
காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூடு சம்பவம் நாட்டையே உலுக்கியிருக்கிறது. உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதையுடன் நேற்று (ஏப்ரல் 23) டெல்லியில் இறுதி மரியாதை செய்யப்பட்டது.
வாழ்க்கைத் துணையை, சகோதரரை, தந்தையை இழந்து கண்ணீருடன் அஞ்சலி செலுத்தும் காணொலிகள் காண்போரின் நெஞ்சை உலுக்கியிருக்கின்றன.
இந்தத் தாக்குதலை நடத்திய தீவிரவாதிகளைப் பிடிக்கும் பணியில் பாதுகாப்புத் துறை தீவிரமாக இறங்கியிருக்கிறது. பாகிஸ்தான் மீது இந்தியா பல்வேறு கடுமையான நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.
இந்நிலையில் சிலர் இந்தத் தாக்குதலை மதத்துடன் ஒப்பிட்டு, இஸ்லாமியர்கள் மீதான வெறுப்புப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சமூகவலைதளங்களில் திரைத்துறையில் இருக்கும் பாகிஸ்தானைச் சேர்ந்த நடிகர்களையும், அவர்களின் திரைப்படங்களையும் தடை செய்ய வேண்டும், புறக்கணிக்க வேண்டும் என்று பதிவிட்டு வைரலாக்கி வருகின்றனர்.
குறிப்பாக பாலிவுட், தெலுங்கு திரைத்துறை வட்டாரத்தில்தான் இது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
அவ்வகையில் திரையரங்குகளில் வெளியாகவிருக்கும் தெலுங்கு நடிகர் பிரபாஸின் ‘Fauji’ படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று டோலிவுட்டில் சர்ச்சை ஏற்பட்டிருக்கிறது.
அப்படத்தில் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருக்கும் இமான்வி இஸ்லாமியர் என்பதால், அவர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்று குறிப்பிட்டு அப்படத்தைத் தடை செய்ய வேண்டும் என்று சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
ஆரம்பத்தில் இது வெறும் வதந்தியாக இருந்த நிலையில், இது வைரலாகி ‘Fauji’ படத்தில் ரிலீஸுக்கு இது சிக்கலை ஏற்படுத்தும் அளவிற்கு சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

இதனால் நடிகை இமான்வி, இது வதந்தி என்று தனது இன்ஸ்டாகிராமில் தெளிவுபடுத்தியிருக்கிறார். இதுகுறித்து அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “நான் பாகிஸ்தானி, என் குடும்பம் பாகிஸ்தானைச் சேர்ந்தது என்று பரவும் தகவல்கள் முற்றியும் பொய்யான வதந்தி. என் குடும்பத்தைச் சேர்ந்த எவருக்கும் பாகிஸ்தானோடு தொடர்பு கிடையாது. வெறுப்பையும், வதந்தியையும் பரப்பி வருகிறார்கள்.
நான் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இந்திய – அமெரிக்க பெண். இந்தி, தெலுங்கு, குஜராத்தி, ஆங்கிலம் பேசும் இந்தியப் பெண். நான் பிறந்தது லாஸ் ஏஞ்சலில், பிறகு என் குடும்பம் அமெரிக்கக் குடியுரிமைப் பெற்றது. என்னுடைய படிப்பு எல்லாம் அமெரிகாவில்தான். இப்போது இந்தியத் திரைத்துறையில் வாய்ப்புகள் கிடைத்து நடித்து வருகிறேன்.

இந்திய அடையாளமும், கலாசாரமும் என் ரத்தத்தில் கலந்திருக்கிறது. வரலாற்றில் கலைதான் அன்பையும், ஒற்றுமையையும் பற்றி பேசி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறது. கலைத்துறையில் எந்தவித பிரிவினைவாதமும் இருக்காது என்று நம்புகிறேன்.” என்று பதிவிட்டு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்… CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
