• April 28, 2025
  • NewsEditor
  • 0

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள கிழப்பாலையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன். 93 வயதான இவர் கிராமிய கலைகளில் ஒன்றான காத்தவராயன் கதைப்பாட்டு சொல்வதில் சிறந்து விளங்கியவர்.

கோயில் திருவிழாக்களில் தன் குழுவினருடன் காத்தவராயன் கதையை பேச்சு, பாடல், நடிப்பு, நகைச்சுவை என பல பரிமாணங்களில் நடத்தி மக்களை மகிழச் செய்தவர்.

கதைப்பாட்டை பட்டி தொட்டி எங்கும் பரவச் செய்து தனி அடையாளத்தை பெற்று தந்தவர். தன் வாழ்க்கையை கதைப்பாட்டிற்கு அர்ப்பணித்தவர். இவரால் கதைப்பாட்டு கிராமியக் கலை கவனம் பெற்றது. இசை வாத்தியங்கள் இசைக்க இவர் சொல்லும் காத்தவராயன் கதையை கேட்க பெரும் கூட்டம் கூடுவது வழக்கம்.

காத்தவராயன் கதைப்பாட்டு கலைஞர் வெங்கடேசன்

இதே போல் கடந்த 24-ம் தேதி வெங்கடேசன் வீட்டில் மாலையும், கையுமாக பெரும் கூட்டம் கூடியிருக்கிறது. ஆனால் அவர் கூறும் எப்போதும் காத்தவராயன் கதையை கேட்பதற்காக அல்ல. அவர் மறைந்த செய்தி கேட்டு கிராமியக் கலை மூலம் தங்களை மகிழ்வித்த அந்த கலைஞனுக்கு இறுதி அஞ்சலி செலுத்தி வழியனுப்புவதற்காக பல கிராம மக்கள் திரண்டு வந்ததில் வெங்கடேசன் குடும்பத்தினர் நெகிழ்ந்திருக்கின்றனர்.

இது குறித்து வெங்கடேசன் பேரன் பார்த்திபனிடம் பேசினோம், “கிராமியக் கலைகளில் ஒன்றான கதைப்பாட்டு என்கிற கலை மூலம் காத்தவராயன் கதை பாடுவார் எங்க தாத்தா. அதாவது கோயில் திருவிழாக்களில் மேடைகளில் தன் குழுவினருடன் காத்தவராயன் கதை பாடுவார்.

திருவாரூர், நாகை, கடலூர், காரைக்கால் உள்ளிட்ட பல மாவட்டங்களின் கிராமப்பகுதிகளில் எங்க தாத்தா வெங்கடேசனின் கதைப்பாட்டு மிகவும் பிரபலம். திருச்சி வானொலியில் அடிக்கடி கதைப்பாட்டு நிகழ்ச்சி நடத்தியதால் வானொலி புகழ் வெங்கடேசன் எனவும் அழைக்கப்பட்டார். தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி காத்தவராயன் கதை சொல்வதை உயிராக நேசித்தார்.

கதைப்பாட்டு பாடும் வெங்கடேசன்

இக்கலையை தன்னோடு நிறுத்திக் கொள்ளாமல் மற்றவர்களுக்கும் சொல்லிக்கொடுத்து வளர்த்தார். தன் இரண்டு மகன்கள், பேரப்பிள்ளைகள் என தன் குடும்பத்தினரையும் கதைப்பாட்டு நிகழ்ச்சியில் பங்கெடுக்கச் செய்தார்.

யார்கிட்டேயும் முறைப்படி இதை கத்துக்காம கச்சேரி பாத்து பழகியவர் பின்னாளில் அவரே கதைப்பாட்டு கச்சேரி நடத்த ஆரம்பித்ததாக எங்ககிட்ட சொல்வார்.

பல கிராமங்களில் திருவிழாக்களில் ஆர்கெஸ்ட்ரா, ஆடல், பாடல் போன்ற நிகழ்ச்சிகள் இடம் பிடித்த சமயத்தில் கூட தாத்தா காத்தவராயன் கதை பாட்டு நிகழ்ச்சி நடத்திய கிராமங்களில் கதைப்பாட்டு நிகழ்ச்சிக்கு முக்கியத்துவம் தந்தனர்.

