
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி கீழ் திசை நாடுகளின் லூர்து நகரம் என்று கொண்டாடப்படுகிறது. தென்னிந்திய அளவில் அதிக மக்கள் இங்கு அமைந்துள்ள கிறிஸ்தவ புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில், வழிபட்டுச் செல்கின்றனர்.
மேலும் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறை நாள்களில் இங்கு வரும் பொதுமக்கள் பேராலயத்தையொட்டி அமைந்துள்ள கடற்கரையை பார்த்து கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்த கடற்கரைக்கு எதிர்ப்புறம் அமைந்துள்ள கலைஞர் பூங்கா இடிபாடுகளுடன் பொதுமக்களும் குழந்தைகளும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து அங்குள்ள ஜோசப் என்ற சுற்றுலா பயணியிடம் விசாரித்தோம், “வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரையாக திண்டிவனத்திலிருந்து நாங்கள் கூட்டமாக வருவோம். வந்து அன்னை மாதாவை பிரார்த்தித்து விட்டு எங்கள் பாவங்களை துடைத்த பிறகு, இந்த கடற்கரையில் கொண்டாடி மகிழ்வோம்.
கடந்த மூன்று வருடங்களாக இங்குள்ள கலைஞர் பூங்கா சரி செய்யப்படாமலே உள்ளது. இந்த கலைஞர் பூங்காவில் குழந்தைகள் விளையாடக்கூடிய விளையாட்டு உபகரணங்கள் மிகவும் மோசமான நிலையில் இருப்பதுடன், கடற்கரை பகுதி சுகாதார சீர்கேட்டுடன் இருந்து வருகிறது.
எதிர் வருவது கோடைகாலம் என்பதால் நிறைய சுற்றுலாப் பயணிகள் இந்த வேளாங்கண்ணிக்கு வர வாய்ப்பு இருக்கிறது. அப்படி வரும் பட்சத்தில் இந்த கலைஞர் பூங்காவை மேலும் மெருகூட்டினாள் அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும்” என்று கூறினார்.







தொடர்ந்து சிறப்பு நிலை பேரூராட்சியின் தலைவர் டயானா செர்லினிடம் இது குறித்து விளக்கம் கேட்டோம் “இந்த கலைஞர் பூங்கா தொடர்பாக பணிகள் தொடர முனைப்பு காட்டி வருகிறோம் கூடிய விரைவில் பூங்கா புனரமைக்கப்படும்” என்று கூறினார்.
கடந்த மூன்று ஆண்டுகாலமாக எந்த ஒரு முன்னேற்றமும் காணாமல் இருக்கும் இந்த கலைஞர் பூங்காவை புனரமைத்து தர வேண்டும் என்பதே பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் ஒரே கோரிக்கையாக உள்ளது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
