
டூரிஸ்ட் ஃபேமிலி படத்துக்கு இசையமைத்துள்ள ஷான் ரோல்டன், படத்தின் புரொமோஷன் நிகழ்வில், தமிழ் சினிமாவில் தமிழ் வார்த்தைகள் எழுதும்போது சரியான வரவேற்பு கிடைப்பதில்லை என்பதைக் குறித்துப் பேசியுள்ளார்.
`நம்பர் 1 இடத்துக்காக நான் வரல’
“இந்த துறையில இசையமைக்க வந்தபிறகு எல்லாருமே எப்போது நம்பர் 1 இடத்துக்கு போகப்போறீங்கன்னு கேப்பாங்க. நான் அந்த நோக்கத்தோட வரல.
இங்க நாம நல்ல படைப்புகளைக் கொடுக்குறது மூலமா கிடைக்கிற விஷயங்கள் ரொம்ப நிலையானதா இருக்கும்.
திடீரென நம்பர் 1 என ஒரு உயரத்தில் தூக்கி வைத்தால், அதைக் காப்பாற்றவே வாழ்க்கை சரியாக இருக்கும். இசை சமூகத்துக்கு என்ன செய்ய வேண்டும், மக்களுக்கு இசை எப்படி பயன்படவேண்டும் என்பவற்றை நாம் சிந்திப்பதில்லை.
இந்த வகையில் பார்க்கும்போது இதுவரை நான் நல்ல படங்களில் பணிபுரிய வாய்ப்பு வழங்கிய இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் எல்லாருக்கும் நன்றி சொல்லிக்கொள்கிறேன்.” என்றார்.
தமிழில் எழுத இடமில்லையா?
“சசிகுமார் சாருக்கு இது ஸ்பெஷலான படமாக இருக்கும்.
பாடலாசிரியர் மோகன் ராஜனின் தமிழ் இந்த காலத்துக்கு இளைஞர்களுக்கு மிக அவசியமானதாக இருக்கும். புதுமை என்பது வித்தியாசமாக செய்வது அல்ல, தொடர்ச்சியாக இருக்க வேண்டும்.

இப்போது முகைமழைன்னு ஒரு வார்த்தை சொன்னார். இதைச் சொல்லும் போது, வைப்பா (vibe) இல்லையே ப்ரோ என்பார்கள்.
ஆனால் தமிழ் திரைத்துறையில் படம் பண்ணும் போது, இங்க ஒரு அழகான தமிழ் வார்த்தை எழுதக் கூட இடமில்லையா? நானும் தங்க்லீஷ் பாடல்கள் பண்றேன், ஆனால் தமிழுக்கும் இங்கு இடம் இருக்க வேண்டும். தமிழ் நம் காதில் விழ வேண்டும்.
ஒரு அழகான தாய் மொழியுடன் பிறந்துவிட்டு, அந்த மொழியே தெரியாமல் பலர் இருக்கிறார்கள். மார்டன் மியூசிக் வழியாக இளைஞர்களுக்கு தமிழ் சென்று சேர ஒரு சரியான ஆள் எனக்கு கிடைத்திருக்கிறார்.
நாங்க (ஷான், இயக்குநர் அபி, பாடலாசிரியர் மோகன் ராஜ்) இணைந்து வேலைப் பார்ப்பது மிக மகிழ்ச்சியாக இருக்கும். சிலர் ஜாலியாக பாட்டு எழுத வேண்டுமென சீரியஸாக அமர்ந்து யோசித்துக்கொண்டிருப்பர். மகிழ்ச்சியாக இருந்தால்தான் கலையை உருவாக்க முடியும்.”

Tourist Family
சசி குமார், சிம்ரன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படத்தை அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் இயக்கியுள்ளார்.
‘ஆவேசம்’ படத்தில் நடித்த மிதுன் ஜெய் சங்கர் மற்றும் யோகி பாபு, கமலேஷ், எம். எஸ்.பாஸ்கர், ரமேஷ் திலக், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.