
ஆண்டுதோறும் நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாடும் நம் விகடனின் இந்தாண்டிற்கான நம்பிக்கை விருது வழங்கும் விழா, வருகிற 26.04 25, சனிக்கிழமை மாலை 5 மணி அளவில், சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெறவிருக்கிறது.
2024 ஆம் ஆண்டின் டாப் 10 மனிதர்கள் மற்றும் டாப் 10 இளைஞர்கள் விருது, நம்பிக்கை விருதுகளில் உச்சமாக கருதப்படும் பெருந்தமிழர் விருது வழங்கும் விழா நடைபெறும் கலைவாணர் அரங்கை நோக்கி ஆளுமைகளின் வருகையை உச்சி முகர்ந்து வரவேற்க தயாராகிக்கொண்டிருக்கிறது விகடன்.
“பெருந்தமிழர்” நல்லகண்ணு :
அரசியலை வெறுப்புடன் அணுகும் இன்றைய தலைமுறைக்கும் ஒற்றை நம்பிக்கைச்சுடர். கொள்கை வேறுபாடுகளைக் கடந்து மக்களாலும் மாற்றுக் கட்சியினராலும் மதிக்கப்படுகிற ஒரே தலைவர். விவசாயத் தொழிலாளர் நலன் தொடங்கி தாமிரபரணி பாதுகாப்பு வரை எந்தப் போராட்டம் என்றாலும், தன் வயதை மறந்துவிட்டு முதலில் போய் நிற்கும் மனிதர். அதிகார வேட்கையோ, பணத் தேவையோ, புகழ் போதையோ, எந்த எதிர்பார்ப்பும் இல்லாத இவரது முன்னெடுப்புகள் ‘ஏதாவது நல்லது செய்யணும்’ என நினைக்கும் நம் எல்லோருக்குமான நல்லுதாரணம்.
சாதாரண வெள்ளைச் சட்டை, வேட்டி-துண்டு, ரப்பர் செருப்பு, வியர்த்துக் களைத்த உருவம் தான் நல்லகண்ணுவின் வெளி அடையாளம். ஆனால் இவரின் வாழ்க்கை நம் எல்லோருக்குமான நம்பிக்கை வெளிச்சம். ஆச்சர்ய அரசியல்வாதியாக தன் சொந்த வாழ்விலும் தூய்மையைப் பேணினார். தோழர்கள் அன்போடு அவருக்களித்த ஒரு கோடி ரூபாயை அடுத்த நிமிடமே கட்சியின் வளர்ச்சிக்குக் கைமாற்றிய பண்பாளர். கண்ணியமான சமூகச் செயல்பாடுகளாலும் ஓய்வறியாத மக்கள் தொண்டாலும் தமிழ் மக்களின் மதிப்பையும் மரியாதையையும் சொத்தாகச் சேர்த்திருக்கும் இந்தத் தோழர், நமக்கான `பெருமிதத் தமிழர்.’
டாப் 10 மனிதர்கள்
வகுப்பறை , பாடபுத்தகங்களை தண்டி அரசுப்பள்ளி மாணவர்களுக்கு முன்னணி கல்விநிறுவனங்கள், ஆட்சிப்பணி தேர்வில் அசத்தலான வெற்றி பெற தமிழக முதல்வரின் கனவுத்திட்டமான “நான் முதல்வன் ” படைத்திருக்கும் சாதனைக்கு அண்மையில் வெளியான Upsc முடிவுகளே சாட்சி. இந்த ராஜபாட்டைக்கு சிவப்பு கம்பளம் விரித்து மகுடம் சூட்டுகிறது விகடன் .

நவீனத் தமிழ்சமூக வரலாற்றின் குறுக்கு வெட்டு தோற்றத்தை தொடர்ந்து பதிவு செய்து வரும் வரலாற்று ஆய்வாளரும் சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான வேங்கடாசலபதி, அன்பை விட மேலானது வேறு எதுவும் இல்லை என்று மெய்யழகன் படைத்த பிரேம்குமார் ,ஆதிகுடிகளின் உரிமைக்காக பாதம் தேய நடக்கும் பூர்வகுடி நேசர்கள் தனராஜ் – லீலாவதி ,மல்டிபிள் ஸ்க்லிரோசிஸ் நோயால் பாதிக்கப்பட்டு மருந்தும் மருத்துவமனையாக முடங்கி, மறுபிறவி எடுத்து பிற்பாடு மாற்றுத்திறனாளிகள் அமைப்பில் இணைந்து சேவை ஆற்றி வரும் ஸ்மிதா சதாசிவன் – , ஓர் அரசு அதிகாரி மனது வைத்தால் மக்களின் வாழ்க்கை மாறும் என்பதற்கு நல்லுதாரணமாக இருக்கும் வெங்கடேஷ்,
அதிகார அத்துமீறல்களை , முறைகேடுகளை கேள்விக்கு உள்ளாக்கி அம்பலப்படுத்தும் சமரசமற்ற சட்டப்போராளி வழக்கறிஞ்சர் லோகநாதன் ,மரபிசை காவலர்கள் ஷேக் மெகபூப் சுபானி – காலிஷா பீ மெகபூப் , தன் வருவாயின் பெரும்பகுதியை கல்விக்காகவும் , மருத்துவத்திற்கும் அள்ளித்தரும் நல்மனத்தொழிலதிபர் நேப்பாள்ராஜ், 23 ஆண்டுகளாக ஓயாது உழைத்து கொண்டிருக்கும் மனித நேய மீட்பர்கள் இன்டர்நேஷனல் பவுண்டேஷன் பார் க்ரைம் ப்ரீவென்ஷன் அண்ட் வீசிடும் கேர் என்ற அமைப்பும் நம்பிக்கை விருது பெரும் நட்சத்திரங்கள் .
நம்பிக்கை நாயகன் ஹரிஷ் கல்யாண், கண்ணகி நகர் முதல் தலைமுறை கற்றல் மையம் வரை பல்வேறு பணிகளை ஆற்றிவரும் மாற்றத்தின் நாயகர்கள், தமிழ் சினிமாவின் ஒலி ஆளுமைகள் சுரேன் – அழகியகூத்தன் , சாமானிய மக்களுக்கு சாத்தியப்படாத கிரிக்கெட்டில் , பெண்கள் சாம்பியன் போட்டியில் பதக்கம் பெற முக்கிய பங்காற்றிய கமலினி, இழப்பு , தடை , விபத்து என வாழ்க்கை இடறினாலும் , உழைப்புக்கும் போராட்ட குணத்திற்கும் உதாரணமாக திகழும் தடையுடைத்த திருநங்கை சிந்து கணபதி,

பெருவணிகமான மருத்துவத்தில், தனித்து வசிக்கும் , ஆதரவற்ற முதியோரை தேடிசென்று மருத்துவம் பார்க்கும் மாண்புமிகு மருத்துவர் சுவாமிநாதன், மூட நம்பிக்கைகளை களைந்து அறிவியலை சொல்லித்தரும் மாற்றி யோசித்த MR . GK, தொழிநுட்பத்தமிழன் அக்னீஸ்வர் ஜெயப்ரகாஷ் , கேரம் உலகக்கோப்பையில் வெற்றிபெற்ற வெற்றி தமிழ் மகள் காஜிமா எதிர்காலத்தின் இசை முகம் சாய் அபயங்கர் என நம்பிக்கை இளைஞர்கள் மகுடம் சூட இருக்கிறார்கள் .
நம்பிக்கை விதைக்கும் ஆளுமைகளை கொண்டாட கலைவாணர் அரங்கம் நோக்கி வரும் அனைவரையும் வரவேற்க விகடன் காத்திருக்கிறார் . முன்பதிவில்லா இந்த விழாவில் முகம் காட்ட அனைவரும் அணி திரள்வோம்.