
உலகின் நடத்தப்படும் டி20 கிரிக்கெட் தொடர்களில் அதிகம் பணம் புழங்கும் தொடரென்றால் அது ஐபிஎல் தான். 18 சீசன்களாக நடந்துவரும் ஐபிஎல், உலகின் சிறந்த வீரர்களையும் இந்தியாவின் இளம் திறமையாளர்களையும் உள்ளடக்கியது.
அதிக ரசிகர்களைக் கொண்ட தொடரில் விளையாடும் வாய்ப்பை அளிப்பதுடன், வீரர்களுக்கு அதிக வருவாயும் தரும் தொடராக ஐபிஎல் வளர்ந்துள்ளது. வீரர்கள் வாங்கும் சம்பளத்தை நாம் ஏலத்தின் போதே தெரிந்துகொள்கிறோம். ஆனால் போட்டியில் முக்கியமான பங்களிப்பை செய்யும் நடுவர்களின் சம்பளம் எவ்வளவு எனத் தெரியுமா?
Umpire சம்பளம் எவ்வளவு?
இந்தியா டுடே தளம் கூறுவதன் படி, ஒவ்வொரு போட்டியிலும் களத்தில் நிற்கும் நடுவர்களுக்கு 3 லட்சம் ரூபாய் வழங்கப்படுகிறது. களத்துக்கு வெளியில் இருக்கும் நான்காவது நடுவர்களுக்கு 2 லட்சம் வழங்கப்படும்.
ஐபிஎல் வீரர்கள் ஏலத்தில் கோடிக்கணக்காக சம்பளம் வாங்குவதுடன், அவர்கள் விளையாடும் ஒவ்வொரு போட்டிக்கும் அதற்கான தொகையைப் பெறுகின்றனர்.
சராசரியாக இந்த போட்டிக்கான சம்பளம் ஒரு வீரருக்கு ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் எனக் கூறப்படுகிறது. இதை ஒப்பிடுகையில் நடுவர்களுக்கு நல்ல தொகையே சம்பளமாக வழங்கப்படுகிறது.
இதனால் உண்மையாகவே உலகின் ‘பணக்கார கிரிக்கெட் தொடரில்’ பணியாற்ற அனைவருமே விரும்புவதுண்டு.
உலகம் முழுவதும் பல கோடி கண்கள் பார்த்துக்கொண்டிருக்கும் போட்டியின் ஒவ்வொரு கணத்தையும் உற்று நோக்கி தீர்ப்பளிக்கும் நடுவர்கள் கையாழும் அழுத்தம் நம்மால் புரிந்துகொள்ள முடியாதது.

சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் தீவிரமாக களமாடும்போது, நடுவர்கள் சிறிய தவறில் இருந்துகூட நழுவ முடியாது.
சமீபத்தில் நடந்த MI vs SRH போட்டியில் வைட் பாலில் இஷான் கிஷான் வாக் அவுட் செய்ததால், நடுவர் குழப்பம் அடைந்தார், அந்த நேரத்தில் தீபக் சஹர் அப்பீல் செய்ததால் அவுட் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் நடுவர் சமூக வலைத்தளங்களில் விமர்சிக்கப்பட்டார்.
உள்நாட்டு போட்டிகளில் சம்பளம் எவ்வளவு?
ஐபிஎல் மட்டுமல்லாமல் உள்நாட்டு போட்டிகளிலும் நடுவர்களுக்கு நல்ல சம்பளம் வழங்கப்படுகிறது. ரஞ்சி டிராபி போட்டிகளின்போது, 4 நாட்கள் நீண்ட நேரம் களத்தில் இருக்கும் நடுவர்களுக்கு 30,000-40,000 சம்பளமாக வழங்கப்படுகிறது என லைவ் மிண்ட் தளம் தெரிவிக்கிறது.
மழை வெயில் என எந்த காலநிலையிலும் களத்தில் மணிநேரக்கணிக்கில் புத்திக் கூர்மையுடன் நிற்க வீரர்களைப் போன்றே தனித்த உடற்தகுதி தேவை.
பௌளர்களின் வலிமையான அப்பீல்களுக்கு நோ சொல்ல வேண்டும். வாக் அவுட் செய்யும் பேட்ஸ்மேன்களைத் திருப்ப கூப்பிட வேண்டும். இதுபோன்ற முடிவுகளைக் கூற மன வலிமையையும் வேண்டும்.
நொடிப்பொழுதில் தவறில்லாத முடிவுகளை எடுக்க வேண்டும். பல முடிவுகள் போட்டியின் திருப்பத்தைத் தீர்மானிப்பவை என்பதனால் நடுவர் மீதே அனைவரின் கவனமும் இருக்கும்.
இந்திய கிரிக்கெட்டின் முதுகெலும்பாக இருக்கும் அம்பயர்கள் குறித்து பலரும் கவனம் கொள்வதே இல்லை என்பதுதான் நிதர்சனம். இனி ஒவ்வொரு சிறந்த முடிவுகளின்போதும், டி.ஆர்.எஸ் தேவைப்படாத அவுட்/நாட் அவுட்களின் போதும் களத்தில் இருக்கும் நடுவரை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!