• April 29, 2025
  • NewsEditor
  • 0

அம்பேத்கர் ஜெயந்தி கருத்தரங்க கூட்டத்தில் கலந்துகொள்ள மதுரை வந்த ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம் பேசும்போது, “காஷ்மீரில் அப்பாவி சுற்றுலாப் பயணிகள் கொல்லப்பட்டார்கள், தற்போது அச்சம்பவத்தில் ஈடுபட்டவர்களை இந்திய ராணுவம் தேடி வேட்டையாடி வருகிறது, பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க தயாராகி வருகிறது.

ஹெச்.ராஜா

`போர் தொடுக்கக் கூடாது என்கிறார்கள்’

பாகிஸ்தானின் இச்செயலுக்கு உலக நாடுகள் கண்டனத்தை பதிவு செய்து வருகிறார்கள். பாகிஸ்தானின் பாதுகாப்புத்துறை அமைச்சரே 30 ஆண்டுகளாக தீவிரவாதத்திற்கு ஆதரவாக செயல்பட்டு வருவதாக ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார். பிரதமர் மோடி பாகிஸ்தானுக்கு தக்க பாடம் புகட்ட தயராகி வருகிறார்.

நம் நாட்டிற்கு எதிராக பேசுவதை சிலர் கலாசாரமாக கொண்டிருக்கிறார்கள், கர்நாடக முதல்வர் சித்தராமையா, திருமாவளவன், சீமான், கம்யூனிஸ்ட் கட்சியினர் பாகிஸ்தானுக்கு ஆதரவாக, பேசி, போர் தொடுக்கக் கூடாது என்கிறார்கள். இது கண்டிக்கத்தக்கது, மத்திய அரசின் செயல்பாட்டிற்கு எதிராக பேச வேண்டும் என்பதே அவர்களின் நோக்கமாக உள்ளது. சமூக வலைதளத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும் நம் நாட்டுக்கு எதிராகவும் கருத்துக்கள் அதிகம் பகிரப்பட்டு வருகின்றன.

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் பயங்கரவாதிகள் ஒரே நேரத்தில் 5000 ஏவுகணைகளை ஏவி 1,400-க்கும் மேற்பட்டோரை கொன்றனர். இதில் ஈடுபட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானை சேர்ந்தவர்கள். ஆனால் அங்கிருக்கும் மக்கள் அந்நாட்டிற்கு எதிராக எந்த கருத்தையும் முன் வைக்கவில்லை. வெளிநாட்டில் உள்ள தேச விரோதிகளை விட உள்நாட்டு தேச விரோதிகளே அதிகம்.

திருமாவளவன்
திருமாவளவன்

1947 ல் விடுதலை நாளை துக்க நாளாக அனுசரித்தவர்கள் இங்கே உள்ள திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுபவர்கள். அமெரிக்கா பல்வேறு மாகாணங்களை கொண்டிருந்தாலும் சுதந்திரத்திற்கு பிறகு அந்நாட்டுக்கு எதிராக யாரும் பேசுவது கிடையாது. ஆனால், இங்கே தேச விரோத கொள்கைகளை பேசுவதையே வழக்கமாக கொண்டிருக்கிறார்கள், இதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

யுத்தம் வரவேண்டும் என நாங்கள் விரும்பவில்லை, பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்களை கண்காணிப்பில் வைக்க வேண்டும். காஷ்மீரில் நடத்தப்பட்ட தாக்குதலில் மத வெறி உள்ளிருப்பது தெரிகிறது. திருமாவளவனுக்கு நாட்டுப்பற்று கிடையாது, இவர்களைப் போன்றோரை கண்காணிக்காமல் விட்டால் நாட்டிற்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.

சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம், காவிரியில் நீர் கொடுக்காத கர்நாடக துணை முதல்வரை அழைத்து ஆதரிக்கும் இந்த கூட்டம், பாகிஸ்தானுக்கு சிந்து நதியை நிறுத்தி வைத்தது பற்றி விமர்சிக்கிறார்கள்,

முதுகெலும்பு இல்லாத ப.சிதம்பரம்

1975-ல் உச்ச நீதிமன்றத்தால் பதவி நீக்கம் செய்யப்பட்ட இந்திரா காந்தி, அதை ஏற்றுக்கொள்ளாமல் எமர்ஜென்சியை அறிவித்தார். அப்போது முதுகெலும்பு இல்லாத ப.சிதம்பரம், அது பற்றி கேள்வி எழுப்பாமல் இப்பொழுது அரசியல் சாசனம் சிதைக்கப்படுவதாக கூறுகிறார். அரசியல் சட்டத்தின் எந்த பகுதியையாவது பாஜக நீக்கியதா, அரசியல் சட்டத்தை இந்திரா காந்தி சிதைத்தபோது உடனிருந்தவர் தான் இந்த சிதம்பரம்.

இன்னமும் பல விக்கெட்டுகள் விழும்

ஊழல், ஊறல் போதை… இதனால் இப்போது இரண்டு விக்கெட்டுகள் தமிழ்நாடு அமைச்சரவையில் விழுந்திருக்கிறது, இன்னமும் பல விக்கெட்டுகள் விழும், பார்த்து ரசியுங்கள் முதல்வரே, கடந்த வாரம் துரைமுருகனுக்கு எதிரான வழக்கு முடித்து வைக்கப்பட்ட நிலையில் உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. இந்தவாரம் முடித்துவைக்கப்பட்ட ஐ.பெரியசாமிக்கு எதிரான வழக்கில் மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. அடுத்து இந்த விக்கெட்டுக்குள் விழுந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ஹெச்.ராஜா

திராவிட மாடல் அரசு சாதி, மதத்தை தூண்டும் விதமாக செயல்பட்டு வெறுப்பு அரசியலை செய்து வருகிறது. இங்குதான் மதவெறி அதிகம் உள்ளது. தமிழ்நாடு முதல்வர் தடுமாற்றத்துடன் பேசி செயல்படுகிறார்.

நீட் தேர்வு 2010- ஆம் ஆண்டு, நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் கட்சியால் அப்போதைய திமுக அமைச்சர் காந்திச்செல்வனால் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் முதல் நீட் தேர்வு 2013-ஆம் ஆண்டுதான் தொடங்கியது. விடுதலை சிறுத்தைகள், புதிய தமிழகம், பகுஜன் சமாஜ், காங்கிரஸ் என கட்சி தாவும் ஐந்து கட்சி அமாவாசைக்கு இந்த விசயம் குறித்து தெரியாது” என்று காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையை விமர்சித்துப் பேசினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *