
ஸ்ரீநகர்: பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்களை வெளியிட்டுள்ள ஜம்மு – காஷ்மீர் மாநில காவல் துறை, அவர்கள் குறித்து துப்பு கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது.
ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் அருகேயுள்ள பைசரன் எனும் அழகிய பள்ளத்தாக்கில் குழுமியிருந்த சுற்றுலாப் பயணிகள் மீது, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பா எனும் பயங்கரவாத அமைப்பின் நிழல் அமைப்பான ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட் (TRF) கடந்த 22-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதில், 26 பேர் கொல்லப்பட்டனர், பலர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதல் சம்பவம் குறித்து ஜம்மு காஷ்மீர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவுவதற்காக தேசிய புலனாய்வு அமைப்பும் (என்ஐஏ) களத்தில் இறங்கி உள்ளது. பயங்கரவாதிகளை தேடும் பணியில் ராணுவமும் ஈடுபட்டுள்ளது.