
‘சென்னை vs ஹைதராபாத்!’
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கிடையேயான போட்டி சேப்பாக்கத்தில் நாளை நடக்கவிருக்கிறது. இந்நிலையில், போட்டிக்கு முந்தைய பத்திரிகையாளர் சந்திப்புக்கு சென்னை அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் ப்ளெம்மிங் வந்திந்திருந்தார். அப்போது, இளம் வீரர்களைப் பற்றி முக்கியமாக சில விஷயங்களை அவர் பகிர்ந்துகொண்டார்.
‘இளம் வீரர்களைப் பற்றி ப்ளெம்மிங்!”
அவர் பேசியதாவது, ‘இளம் வீரர்களைப் பற்றி கேட்கிறீர்கள். நாங்கள் முதலில் இளம் வீரர்களை கண்டடைய வேண்டும். ஆனால், நடப்பு சீசனின் அதிக ரன்கள் எடுத்த டாப் 20 வீரர்களைப் பாருங்கள். அதில் எத்தனை இளம் வீரர்கள் இருக்கிறார்கள்? அதிகபட்சம் ஒன்றிரண்டு பேர் மட்டுமே இருப்பார்கள். நல்ல திறமையான வீரர்களை எனக்கும் பிடிக்கும்.
கடந்த 2-3 ஆண்டுகளில் பயமில்லாமல் ஆடும் வீரர்களுக்கான ஆட்டமாக போட்டி மாறியிருப்பதையும் அறிகிறேன். ஆனால், நாங்கள் அதிகமாக அனுபவ வீரர்களைத்தான் நம்பியிருக்கிறோம். இளம் வீரர்களால் ஒரே பாணியில்தான் ஆட முடிகிறது. ஆனால், அனுபவ வீரர்களால் போட்டியின் சூழலை புரிந்து பல வழிகளில் ஆட முடியும்.

திறமையான இளம் வீரர்கள் அனுபவ வீரர்கள் இரண்டு தரப்புக்கும் இடையே ஒரு சமநிலை இருக்க வேண்டும் என நினைக்கிறேன். கடினமான சூழல்களில் சிறப்பாக ஆடக்கூடிய வீரர்கள்தான் எனக்கு தேவை. அப்படிப்பட்ட வீரர்களின் வயதைப் பற்றி எனக்கு கவலையில்லை. ஆயுஷ் மாத்ரே ஆடிய விதம் எங்களுக்கு வியப்பாகத்தான் இருந்தது.’ என்றார்.
‘எல்லா இடத்திலும் பிரச்னைதான்!’
சென்னை அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் அதிகமாக ரன்கள் அடிப்பதில்லையே. என்ன காரணம்? என ஒரு பத்திரிகையாளர் கேட்க, அதற்கு ப்ளெம்மிங், ‘டாப் ஆர்டர் மட்டும் ரன் அடிக்கிறார்களா?’ எனும் தொனியில் பதில் கேள்வியை கேட்டிருந்தார்.

மேலும் பேசியவர், ‘எங்களுக்கு டாப் ஆர்டரில் மொமண்டமே கிடைப்பதில்லை. டாப் ஆர்டரிலிருந்து 75 ரன்களுக்கு மேல் வந்தால் பேட்டர்கள் அவர்களுக்கான அந்தந்த ஆர்டர்களிலும் இடத்திலும் இறங்குவார்கள். நல்ல தொடக்கம் கிடைக்காத போது அத்தனை வீரர்களின் இடமும் மாறுகிறது. அதுதான் பிரச்னை.’ என்றார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
