமீப காலமாக நிறைய பேருக்கு பால் அலர்ஜி ஏற்படுவதைப் பார்க்கிறோம். ‘லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ (Lactose intolerance) எனப்படுகிற இந்தப் பிரச்னை உள்ளோருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

தனக்கு அந்த ஒவ்வாமை இருப்பது தெரியாமல் பால் எடுத்துக்கொண்டால் அவர்களுக்கு பிரச்னைகள்தான் தொடரும். அதேபோல எடைக்குறைப்பு முயற்சியில் உள்ளவர்களுக்கும் பால் வேண்டாம் என்றே நாங்கள் அறிவுறுத்துவோம்.

முகத்தில் பருக்கள் வரும் தன்மை கொண்டவர்களுக்கும் பாலைத் தவிர்க்கச் சொல்வோம்.  பால் எடுத்துக்கொள்வது, சிலருக்கு பருக்களின் தீவிரத்தை அதிகப்படுத்தலாம்.

செரிமான கோளாறுகள் உள்ளவர்களுக்கும் பால் வேண்டாம் என்றே அறிவுறுத்துவோம். ஆனாலும், இந்த அறிவுரை எல்லோருக்குமான பொதுவிஷயமாக அணுகப்படக்கூடாது.

‘லாக்டோஸ் இன்டாலரென்ஸ்’ எனப்படுகிற இந்தப் பிரச்னை உள்ளோருக்கு பால் மற்றும் பால் உணவுகள் ஏற்றுக்கொள்ளாமல் போகும்.

அவரவர் உடல்நிலை, தேவை, உடல்எடை போன்றவற்றைப் பொறுத்து இது மாறலாம். ஆரோக்கியமான ஒரு நபர் ஒரு நாளைக்கு ஒரு டம்ளர் பால், அதாவது 150 மில்லி அளவுக்குக் குடிக்கலாம். அதற்கு மேல் வேண்டாம்.  பாலாக எடுத்துக்கொள்ளாமல் தயிர், மோர் போன்றவற்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

பாலில் மட்டும்தான் கால்சியம் உள்ளது என நினைக்க வேண்டாம். கேழ்வரகு, பசலைக்கீரை என எத்தனையோ உணவுகளில் கால்சியம் மிகுந்து காணப்படுகிறது. ஊட்டச்சத்து ஆலோசகர் அல்லது மருத்துவரைக் கலந்தாலோசித்து அத்தகைய உணவுகளைச் சேர்த்துக்கொண்டாலே கால்சியம் தேவை ஈடுகட்டப்படும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *