• April 27, 2025
  • NewsEditor
  • 0

ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளைக் கொண்டாடும் நம் விகடனின் 2024-ம் ஆண்டுக்கான ஆனந்த விகடன் `நம்பிக்கை விருதுகள்’ விழா, இன்று (ஏப்ரல் 26) மாலை சென்னை கலைவாணர் அரங்கில் தொடங்கியது.

தனது 23 வயதில், தந்தையின் இறப்பால் கிடைத்த ரயில்வே கலாசி வேலையையும், வீட்டையும் தான் சந்தித்த அவமானங்களால் உதறித்தள்ளிவிட்டு, கல்வி எனும் ஆயுதத்தால் அடுத்தடுத்து தேர்வுகள் எழுதி, திருநங்கை என்ற தனது சொந்த அடையாளத்துடன் இன்று அதே ரயில்வே துறையில் தென்னக ரயில்வேயின் முதல் திருநங்கை டிக்கெட் பரிசோதராகி, பாலினம் எதற்கும் தடையில்லை, கல்வி ஒன்றே மாற்றத்துக்கான வழி என்று நம்பிக்கையளிக்கும் சிந்து கணபதிக்கு தடையுடைத்த திருநங்கை எனும் `டாப் 10 இளைஞர்கள்’ விருது வழங்கி கவுரவித்திருக்கிறது ஆனந்த விகடன்.

`ஜோக்கர்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் தனித்துவ இயக்குநராகப் பயணத்தைத் தொடங்கி ‘குக்கூ’, ‘ஜிப்ஸி’ என வீறுநடைப் போட்டுக்கொண்டிருக்கும் இயக்குநர் ராஜூமுருகன் கைகளால் விருதைப் பெற்றுக்கொண்டார்.

விருது பெற்றபின் பேசிய சிந்து கணபதி, “தடைகள் நிறைய இருக்கு எங்கள் வாழ்வில். ‘திட்டுவார்கள், முரட்டுத் தனமானவர்கள்’ என திருநங்கைகள் பற்றிய பார்வை சமூகத்தில் தவறாக இருக்கிறது. ரயில்வேயில் திருநங்கைகளுக்கு இடம்கூட தரமாட்டார்கள். பாத்ரூம் பக்கத்தில் உட்கார்ந்து வந்திருக்கிறோம். இன்று அதே ரயிலில் டிக்கெட் பரிசோதனை அதிகாரியாக இருக்கிறேன்.

கல்வி ஒன்றுதான் என்றும் வெற்றிக்கு முக்கியமானது. அதை திருநங்கைகள் ஒருபோதும் விட்டுவிடக்கூடாது. திருநங்கள் முன்னேற முதலில் பெற்றோர்கள் அவர்களை அங்கீகரிக்க வேண்டும். பிறகு கல்வி வேண்டும். இது இரண்டும் இருந்தால் திருநங்கைகள் முன்னேறிவிடலாம்.” என்று பேசினார்.

நம்பிக்கை விருதளித்திருக்கும் விகடனுக்கு நன்றி!

விருதினை வழங்கிய இயக்குநர் ராஜு முருகன், “இவரைப் பற்றி படிக்கும்போது வியப்பாக இருந்தது. தங்களைப் பெற்றோர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் அவர் கூறுகிறார். இவர்கள் முதலில் போராடுவது வீட்டில். அடுத்து வீதியில், அடுத்த சமூகத்தில். இவற்றைக் கடந்து அடுத்து ஒரு பெரும் விபத்திலிருந்து மீண்டு வந்திருக்கும் இவருக்கு நம்பிக்கை விருதளித்திருக்கும் விகடனுக்கு நன்றி.” என்று பேசியிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *