
கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், ஜி.கிரிஷ், பி.ஜி.அஜித்குமார் ஆகியோர் தங்கள் குடும்பத்தினருடன் ஜம்மு காஷ்மீருக்கு சுற்றுலா சென்றிருந்தனர். இவர்கள் திங்கட்கிழமை பஹல்காமில் தங்கியிருந்த நிலையில் மறுநாள் காலை 9.30 மணிக்கு பஹல்காமில் இருந்து புறப்பட்டு, சுமார் 90 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்ரீநகருக்கு நண்பகல் 12 மணிக்கு வந்து சேர்ந்தனர். தீவிரவாத தாக்குதலுக்கு சில மணி நேரத்துக்கு முன்பு இவர்கள் பஹல்காமை விட்டு வெளியேறியதன் மூலம் தாக்குதலில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளனர்.
இதுகுறித்து கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறுகையில், “கேரள உயர் நீதிமன்ற நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், பி.ஜி.அஜித்குமார், ஜி.கிரிஷ் மற்றும் எம்எல்ஏக்கள் எம்.முகேஷ், கே.பி.ஏ.மஜீத், டி.சித்திக், கே.அன்சலன் ஆகியோர் காஷ்மீரில் இருந்தனர். எனினும் அவர்கள் பத்திரமாக உள்ளனர். இவர்கள் புதன்கிழமை கேரளா திரும்புவார்கள் என எதிர்பார்க்கிறேன்" என்றார்.