
அமைச்சர் பதவியில் செந்தில் பாலாஜி நீடித்திருப்பது தொடர்பான வழக்கு, உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ள நிலையில், பேரவையில் நேற்று அவருக்கு பதிலாக மசோதாவை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அமைச்சர் பதவியில் இருந்து விலகுவதற்கான ராஜினாமா கடிதத்தை செந்தில் பாலாஜி கொடுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், பல்வேறு மசோதாக்களை தாக்கல் செய்ய அனுமதி அளிக்கப்பட்டது. அதன்படி, தமிழகத்தில் உயிரி மருத்துவ கழிவுகளை கொட்டினால் விசாரணை இல்லாமல் சிறை தண்டனை விதிக்கும் மசோதா தாக்கல் செய்யப்பட்டது. இந்த மசோதாவை மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிமுகம் செய்ய இருப்பதாக பேரவை நிகழ்வுகள் பட்டியலில் கூறப்பட்டிருந்தது. ஆனால், திடீரென அதில் மாற்றம் செய்யப்பட்டு, மசோதாவை சட்டத் துறை அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார். பேரவையில் செந்தில் பாலாஜி இருந்தும்கூட, மசோதாவை அவர் தாக்கல் செய்யாததால், சலசலப்பு ஏற்பட்டது.