Doctor Vikatan: என் மகளுக்கு 24 வயதாகிறது. பூப்பெய்தியது முதல் இதுநாள்வரை அவளுக்கு மாதவிடாய் சுழற்சி சரியாகவே வந்துகொண்டிருந்தது. அவளுக்கு இப்போது திருமணம் நிச்சயம் செய்திருக்கிறோம்.
இந்நிலையில் திடீரென மூன்று மாதங்களாக அவளுக்கு பீரியட்ஸ் வரவில்லை. திருமண நேரத்தில் இப்படி ஆனது கவலையாக இருக்கிறது. அவளுக்கு மாத்திரைகள் கொடுத்து பீரியட்ஸை வரவழைக்கலாமா?
பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த மகளிர் மற்றும் மகப்பேறு மருத்துவர் நித்யா ராமச்சந்திரன்.
இயல்பாக வந்துகொண்டிருந்த மாதவிலக்கு, திடீரென வராமல் போவதை ‘செகண்டரி அமெனோரியா’ (Secondary amenorrhea) என்கிறோம். ஒரு பெண்ணுக்கு திடீரென பீரியட்ஸ் வராமல்போகும்போது எழும் முதல் கேள்வி…. அவர் கர்ப்பமாக இருக்கிறாரா என்பது. 17-18 வயது தொடங்கி, 46-47 வயது வரையிலான பெண்களுக்கு இந்தக் கேள்வி எழுவது சகஜம். உங்கள் மகள் விஷயத்தில் இந்தக் கேள்வி தேவையற்றது என்று எடுத்துக்கொள்வோம்.
25 முதல் 45 வயதுப் பெண்களுக்கு திடீரென ஏற்படும் எடை அதிகரிப்பு, முகத்தில், கை, கால்களில் அதிக ரோம வளர்ச்சி, முகத்தில் அதிக பருக்கள் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் சினைப்பைகளை ஸ்கேன் செய்து நீர்க்கட்டிகள் இருக்கின்றனவா என தெரிந்துகொள்ள வேண்டும்.
சினைப்பை நீர்க்கட்டிகள் உள்ள பெண்களுக்கு 3 அல்லது 6 மாதங்களுக்கொரு முறைதான் மாதவிடாய் வரும்.
பீரியட்ஸை வரவழைக்க சுயமாக மருந்துகள் எடுத்துக்கொள்வதைப் போன்ற ஆபத்து வேறில்லை. பல வருடங்களுக்கு முன்பு மருத்துவர் பரிந்துரைத்த மாத்திரையை மீண்டும் எடுப்பது, வீட்டில் அக்காவோ, அம்மாவோ, தோழிகளோதான் எடுத்துக்கொண்டதாகச் சொல்லும் அதே மாத்திரையை மருந்துக் கடைகளில் வாங்கிப் பயன்படுத்துவது போன்ற தவறுகளை சர்வசாதாரணமாக பெரும்பாலான பெண்கள் செய்கிறார்கள்.

பீரியட்ஸை வரவழைக்கிற மாத்திரைகள், ஹார்மோன்கள் உள்ளவை. இவற்றை மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுக்கக்கூடாது.
முன்பு அதே மாத்திரைகளை எடுத்துக்கொண்டபோது உங்களுக்கு நீரிழிவோ, ரத்த அழுத்தமோ இல்லாமல் இருந்திருக்கலாம். இப்போது அவை உள்ளிட்ட வேறு உடல்நல பாதிப்புகள் வந்திருக்கலாம். எனவே, அது தெரியாமல் பழைய மருந்துச்சீட்டில் உள்ள மாத்திரைகளை எடுப்பது பேராபத்தை ஏற்படுத்தலாம் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
மாதவிலக்கு சுழற்சியை பாதிப்பதில் ஸ்ட்ரெஸ்ஸுக்கு மிக முக்கிய பங்கு உண்டு. உங்கள் மகளுக்குத் திருமணம் நிச்சயம் செய்திருப்பதாகச் சொல்கிறீர்கள். அது குறித்த பதற்றம், பயம், ஸ்ட்ரெஸ் நிச்சயம் அவருக்குள் இருக்கலாம்.
அதன் காரணமாகவும் பீரியட்ஸ் சுழற்சியில் மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். எனவே, நீங்களாக எந்த மாத்திரைகளையும் வாங்கித் தராமல் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவதுதான் சரியானது.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.