காத்தவராயன் பிறப்பு, பார்வதி அம்மனாக மாறுவது என 12 வனங்கள் இந்த காத்தவராயன் கதையில் உள்ளது. ஆரம்பகாலத்தில் தாத்தாவே காத்தராயன் கதையில் வரும் ராஜபாட் உள்ளிட்ட பல வேடங்கள் அணிந்து கதைப்பாட்டு பாடிக்கொண்டே நடிப்பார். வயசான பிறகு தோலில் சுருக்கம் விழுந்ததால் பாட மட்டும் செய்தார். தாத்தாவின் மூத்த மகன் என்னோட அப்பா கலைச்செல்வம் மிருதங்கம் வாசிப்பதுடன் வேடமணிந்து நடிக்கவும் வைத்தார்.

மறைந்த கிராமியக் கலைஞர் வெங்கடேசன்

கிட்டதட்ட வில்லுப்பாட்டு டைப்பில் தான் இந்த கதைப்பாட்டு இருக்கும். ஐந்து பேர் நிகழ்ச்சிக்குச் செல்வோம். அப்பா மிருதங்கம் வாசிக்க, சித்தப்பா கீபோர்டு வாசிக்க தாத்தா காத்தவராயன் கதைப்பாடும் போது மொத்தக் கூட்டமும் கைத்தட்டி ரசிக்கும்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வனம் வீதம் 12 நாள் நிகழ்ச்சி நடத்துவார். சில கிராமங்களில் மூன்று அல்லது இரண்டு நாள்கள் நடத்தச் சொல்வார்கள். அப்போது சில வனங்கள் மட்டுமே பாடுவார். தாத்தவோட காலும், அவர் குரல் ஒலிக்காத ஊரும் இல்லை என சொல்லலாம்.

கிட்டதட்ட 65 ஆண்டுகள் காத்தவராயன் கதைப்பாடியிருக்கிறார். திருச்சி வானொலியில் அடிக்கடி நிகழ்ச்சி நடத்தியது தாத்தாவுக்கு தனி அடையாளத்தை தந்தது. அனைவரும் வானொலி புகழ் வெங்கடேசன் என்றே அழைத்தனர்.

என்கண், மாப்பிள்ளை குப்பம், அரித்துவாரமங்கலம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்களி ஒவ்வொரு ஆண்டும் தொடர்ச்சியாக கதைப்பாட்டு நிகழ்ச்சி நடத்துவது வழக்கம்.

காத்தவராயன் கதைப்பாட்டு

அந்த மக்கள் தாத்தா மீது தனி மரியாதையும் அன்பும் காட்டுவதை பார்த்து நெகிழ்ந்திருக்கிறோம். நானும், என் சித்தப்பா மகனான தம்பியும் தாத்தா குழுவில் இருந்து எல்லாத்தையும் கத்துக்கிட்டோம்.

கிராமியக்கலையான கதைப்பாட்டு செய்வதை தன் உயிராக நேசித்து இக்கலை அழியாமல் காத்து பலருக்கு பரப்பியுள்ளார். கடைசி வரை கச்சேரி நடத்தி வந்த தாத்தா கடந்த 24-ம் தேதி இறந்து விட்டார்.

இதையறிந்த அனைத்து கிராம மக்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர். தாத்தா நிகழ்ச்சி நடத்திய விதமும், நடந்து கொண்டதும் அவருக்கு அளப்பரிய மரியாதை கிடைப்பதற்கு காரணம். மக்கள் தாத்தாவை அங்கீகரித்தது போல் அரசும் அங்கீகரித்து மரியாதை செய்தால் கலைக்காக உழைத்த தாத்தாவுக்கு பெருமை.

காவல் தெய்வமான காத்தவராயன்

அவரை தொடர்ந்து நாங்கள் கதைப்பாட்டு நிகழ்ச்சியில் முழு கவனத்தை செலுத்தி வருகிறோம். தாத்தாவின் பெயரை எடுக்க வேண்டும். இக்கலையை காக்க வேண்டும் இது தான் தாத்தாவுக்கு நாங்கள் செய்கின்ற நன்றிக்கடன். கலைக்காக அவர் மட்டுமல்ல தன் குடும்பத்தையும் அர்ப்பணித்தவர். இரு மகன்கள், இரு பேரன்கள் மூலம் இக்கிராமியக் கலையை மூன்றாவது தலைமுறைக்கு கடத்தியிருக்கிறார். நிச்சயம் நாங்கள் தாத்தா வழியில் காத்தவராயன் கதை பாடுவோம் தாத்தாவின் குரலாக ஒலிப்போம். 65 ஆண்டுகள் கலைக்காக உழைத்த எங்க தாத்தாவின் செயலை அரசு கவனத்தில் கொண்டு மரியாதை செய்தால் அது கலைக்கு செய்கின்ற மரியாதை” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *