• April 27, 2025
  • NewsEditor
  • 0

திருச்சி நாடாளுமன்றத் தொகுதி பொது மக்களின் பொறுப்பு மிகு பிரதிநிதியாக, திருச்சி இரயில் நிலையத்தை ஆய்வு செய்து பாராட்டினேன்; புதுக்கோட்டை இரயில் நிலையத்தை ஆய்வு செய்து வேதனைப்படுகிறேன் என்று துரை வைகோ எம்.பி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, துரை வைகோ எம்.பி தனது சமூகவலைத்தள பக்கங்களில் வெளியிட்டுள்ள பதிவில்,

“நான் எனது திருச்சி நாடாளுமன்றத் தொகுதியில் முக்கிய நகரமாக விளங்கும் புதுக்கோட்டையில் உள்ள இரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டேன். இந்த ஆய்வின் விவரங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயக்கமாக இருக்கும் அளவுக்கு மிக மோசமான நிலையில் புதுக்கோட்டை இரயில் நிலையம் பராமரிக்கப்படுவதை மிகுந்த வேதனையுடன் பதிவு செய்கிறேன்.

பிரதான நுழைவாயிலின் இருபுறமும் குப்பைக் குவியல்களால் பயணிகள் வரவேற்கப்படுகின்றனர். முக்கிய நுழைவுப் பகுதியிலும், நடைமேடைகளிலும் பல இடங்களில் விளக்குகள் எரியவில்லை,

ஆய்வு செய்யும் துரை வைகோ

சில இடங்களில் விளக்குகளே பொருத்தப்படவில்லை. நான் ஆய்வு செய்த மாலை வேளையில் இரயில் நிலையத்தின் பல இடங்கள் இருளில் மூழ்கியிருந்தது.

நிலைய மேலாளர் (station master) மற்றும் அவரது உதவியாளர் என இருவர் மட்டுமே பணியில் இருந்தனர். இவர்கள் இருவருமே தமிழ், ஆங்கிலம் இரு மொழிகளிலும் பயணிகளின் தேவைகளைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு கூட மொழி புரியாதவர்களாக இருந்தனர்.

மாலை 6 மணிக்குப் பிறகு ஒரே ஒரு டிக்கெட் கவுண்டர் மட்டுமே இயங்குகிறது, அதிலும் மொழி தெரியாத உதவியாளரே பணியில் உள்ளார்.

மிக முக்கியமாக, முதல் நடைமேடையில் குளிரூட்டப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது, ஆனால், அது சுத்திகரிக்கப்படாத உப்பு நீராக உள்ளது.

அடிப்படைத் தேவையான குடிநீரைக்கூட சரியாக வழங்க முடியாத நிலையில் தென்னக இரயில்வே துறை இருப்பது கேள்விக்குரியது.

இரண்டாவது நடைமேடையில் குடிநீர் இணைப்பே இல்லை என்பது எவ்வளவு மோசமான நிலை என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறேன். அடுத்து, கழிவறைகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது.

ஆய்வு செய்யும் துரை வைகோ

ஒரு கழிவறை பூட்டப்பட்டு, அதன் சாவி ஸ்டேஷன் மாஸ்டரிடம் உள்ளது. அதனை திறந்து பார்த்தபோது, அங்கும் எலிகள், பூனைகளின் கழிவுகளால் பாதைகள் மோசமாகக் காணப்பட்டன.

பெண்கள் பகுதியில் தண்ணீர் வரவில்லை என்று சகோதரிகள் புகார் தெரிவித்தனர். இது குறித்து விசாரித்தபோது, ஒரே ஒரு தூய்மைப் பணியாளர் மட்டுமே பணிக்கு வருவதாகவும், அவரும் முறையாகப் பணியாற்றுவது கேள்விக்குறியாக உள்ளதாகவும் உதவியாளர் தெரிவித்தார்.

காத்திருப்பு அறை ஒட்டடைகள் படிந்து, சுவர்களில் நீர் கோர்த்து மோசமாகக் காட்சியளிக்கிறது.

கேண்டீன் வசதி இல்லை. ஒரு கடைகூட இல்லாததால், இந்த இரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் பயணிகள் ஒரு தண்ணீர் பாட்டில் கூட வாங்க முடியாத நிலை உள்ளது.

பின்புறத்தில் தடுப்புச் சுவர் இல்லாததால், புதர்கள் மண்டிக் கிடக்கின்றன. இரவு வேளைகளில் சமூக விரோதிகளின் கூடாரமாக இந்த இரயில் நிலையம் மாறுவதாகப் புகார்கள் உள்ளன.

இது, பயணிகளுக்கு மட்டுமல்ல, அருகிலுள்ள குடியிருப்பு வாசிகளின் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தலாக உள்ளது.

ஆய்வு செய்யும் துரை வைகோ

நான்கு RPF காவலர்கள் பணியில் உள்ளதாகக் கூறப்பட்டாலும், இரண்டு காவலர்கள் மட்டுமே உள்ளனர். ஒரு நேரத்தில் ஒரு காவலர் மட்டுமே பணியில் இருப்பார் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

நான் நுழைந்தபோது ஒரு காவலர்கூட பணியில் இல்லை. சிறிது நேரம் கழித்து வந்த ஒரு காவலர், 12 மணி நேரம் தொடர்ந்து பணியமர்த்தப்படுவதாகத் தெரிவித்தார். இது, உழைப்பு சுரண்டல் மட்டுமல்ல, மனிதாபிமானத்திற்கு எதிரானது என்று பதிவு செய்கிறேன்.

தட்கல் டிக்கெட் திறக்கப்படும் நேரத்தில் மட்டுமே டோக்கன் வழங்கப்படுவதால், முன்பதிவு செய்வதில் சிக்கல்கள் உள்ளன என்று வருத்தத்துடன் தெரிவித்த ஒரு பெரியவர், டோக்கன்களை முன்கூட்டியே வழங்கி, தட்கல் மற்றும் சாதாரண முன்பதிவுக்கு தனித்தனி கவுண்டர்கள் அமைத்தால் இப்பிரச்னை தற்காலிகமாகத் தீரும் என்று தீர்வு கூறினார்.

டிக்கெட் வெண்டிங் மெஷின் பழுதாக உள்ளதையும் சுட்டிக்காட்டினேன். இவை, அனைத்தையும் ஸ்டேஷன் மாஸ்டரிடம் எடுத்துரைத்து, இது குறித்து உயர் அதிகாரிகளிடம் ஏன் புகார் செய்யவில்லை என்று கேட்டபோது, அவர் மௌனமாக இருந்தார்.

தனிமனிதர்களைக் குற்றம் சாட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஆனால், தென்னக இரயில்வே துறையின் மதுரை கோட்டம் ஏன் இவ்வளவு மெத்தனமாக உள்ளது என்று பொதுமக்களின் பிரதிநிதியாகக் கேள்வி எழுப்புகிறேன்.

ஆய்வு செய்யும் துரை வைகோ

இது என் கடமை. வருத்தத்துடன் இரயில் நிலையத்தை விட்டு வெளியேறும்போது ஆட்டோ ஓட்டுநர்களிடம் பேசினேன். ஒவ்வொரு பயணியும் இந்த இரயில் நிலையத்தின் அவலநிலையைக் கண்டு கோபப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். வெளிப்புறத்தில் கட்டப்பட்ட கழிவறை இன்னும் திறக்கப்படவில்லை என்றும் கூறினர்.

இதற்கு உடனடித் தீர்வு காணப்பட்டு, புதுக்கோட்டை இரயில் நிலையம் விரைவில் சிறப்பான நிலைக்குத் திரும்ப வேண்டும். அடுத்த ஆய்வில் நான் பாராட்டும்படியாக இருக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கண்டிப்புடன் வலியுறுத்துகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *