• April 26, 2025
  • NewsEditor
  • 0

வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல – ஆசிரியர்

“உங்கம்மா இறந்து ஒரு வருஷமாகப் போகுது… அடுத்த ஆனி மாசத்துலே ஆண்டு திதி வருது.”

“ஆமாம்… அதுக்குத்தான் நேரமிருக்கே… பார்த்துக்கலாம்” என்றேன்.

“அதோடு இதையும் செய்யலாம்னு தோணுது” என்றார் மனைவி.

“எதை?”

“நாம முன்னாடி குடியிருந்த வீட்டின் எதிர்வீட்டில் இருந்தாங்களே கலா… அவங்க போன் செய்தாங்க. டூர் பேக்கேஜ் குரூப்புல காசிக்குப் போறாங்களாம். நீங்களும் வாங்களேன்னாங்க. உங்ககிட்டே கேட்டுச் சொல்றதா சொல்லியிருக்கேன். அதுலே முக்கியமான விஷயம் ஆடி அமாவாசையிலே கயாவில் சிறப்பு தர்ப்பணம் கொடுக்கறதும் இருக்காம். உங்க அம்மா, அப்பாவோட சேர்த்து எங்க அம்மா, அப்பாவுக்கும் திதி கொடுத்துடலாம்னு நினைக்கிறேன். அந்தச் சொல்கிறீங்க?” என்றார்.

Gaya, Bihar, India

வடநாட்டில் பயணம் செய்யும்போது மொழி பிரச்னை, உணவு பிரச்னை, போக்குவரத்து பிரச்னைகளுடன் தங்கும் இடமும் பிரதான பிரச்னையாக இருக்கும் நிலையில் டூர் பேக்கேஜில் இந்த பிரச்னைகள் இருக்காது என்கிற நம்பிக்கையில் “சரின்னு சொல்லிடு…” என்றேன்.

ஓய்வான நேரத்தில் கயாவைப் பற்றியும் தர்ப்பணம் பற்றியும் கூகுளில் தேட ஆரம்பித்தேன்.

முன்னோர் வழிபாடு, தர்ப்பணம், பிண்ட தானம் வழிபடுவதற்கு புகழ்பெற்ற தலம் கயா. அங்கு ஒருவருக்கு தர்ப்பணம் கொடுத்தால் வேறு எங்கும், எப்போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டியதே இல்லை.

ராமாயணத்தில் நிரஞ்சனா எனக் குறிப்பிடப்படும் பால்கு ஆற்றங்கரையில் அமைந்துள்ள இந்த நகரம், இந்துக்களுக்கும் பௌத்த சமயத்தினருக்கும் முக்கியமான புண்ணியத்தலமாக விளங்குகிறது.

பால்கு ஆற்றங்கரையில் விஷ்ணு பாதம் கோயில் உள்ளது. இதன் மூன்று பக்கங்களிலும் சிறு குன்றுகள் சூழ்ந்திருக்க நான்காவது தென்புறத்தில் ஆறு ஓடுகிறது. இயற்கை சூழல் மிக்க இடங்களும் பழைமையான கட்டடங்களும் குறுகலான சந்துகளுமாக நகரம் கலவையாக உள்ளது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

நான் இன்டர்நெட்டில் தேடிக்கொண்டிருக்கும்போதே கயா தொடர்பான டிராவல் விளம்பரங்கள் என்னுடைய ஃபேஸ்புக்கிலும் இ-மெயில் முகவரியிலும் குவிந்தன.

அனைத்தையும் தவிர்த்துவிட்டு, பயண ஏற்பாட்டாளரிடம் முன்பணம் அனுப்புவதற்கு முன் சில விவரங்கள் கேட்டேன். “கயாவுக்குப் போவதற்கு முன்பாக அலகாபாத், காசி போகிறோம். கடைசியாக ஆடி அமாவாசை அன்று காலை கயாவில் இருப்போம்” என்றார்கள்.

புறப்படுவதற்கான தேதியையும் நேரத்தையும் சொன்னார்கள். சொன்ன தேதி அன்று புறப்பட்டு விட்டோம். சென்னையில் இருந்து 1,760 கிலோமீட்டர் பிரயாக்ராஜ். அங்கிருக்கும் திரிவேணி சங்கமத்தில் குளியல், தொடர்ந்து காசி.

காசியில் விஸ்வநாதர் தரிசனம், கங்கா ஆரத்தி என்று ஒவ்வொன்றாக முடித்து கயாவில் இருக்கும் நாளுக்கு முதல் நாளே பயணத்துக்குத் தயாராகிவிட்டோம். காசியில் இருந்து 250 கிலோமீட்டர் பீகார் மாநிலத்தில் பயணித்து கயாவை அடைந்தபோது பெரிய பெரிய புத்தர் சிலைகள் வைத்த நிறைய ஹோட்டல்களைக் காண முடிந்தது. நாங்கள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்ட ஹோட்டலில் இலங்கையைச் சேர்ந்த பலரை பார்க்க முடிந்தது.

விடிந்ததும் ஆடி அமா

வாசை. என் மனைவி டிராவல் பேக்கில் இருந்த ஒரு லிஸ்ட்டை எடுத்து தன் ஹேண்ட் பேக்கில் பத்திரப்படுத்தினார். என்னவென்று கேட்டேன். “திதி கொடுக்கும்போது நம்மோட முன்னோர் பெயரையெல்லாம் கேட்பாங்களாம். மறந்துக்கூடாதுன்னு எழுதி எடுத்துக்கிட்டேன்” என்றார். புறப்பட்டோம்.

விஷ்ணு பாதம் கோயிலில்தான் ஆடி அமாவாசை சிறப்பு தர்ப்பணம் ஏற்பாடாகி இருந்தது. கயா சூரன் எனும் அசுரனை, விஷ்ணு தன் காலால் பாதாளத்தில் அமிழ்த்தியதால், உண்டான வடுவை இத்தலத்தில் விஷ்ணு பாதம் என்று அழைக்கின்றனர்.

எண்கோண வடிவில் அமைந்த இந்தக் கோயிலின் நடுவே கருங்கல்லில் 40 செமீ நீளத்துக்கு விஷ்ணுவின் பாதம் பொதிந்துள்ளது என்கிறார்கள். அதன் அருகில் இருந்த அர்ச்சகரிடம் ஐம்பது ரூபாயைக் கொடுத்தால் பாலை ஊற்றி பாதத்தைக் காண்பிக்கிறார். அதன் நடுவில் இருந்த பூவை எடுத்துத் தருகிறார்.

பிராகாரத்தைச் சுற்றுவிட்டு வந்தால் கோயிலைச் சுற்றி மஞ்சள் வர்ணத்தில் மடங்கள் போன்ற அமைப்பு. அதற்குள்ளே இரண்டு பக்கமும் வரிசையாக ஆட்கள் அமர்ந்திருக்க… அவர்களுக்கு இடையில் ஒரு புரோகிதர் பாடம் எடுப்பதுபோல்  பேசிக்கொண்டிருந்தார்.

எங்களுக்கும் அப்படியான ஓர் அமைப்பு காத்துக்கொண்டிருந்தது. “வாங்கோ… வாங்கோ” என்று தமிழிலேயே வரவேற்றார். “கணவன் – மனைவியாயிருந்தா ஜோடியா உட்கார்ந்துக்கோங்க… தனியாளா வந்தவங்க. இந்தப் பக்கம் உட்கார்ந்துக்கோங்க” என்றார்.

எல்லாரும் அமர்வதற்கு முன்பே… “என்ன ஆரம்பிச்சுடலாமா?” என்றார். நான் ஏதோ கேட்க வாயெடுக்க… என் மனைவி, “நீங்க எதுவும் கேட்க வேண்டாம். அவங்க சொல்றதை கேளுங்க” என்றார். அவர் காட்டிய இடத்தில் அமர்ந்து கொண்டேன். நாங்கள் மொத்தம் 21 பேர். ஓர் இலையில் ஏற்கெனவே தயாராக வைத்திருந்த சில பொருட்கள் இருந்தன.  அவற்றை பிசைந்து 21 உருண்டைகளாக்கச் சொன்னார். அவற்றை தொட்டு கும்பிட சொன்னார். பிறகு, தான் சொன்ன வார்த்தைகளைத் திரும்ப சொல்ல சொன்னார். 

பாதி புரிந்தது… மீதி புரியவில்லை. சொன்னோம். சில நிமிஷங்களில் மந்திரம் சொல்வதை நிறுத்திவிட்டு, “இங்கே தர்ப்பணம் கொடுப்பது ரொம்ப விசேஷம். அதுவும் ஆடி மாச அமாவாசையில் தர்ப்பணம் கொடுப்பது ரொம்ப ரொம்ப விசேஷம். உங்க மூதாதையர் பெயரையெல்லாம் சொல்லிக்கோங்க… மனுஷா மட்டுமில்லா… நீங்க செல்லமா வளர்த்த நாய், பூனை எல்லாத்தையும் நினைச்சுக்கலாம்” என்றார்.

என் மனைவி ஹேண்ட் பேக்கில் இருந்த பட்டியலை எடுத்தாள். படிக்க ஆரம்பித்தாள். ஒரு குறிப்பிட்ட இடைவெளிக்குப் பிறகு வரிசைக்கு இடையில் நின்றிருந்தவர்… “எல்லாரும் நினைச்சுக்கிட்டீங்களா…” என்று கேட்டபோது… எங்களுக்கு அருகில் இருந்த தம்பதி, “கொஞ்சம் இருங்க… இன்னும் இருக்கு” என்று பட்டியலைத் தொடர்ந்தார்கள்.

பொறுத்திருந்து பார்த்தவர்… “உங்க மூதாதையரை நினைச்சு முடிச்சவங்க… இலையிலே இருக்கற பிண்டத்தை எடுத்துட்டு என்னோட வாங்க” என்றார். எடுத்துக்கொண்டோம். ஒரு மரத்தின் அடியில் அதை வைக்க சொன்னார். தண்ணீர் தெளித்தார் “வெச்சு முடிஞ்சவங்க… உங்க இடத்துக்குப் போலாம்” என்றார்.

எங்களுக்கான இடத்தில் வந்து அமர்ந்து கொண்டோம். “இங்கே வந்து திதி கொடுத்த பிறகு நீங்க சாப்பிடற காய், பழம், இலைகள்ல ஏதாவது ஒன்றை இனிமே பயன்படுத்தக்கூடாது” என்று அவர் சொல்லி முடிக்கும் முன்பே என் மனைவி, அவருக்குச் சமைக்க தெரியாத கொத்தவரங்காய், அவருக்குப் பிடிக்காத ஆரஞ்சு பழம், இதுவரை பார்த்தே அறியாத அரச இலையை… நானும் சேர்த்துப் பயன்படுத்த மாட்டோம் என்று உறுதியளித்தார்.

எல்லாம் முடிந்ததும் எங்களுக்காக, எங்கள் மூதாதையர்களுடன் தொடர்பு கொண்டவர் தட்சணை கேட்டார். நூறு, இருநூறு ஒதுக்கப்பட்டது. ஐந்நூறு மட்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்டது. அவர் தலையில் தூவிய அட்சதையை ஏற்றுக் கொண்டு வெளியே வந்தோம்.

வரிசையாக லஸ்ஸி கடைகள். லஸ்ஸிக்கு ஆர்டர் கொடுத்து அமர்ந்தபோது, “நாம இங்க வந்து இதையெல்லாம் செய்தது பெரிய புண்ணியங்க” என்றார் என் மனைவி. அவர் முகத்தில் முழு திருப்தி. செலவழித்த பணத்தை மீறி கயா ஆடி அமாவாசை சிறப்பு தர்ப்பணத்தில் என்னுடைய மூதாதையர்கள் என் மனைவியின் முகத்தில் தெரிந்தார்கள்.

My Vikatan-க்கு உங்களது `சுற்றுலா’ கட்டுரை

டூர்

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.

இந்த மாதத்திற்கான தலைப்பு – `சுற்றுலா’. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.

வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.   

பரிசுத்தொகை விவரம்:

  • முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)

  • இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)

  • நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)

நினைவில் கொள்க: 

  • நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025

  • ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.

  • உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்

  • விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்

  • உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது. 

  • கட்டுரையின் தரத்தின்  அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்…

உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க – my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

my vikatan

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்… நடந்துகொண்டிருக்கலாம்… நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *