
சட்டவிரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமைச்சர் செந்தில் பாலாஜி மீது, அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. அமைச்சர் செந்தில்பாலாஜி 2023-ம் ஆண்டு ஜூன் 14-ல் கைது செய்யப்பட்டார். அவருக்கு எதிராக, 2023-ம் ஆண்டு ஆகஸ்ட்டில், அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. வழக்கு விசாரணை, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. பின்னர் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
செந்தில் பாலாஜி மீதான விசாரணை நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில், அவரை மீண்டும் அமைச்சராக்கியிருப்பதன் மூலம், விசாரணையில் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தக் கூடும் என்றும், எனவே ஜாமீனை ரத்து செய்ய வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் வித்யா குமார் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். அமலாக்கத்துறையும் இதே கருத்தை மனுவாக தாக்கல் செய்திருந்தது. மேலும் தற்போது செந்தில் பாலாஜி அமைச்சர் ஆகி இருப்பதன் காரணமாக சாட்சி சொன்னவர்கள் கூட ஆஜராகவில்லை என்ற வாதத்தையும் பதிவு செய்தது.
இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள், “பதவியா, சுதந்திரமா (ஜாமீன்) என்பதை நீங்கள்தான் செய்ய வேண்டும். நீங்கள் என்ன தேர்வு செய்ய விரும்புகிறீர்கள்? வரும் திங்கள்கிழமை மதியத்திற்குள் செந்தில் பாலாஜி உச்ச நீதிமன்றத்தில் தான் அமைச்சராக தொடர விரும்புகிறாரா அல்லது ஜாமீன் வேண்டுமா என்பது குறித்து பதிலை தெரிவிக்க வேண்டும்” என உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், இன்று சட்டமன்றக் கூட்டத்தொடர் தொடங்கியது. இந்தக் கூட்டத்தொடரில் வரும் 29-ம் தேதி விவாதத்துக்கு வரவிருக்கும் உயரி மருத்துவ கழிவு தொடர்பான மசோதாவை செந்தில் பாலாஜி தாக்கல் செய்திருக்க வேண்டும். ஆனால் அவருக்கு பதிலாக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சட்டமன்றத்தில் அந்த மசோதாவை தாக்கல் செய்திருக்கிறார். இதன் அடிப்படையில், செந்தில் பாலாஜி விரைவில் ராஜினாமா செய்வாரோ என்ற கருத்து நிலவுகிறது.!