
புதுச்சேரி கருவடிக்குப்பம் சாமிபிள்ளை தோட்டம் பகுதியைச் சேர்ந்த காசிலிங்கத்தின் மகன் உமாசங்கர், பிரபல ரௌடியான இவர் சரித்திரப் பதிவேடு குற்றவாளி. இவர் மீது லாஸ்பேட்டை காவல் நிலையத்தில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, வழிப்பறி, கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்ட வழக்குகளும், தமிழகப் பகுதியான கோட்டக்குப்பம் காவல் நிலையத்தில் பாலியல் குற்றம் தொடர்பான வழக்குகளும் இருக்கின்றன. பா.ஜ.க-வின் முன்னாள் மாநில இளைஞரணி தலைவரான இவர், தற்போது பாஜக எம்.எல்.ஏ ஜான்குமாரின் ஆதரவாளராக செயல்பட்டு வருகிறார்.
தமிழகத்தைச் சேர்ந்த லாட்டரி மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின், 2026 சட்டமன்றத் தேர்தலை குறிவைத்து கடந்த சில மாதங்களாக புதுச்சேரியில் நலத்திட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறார். சார்லஸ் மார்ட்டினின் பிறந்தநாள் விழா கருவடிக்குப்பம் தனியார் திருமண மண்டபம் ஒன்றில் இன்று கொண்டாடப்பட இருந்தது. அதில் சார்லஸ் மார்ட்டின் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் உமாசங்கர் செய்து வந்தார்.
இந்த நிலையில்தான் நேற்று இரவு அந்த தனியார் மண்டபத்தில் நடைபெற்ற முன்னேற்பாடு பணிகளைப் பார்த்துவிட்டு, தன்னுடைய இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பிக் கொண்டிருந்தார் உமாசங்கர். அப்போது ஹெல்மெட் அணிந்துகொண்டு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல், ரௌடி உமாசங்கரை சுற்றி வளைத்தது. ஏதோ பிரச்னை என்று உணர்ந்த உமாசங்கர் அங்கிருந்து தப்பியோட முயற்சித்தார். ஆனால் அந்தக் கும்பல் அவரை சுற்றி வளைத்து அரிவாள்களால் வெட்டத் துவங்கியது. அப்போது அதை தடுக்க முயன்ற அவரது கை துண்டிக்கப்பட்டு தனியாக விழுந்தது.

தொடர்ந்து அவரது தலையையும், முகத்தையும் குறி வைத்து சிதைத்தது அந்தக் கும்பல். அதில் அதே இடத்தில் துடிதுடித்து உயிரிழந்தார் ரௌடி உமாசங்கர். அவர் உயிரிழந்ததை உறுதி செய்த பின், அங்கிருந்து நிதானமாக கிளம்பிச் சென்றது அந்தக் கும்பல். இந்த தகவல் தெரிந்ததும் அங்கு குவிந்த உமாசங்கரின் உறவினர்களும், ஆதரவாளர்களும் குற்றவாளிகளை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி, சடலத்தை எடுக்க விடாமல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதையடுத்து போலீஸார் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அப்புறப்படுத்தி, உமாசங்கரின் சடலத்தை கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து இன்று நடைபெற இருந்த சார்லஸ் மார்ட்டினின் அனைத்து விழாக்களும் ரத்து செய்யப்பட்டிருக்கின்றன.
சில நாள்களுக்கு முன்னர், உமாசங்கர், தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும் தனக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் எனவும் காவல்நிலையத்தில் மனு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.