• April 26, 2025
  • NewsEditor
  • 0

மதுரையில் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகள் பராமரிப்பின்றி இருப்பதாக வருத்தப்பட்டும், திருச்சிக்கு வழங்குவதுபோல் மதுரைக்கும் கவுன்சிலருக்கான நிதியை உயர்த்தித்தர வேண்டுமென்றும் மேயர் இந்திராணி பேசியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாநகராட்சி

புகார்களுக்கும் சர்ச்சைகளுக்கும் பஞ்சமில்லாத மதுரை மாநகராட்சியின் 2025-26 நிதியாண்டுக்கான வரவு செலவு அறிக்கை தொடர்பான மாமன்றக் கூட்டம் கடந்த 24-ஆம் தேதி மேயர் இந்திராணி, ஆணையாளர் சித்ராவிஜயன் தலைமையில் நடைபெற்றது.

இதுவரைக் காணாத வகையில் இந்தக் கூட்டத்தில் மேயரும், கவுன்சிலர்களும் மாநகரின், மக்களின் பிரச்னைகளை வெளிப்படையாப் பேசியதும், திமுக மண்டலத் தலைவர்கள் ஏகப்பட்ட குற்றச்சாட்டுகளை வைத்ததும், திடீரென்று எதிர்க்கட்சித் தலைவர் முதல்வருக்கு நன்றி தெரிவித்து பேசியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கூட்டத்தில் நடந்த சுவாரசிய சம்பவங்கள்..

குடிநீர் இணைப்பு, பாதாள சாக்கடை டெபாசிட், சாலை சீரமைப்பு என கட்டணத்தை உயர்த்தி நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை அதிமுக, சிபிஎம் கவுன்சிலர்கள் கடுமையாக எதிர்த்தார்கள்.

`இது அரசின் கொள்கை முடிவு’ என்றார் மேயர்.

சித்திரைத் திருவிழாவில் மீனாட்சித் திருக்கல்யாணத்துக்கு குடும்பத்துடன் செல்ல சிறப்பு பாஸ் பெற்றுத்தர வேண்டும்’ என்று கவுன்சிலர் சிலர் வைத்த கோரிக்கைக்கு பதில் அளித்த மேயர் இந்திராணியோ, “நான் மேயரான பின்பு, ஓராண்டு கூட திருக்கல்யாணத்தை நேரில் பார்த்தது இல்லை, டிவியில்தான் பார்த்துள்ளேன்” என்று தனக்கே முன்னுரிமை கொடுப்பதில்லை என்பதை வெளிப்படையாக தெரிவித்தார்.

மேயர் இந்திராணி

கவுன்சிலர்களுக்கான நிதி..

`கவுன்சிலர்களுக்கான நிதியை 40 லட்சமாக உயர்த்தி தர வேண்டும்’ என்று மண்டலத் தலைவர் பாண்டிச்செல்வி வைத்த கோரிக்கைக்கு பதிலளித்த மேயர், “கோவை,திருச்சி மாநகராட்சியில் மட்டும் உயர்த்தி கொடுக்கிறீங்க, எங்களுக்கும் அதுபோல கொடுங்கனு அமைச்சரிடம் (கே.என்.நேரு) கேட்போம்” என்று நக்கலாக பதிலளித்தார்.

முதல்வருக்கு நன்றி தெரிவித்த எதிர்கட்சித்தலைவர்..

”அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரருக்கு எந்த ஆட்சியிலும் இல்லாத வகையில் முதல்முறையாக தமிழக முதலமைச்சர் 3 லட்சம் ரூபாய் இழப்பீட்டுத் தொகை வழங்கினார், அதற் நன்றி” என்று அதிமுகவைச் சேர்ந்த மாநகரட்சி எதிர்கட்சித்தலைவர் சோலைராஜா பாராட்டிப் பேசியதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

`வடக்கு மண்டலம் வாழ்கிறது, தெற்கு மண்டலம் தேய்கிறது..’

“மாநகராட்சியில் மத்திய மண்டலம், வடக்கு மண்டலம் வாழ்கிறது, (இரண்டுமே அமைச்சர் மூர்த்தி, பி.டி.ஆரின் தொகுதிக்குள் வருகின்ற மண்டலங்கள்) தெற்கு மண்டலம் தேய்கிறது. மாநகராட்சி தெருவிளக்குகள் வெளிச்சமில்லாமல் எரிகிறது” என்று, சிபிஎம் கவுன்சிலர் விஜயா குற்றம்சாட்ட,

அதை ஆமோதிப்பதுபோல் “மாநகராட்சிப் பகுதிகளில் தெருவிளக்குகள் வெளிச்சமின்றி இருப்பதாக கவுன்சிலர்கள் மட்டுமின்றி, பொதுமக்களும் தொடர்ந்து குற்றம்சாட்டுகின்றனர், நடவடிக்கை எடுங்கள்” என்று மேயரும் அலுவலர்களை பார்த்து முறையிட்டார்

மாமன்றக் கூட்டம்

எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகள்..

பின்பு பேசிய மேயர் இந்திராணி, “மதுரை மாநகராட்சிப் பகுதிகளில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களின் சிலைகள் முறையாக பராமரிக்காமல் மாலைகள் காய்ந்துபோய் இருப்பதை பார்க்கும்போது கவலை அளிக்கிறது, தூய்மைப் பணியாளர்கள் பராமரித்தால் பொதுமக்கள் தினசரி மாலை அணிவித்து மரியாதை செலுத்துவார்கள்” என்று கூற அதிமுக கவுன்சிலர்கள் நெகிழ்ந்தார்கள். திமுக கவுன்சிலர்கள் நெளிந்தார்கள்.

“நாட்டை நாசமாக்கும் தாமரையைப் போல தண்ணீரை மாசுபடுத்தும் ஆகாயத்தாமரையை அகற்ற நடவடிக்கை எடுங்கள்” என்று விசிக உறுப்பினர் இன்குலாப் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. நாட்டின் தேசிய மலரான தாமரையை எப்படி இழிவுபடுத்தலாம் என்று பாஜக உறுப்பினர் பூமாஸ்ரீ எதிர்ப்பு தெரிவித்து கோஷமிட்டது தனிக்கதை.

இப்படி மதுரை மாநகராட்சி கூட்டத்தில் மேயர் உள்ளிட்ட கவுன்சிலர்களிடம் தெரிந்த தலைகீழ் மாற்றங்கள் பொதுமக்கள் மத்தியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

Vikatan WhatsApp Channel

இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK

https://bit.ly/VikatanWAChannel

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *