• April 28, 2025
  • NewsEditor
  • 0

கடலூர் மாவட்டம், விருதாச்சலத்தை அடுத்த குப்பநத்தம் புதுக்காலனியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் முருகேசன். பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முருகேசனுக்கும், அதே பகுதியில் வசித்த மாற்று சமூகத்தைச் சேர்ந்தவரும், ஊராட்சிமன்றத் தலைவருமான துரைசாமியின் மகள் கண்ணகிக்கும் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் படிக்கும்போது காதல் மலர்ந்தது.

அதையடுத்து கடந்த 05.05.2003 அன்று இருவரும் கடலூர் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணம் செய்துகொண்டு அவரவர் வீட்டில் தனித்தனியாக வசித்து வந்தனர். சிறிது நாள்கள் கழித்து விழுப்புரம் மாவட்டத்திலுள்ள (தற்போது கள்ளக்குறிச்சி மாவட்டம்) தனது உறவினர் வீட்டில் மனைவி கண்ணகியை தங்க வைத்த முருகேசன், ஸ்ரீமுஷ்னம் அடுத்திருக்கும் வண்ணாங்குடிகாட்டிலுள்ள மற்றோர் உறவினர் வீட்டில் தங்கியிருந்தார்.

கண்ணகி – முருகேசன்

கொடூரம்..!

கண்ணகியைக் காணாமல் தேடிய அவரின் உறவினர்களுக்கு, இருவரது காதல் விவகாரம் தெரிய வந்தது. தொடர்ந்து முருகேசனின் சித்தப்பா அய்யாசாமியை அடித்து உதைத்து மூங்கில்துறைப்பட்டில் இருந்து கண்ணகியையும், ஸ்ரீமுஷ்னத்திலிருந்து முருகேசனையும் 2003-ம் ஆண்டு ஜூலை 8-ம் தேதி குப்பநத்தம் கிராமத்துக்கு அழைத்து வந்தனர் கண்ணகியின் உறவினர்கள்.

அன்றைய தினமே இருவரையும் மயானத்திற்கு அருகில் அழைத்துச் சென்று கை, கால்களை கட்டி ஊர்மக்கள் முன்னிலையில் காது மற்றும் மூக்கில் விஷத்தை செலுத்தினர். அன்றைய தினம் அரங்கேறிய அந்த ஆணவப் படுகொலையை அங்கிருந்த ஊர்மக்கள் யாரும் தட்டிக் கேட்கவோ, தடுக்கவோ முன்வரவில்லை. சிறிது நேரத்தில் துடிதுடித்து இறந்த இருவரது சடலத்தையும் தனித்தனியாக எரித்துவிட்டு வீடு திரும்பினார்கள்.

சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட கொலை

இந்தக் கொடூர சம்பவம் குறித்து முருகேசனின் உறவினர்கள் விருதாச்சலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தபோது, அது தற்கொலை என்று கூறி அந்தப் புகாரை ஏற்காமல் திருப்பியனுப்பப்பட்டனர். அதற்கடுத்த சில நாள்களில், ஊடகங்களில் ஆணவப் படுகொலை செய்யப்பட்ட செய்தி வெளியானது. பின்னர் 18 நாள்கள் கழித்து கிராம நிர்வாக அலுவலரிடம் புகாரை வாங்கி, காதல் திருமணத்தால் ஆணவக் கொலை செய்துவிட்டனர் என்று முருகேசன் தரப்பில் நான்கு பேர் மீதும், கண்ணகி தரப்பில் நான்கு பேர் மீதும் வழக்குப் பதிவு செய்தனர் விருதாச்சலம் போலீஸார்.

ஆனால், `சாதி ஆணவத்தில் நடத்தப்பட்ட இந்தக் கொலை வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும்’ என்று மதுரையைச் சேர்ந்த மூத்த வழக்கறிஞர் பொ.ரத்தினம் களமிறங்கியதால் 2004-ம் ஆண்டு சி.பி.ஐக்கு மாற்றப்பட்டது இந்த வழக்கு. வழக்கை விசாரித்த சி.பி.ஐ அதே ஆண்டில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது.

தீர்ப்பு!

அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, விருதாச்சலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்திருந்தது சி.பி.ஐ. கடலூர் மாவட்ட எஸ்.சி., எஸ்.டி சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கின் விசாரணையில் 81 சாட்சிகள் விசாரிக்கப்பட்ட நிலையில், 36 பேர் பிறழ் சாட்சிகளாக மாறிப் போனார்கள்.

தீர்ப்பு & மேல் முறையீடு

இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் தீர்ப்பளித்தது கடலூர் சிறப்பு நீதிமன்றம். அதில் கண்ணகியின் தந்தை துரைசாமி, அவரின் அண்ணன், விருத்தாசலம் காவல் நிலையத்தின் அப்போதைய இன்ஸ்பெக்டர் செல்வமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்ட 13 பேர் குற்றவாளிகள் என்று கூறிய நீதிமன்றம், அதில் 12 பேருக்கு ஆயுள் தண்டனையும், கண்ணகியின் அண்ணன் மருதுபாண்டிக்கு தூக்கு தண்டனையும் வழங்கியது. அதில் இருந்த இரண்டு பட்டியல் சமூகத்தினரை விடுதலை செய்தது.

சுப்ரீம் கோர்ட்

தண்டனை பெற்றவர்கள் அந்த தீர்ப்பை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். அதையடுத்து மருது பாண்டியின் தூக்கு தண்டனை ஆயுள் தண்டனையாக குறைத்த உயர் நீதிமன்றம், கண்ணகியின் தந்தை துரைசாமி, அண்ணன் மருதுபாண்டி, கந்தவேல், ஜோதி, வெங்கடேசன், மணி, தனவேல், அஞ்சாபுலி, ராமதாஸ், இன்ஸ்பெக்டர் செல்லமுத்து, எஸ்.ஐ தமிழ்மாறன் உள்ளிட்டவர்களின் ஆயுள் தண்டனை உறுதி செய்து கடந்த 08.06.2022 அன்று தீர்ப்பளித்தது.

அதையடுத்து இவர்கள் அனைவரும் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருந்தனர். அங்கு நடைபெற்று வந்த விசாரணை முடிவடைந்த நிலையில், இன்று குற்றவாளிகளின் அனைத்து மேல்முறையீட்டு மனுக்களையும் தள்ளுபடி செய்ததுடன், ஆயுள் தண்டனையை உறுதி செய்து உத்தரவிட்டிருக்கிறது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.5 லட்சம் உடனடி நிவாரணமாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டிருக்கிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *