
திரைத்துறை நாளுக்கு நாள் வளர்ந்து, இன்று எவ்வளவோ தொழில்நுட்பங்களுடன் திரைப்படங்கள் வருகின்றன. திரைப்படங்களின் தரம், தொழில்நுட்பங்களைச் சார்ந்ததல்ல. தெளிந்த கதை, கலை நேர்த்தி, அதுபேசும் அரசியல் சார்ந்தது. இன்றைய காலத்துடன் ஒப்பிட்டால் பல பழையத் திரைபப்டங்கள் தொழில் நுட்பத்தில் பின்தங்கியிருந்தாலும், காலம் தாண்டி நிற்கின்றன. அதனைப் படைத்த படைப்பாளர்களும் காலம் தாண்டி நிற்கின்றனர். அதில் முக்கியமான படைப்பாளி சார்லி சாப்ளின்.
நகைச்சுவை மட்டுமல்ல, அவரது அரசியல் நையாண்டி, கலைநேர்த்திகள், அரசியல் நுட்பங்களால் என்றும் தனித்து நிற்பவர். ‘கலை இலக்கியம் யாவும் மக்களுக்கே, உழைக்கும் மக்களுக்கே’ என்ற வரிகள்தான் சார்லி சாப்ளினின் திரைப்படங்களின் அடிநாதம்.
கிழிந்த, பொருந்தாத பெரிய ஆடை, குட்டி மீசை, பழைய தொப்பி, வாக்கிங் ஸ்டிக், பொருந்தாத பெரிய ஷூ என நாடகத்தில் ஆடைகள் கிடைக்காமல் இதனை அணிய ஆரம்பித்த சார்லி சாப்ளின், தனது திரைப்படங்கள் முழுக்க கடைசிவரை அப்படியே அதே ஆடையுடன்தான் வறுமையின் குறியீடாக, சாமானிய மக்களின் பிரதிநிதியாக தனது திரைப்படங்களில் நடித்தார். அதுவே அவரது அடையாளமுமானது. அவரது திரைப்படங்கள் மெளனமாக இருந்தாலும், அதில் இருக்கும் சாமனியனின் குரல் அழுத்தமானது, காலம் தாண்டி கவனிக்கப்பட வேண்டியது. சிரிக்கவும் சிந்தக்கவும் வேண்டியது. சார்லி சாப்ளினின் முக்கியமான சில திரைப்படங்கள் பற்றிய ஓர் அறிமுகப் பார்வைதான் இது.
தி கிட் (The Kid) – 1920
பணக்கார வீட்டுப் பெண், காதலன் திருமணம் செய்துகொள்வான் என நம்பி குழந்தைப் பெற்று, பிறகு கதலனால் ஏமாற்றப்பட்டுவிடுகிறாள். பழிச்சொல்லுக்கு ஆளாகிவிடுவோம் என அந்தக் குழந்தையை ரோட்டில் இருக்கும் சொகுசுக் காரில் வைத்துவிட்டு அழதபடி திரும்பிப் பார்க்காமல் சென்று விடுகிறாள். காரை திருட வந்த கும்பல் குழந்தையை வழியிலேயே வீதியில் வைத்துவிட்டுச் சென்று விடுகிறது.
அன்றாடம் சோற்றுக்கு சிறு சிறு திருட்டு வேலைகள் செய்து தனிமையில், வெறுமையில், வறுமையில் வாழ்க்கையை ஓட்டி வரும் சார்லி சாப்ளினின் கண்ணில் அந்தக் குழந்தையை வீதியில் விட்டுவிட மனசில்லாமல் எடுத்து வளர்க்கிறார். அந்தக் குழந்தையை பாடுபட்டு வளர்க்க, இருவரும் சேர்ந்து பணக்காரர்களிடம் சிறு சிறு திருட்டுகளைச் செய்து அன்றைக்கான பசியைப் போக்கி வருகின்றனர். அந்தக் குழந்தையால் சார்லி சாப்லினின் வாழ்க்கை எப்படி மாறியது என்ற நெகிழ்ச்சிக் கதைதான் இது.

பணக்கார்களின் வீட்டுக் கண்ணாடியை உடைத்துவிட்டு, பின்பு அங்கேயே கண்ணாடி விற்கும் சேட்டைகள் இருவரும் சேர்ந்து செய்யும் திருட்டுச் சேட்டைகள் ஜாலியாக, காமெடி நிறைந்ததாக இருந்தாலும் காதலனால் கைவிடப்பட்டப் பெண், அந்தப் பெண்ணால் கைவிடப்பட்ட அந்தக் குழந்தை, சமூகத்தால் கைவிடப்பட்ட சார்லி சாப்ளின், பணத் திமிரைக் காட்டும் பணக்காரர்களை நுட்பமான வர்க்க அரசியலோடு கிண்டல் செய்யும் சார்லி சாப்லினின் காமெடிகள் என பார்க்கத் தொடங்கிய சில நிமிடங்களில் கதைக்குள் இழுத்துச் சென்றுவிடும் இந்த ‘தி கிட் (The Kid)’.
எ உமன் ஆஃப் பாரீஸ் (A Woman of Paris) – 1923

இந்தத் திரைப்படம்தான் சார்லி சாப்ளின் நடிக்காமல் எழுதி, இயக்கியத் திரைப்படமாகும். மரியா என்ற பெண், ஜீன் மில்லட் என்பவரைக் காதலிக்கிறார். ஆனால், பாரிஸுக்குப் பயணம் செய்யும்போது பணக்காரரான பியாரி ரெவல் என்பரைச் சந்தித்து அவரைத் திருமணம் செய்துகொள்கிறார். திருமணத்திற்குப் பிறகு தனது காதலனை மீண்டும் சந்திக்க நேரிடுகிறது. கணவர், காதலன் – பணம், காதல் என மனப் போராட்டத்தைச் சந்திக்கிறார் மரியா. இறுதியில் மரியா எந்த வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தார், அவரின் வாழ்க்கையில் இருக்கும் நியாயங்கள் என்னென்ன, மனச் சுமைகள் என்னென்ன என்பதே இதன் கதைக்களம். அன்புக்காக ஏங்கித் தவிக்கும் பாரீஸ் நகரப் பெண்ணின் கதை இது. வறுமையில், ஆதரவின்றி இருக்கும் பாரீஸ் பெண்களின் வாழ்க்கையை பிரதிபலிக்கும் கதை இது. இயக்குநராக சார்லி சாப்ளின் ஏகப்பட்ட கலை நுட்பங்களுடன் இப்படத்தை எடுத்திருப்பார்.
தி சர்க்கஸ் (The circus) – 1928

சர்க்கஸ் என்றால் என்னவென்றுகூட தெரியாத சார்லி சாப்ளின், ஒரு சர்க்கஸில் அடித்துப் பிடித்து வேலைக்குச் சேர்ந்துவிடுகிறார். கூண்டில் இருக்கும் சிங்கத்துக்கு உணவு வைக்கப் போய் சிக்கித் தவிப்பது, சாகசங்கள் தெரியாமல் சமாளித்து சிக்கித் தவிப்பது என சர்க்கஸ் வேலைகள் தெர்ந்தது போலவே காட்டிக் கொள்கிறார். ஒருகட்டத்தில் வேலைகளைக் கற்றுத் தேர்ந்துவிட, அந்த சர்க்கஸ் குழுவில் தன்னைப்போலவே சிக்கித் தவிக்கும் பெண்ணை அரவணைத்துக் கொள்கிறார். சர்க்கஸில் ஸ்டாராக மாறிய சார்லி சாப்ளின், அப்பெண்ணை காதலிக்கிறார். மிகப்பெரிய ஸ்டாராக வேண்டும் என்ற அப்பெண்ணின் ஆசையை நிறைவேற்ற அவருடன் சேர்ந்து போராடுகிறார். இறுதியில் அவரது காதல் என்ன ஆனது, அவரது வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் இதன் கதைக்களம்.
இதன் இறுதிக் காட்சியில் வட்டத்தின் நடுவே சார்லி சாப்ளின் உட்கார்ந்து இருக்கும் காட்சி, அவரது வாழ்க்கையில் மீண்டும் மீண்டும் ஏதுமற்றுப்போய் மீண்டும் மீண்டும் முதலிலிருந்து ஆரம்பமாகிறது என்பதை அழகாகக் குறிக்கும். கிழிந்த ஸ்டார் போஸ்டர் அவரது ஸ்டார் அஸ்தஸ்தும் கிழிந்தபோய் இருப்பதை காட்டும். அதைத் தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் புதிதாக வாழ்க்கைத் தொடங்குவார். இப்படி படம் முழுக்க சிறுசிறு கலை நுட்பங்களை சார்லி சாப்ளினின் திரைப்படங்களில் ரசித்துப் பார்க்கலாம்.
சிட்டி லைட்ஸ் (City Lights) – 1931

இது காதல் திரைப்படம்தான். ஆனால், இப்படத்தின் முதல் காட்சியிலேயே தனது அரசியல் நையாண்டியை ஆரம்பித்துவிடுவார் சாப்ளின். முதல் காட்சியிலேயே நாட்டின் அமைதி மற்றும் செல்வ செழிப்பைக் குறிக்கும் விதமாக சிலை ஒன்று திறக்கப்படும். சிலை மீதுள்ள திரை விலக்கப்பட்ட உடனே உள்ளே பிச்சைக்காரக் கோலத்தில் சார்லி சாப்ளின் சிலை மீது தூங்கிக் கொண்டிருப்பார். அந்தச் சிலையின் கத்தியில் மாட்டிக் கொண்டு தவிப்பார்.
நாட்டு மக்கள் சர்வாதிகாரத்தின் கத்தி முனையில் ஆளப்படுவதையும், அதில் மக்கள் சிக்கித் தவிப்பதையும் அந்தக் காட்சி குறிப்பதுபோல் இருக்கும். அங்கிலிருந்தே திரைப்படம் ஆரம்பமாகிறது. இப்படி பல காட்சிகளை சார்லி சாப்லினின் திரைப்படங்கள் முழுதும் காணலாம்.

விழிச் சவால் கொண்ட பெண்ணை சந்திக்க நேர்ந்து காதலில் விழுந்துவிடுகிறார் சாப்ளின். மலர்கள் விற்கும் கண் பார்வையற்ற அப்பெண்ணிடம் தனது வறுமை நிலையை மறைத்து அப்பெண்ணிற்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்கிறார். வெறுமையான வாழ்வில் மலர்களைக் கொண்டு வந்த அப்பெண்ணிற்காக அடித்துப்பிடித்து பல வேலைகளைச் செய்து பணம் சம்பாரிக்கிறார். அப்பெண்ணின் கண் பார்வையைச் சரிசெய்ய பாடுபடுகிறார். பார்வை வந்தவுடம் சாப்ளினை அப்பெண் அடையாளம் கண்டுகொண்டாரா?, இருவரின் வாழ்க்கை என்ன ஆனது என்பதுதான் இதன் கதைக்களம். அழகான காதல் கதை.
மாடர்ன் டைம்ஸ் (Modern Times)

தொழிற்சாலைகளில் இயந்திரங்கள் அறிமுகமான காலக்கட்டம் அது. இயந்திரங்கள் தொழிலாளர்களின் வேலையை குறைக்கும் என்று எதிர்பார்த்தபோது, ஏமாற்றமாக அது முதலாளி வர்க்கத்தின் கையில் அகப்பட்டுவிட்டது. இயந்திரங்கள் வருவதற்கு முன்பு பார்த்த வேலையைவிட, இயந்திரங்கள் வந்ததற்குப் பின்பு இயந்திரங்களின் வேகத்துடன் போட்டிப் போட்டு தொழிலாளர்கள் வேலை பார்க்க வேண்டிய இருந்தது. இயந்திரங்கள் வந்தபிறகு உற்பத்தி பல மடங்கு அதிகரித்தது. தொழிலாளர்களின் வேலையும், உழைப்புச் சுரண்டலும் பல மடங்கு அதிகரித்தது. புதிய கண்டுபிடிப்புகள் அனைத்து முதலாளி வர்க்கம் கைகளுக்குச் சென்று சாமானிய மக்களுக்கு, உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக மாறுவதை அழகாக எடுத்துக் காட்டிய திரைப்படம்தான் ‘மாடர்ன் டைம்ஸ்’.
வறுமையால் பாதிக்கப்பட்ட வாழ்க்கை, மக்களின் மீதான அக்கறை சார்லி சாப்ளினை மார்க்சிய, கம்யூனிச தத்துவ வாசிப்பிற்கு கொண்டு வந்தது சேர்த்தது. ஆதிக்கத்திற்கு எதிராக, உழைக்கும் மக்களின் சுதந்திரத்தைப் பேசும் அந்தத் தத்துவத்தால் ஈர்க்கப்பட்ட சார்லி சாப்ளின் தனது திரைப்படங்கள் அனைத்திலும் அதனை குறியீடாக வைத்திருப்பார். அதனை வெளிப்படையாகப் பேசியதுதான் அவரது ‘மாடர்ன் டைம்ஸ்’.
தி க்ரேட் டிக்டேட்டர் (The Great Dictator) – 1940

இரண்டாம் உலகப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் ஜெர்மனி நாடுகளை அத்துமீறி ஆக்கிரமித்து, யூதர் இனத்தை கொத்துக் கொத்தாக அழித்தொழித்து பல லட்சம் மக்களை தீயிட்டுக் கொளுத்திய (holocaust) ஹிட்லரின் சர்வாதிகார கொடூரத்தை துணிச்சலுடன் தோலுரித்து நையாண்டி செய்த திரைப்படம் ‘தி க்ரேட் டிக்டேட்டர்’. அதுவரை மெளனத் திரைப்படங்களை எடுத்து வந்த சார்லி சாப்ளின் முதன் முதலில் திரைப்படங்களிலில் பேசியது இதில்தான். பல நாடுகளில் திரையிட தடை விதிக்கப்பட்டபோது துணிச்சலுடன் இத்திரைப்படத்தை எடுத்து, திரையிட்டார் சாப்ளின். ‘போர் அழிவுக்கும் மட்டும்தான் வழிவகுக்கும், சுதந்திரத்திற்கு அல்ல. இரணுவ வீரர்கள் சுதந்திரத்திற்குத்தான் சண்டைபோட வேண்டும், அடிமைத்தனத்திற்கும் நாட்டை அடிப்படுத்துவதற்கும் அல்ல’ என சார்லி சாப்ளினின் இறுதிக் காட்சி உரை அவரது கலையுலக அரசியலின் உச்சம். போர் அவலங்களை நையாண்டியுடன், சர்வாதிகாரத்தை கிண்டலுடன் காமெடியுடன் கடுமையாக விமர்சித்தத் திரைப்படம் ‘தி க்ரேட் டிக்டேட்டர்’, ஒருமுறையேனும் பார்க்க வேண்டிய திரைப்படமாகும்.
A Dog’s Life – 1918
வறுமையில் திருட்டுத் தொழில் செய்யும் சார்லி சாப்ளினின் வாழ்க்கையில் ஒட்டிக் கொள்கிறது தெரு நாய். அந்த நாயின் வாழ்கையின் வாழ்க்கையும், வறுமையில் இருக்கும் தனது வாழ்க்கையும் ஒன்றுதான் என உணரும் சாப்ளின், அந்த நாயுடன் சேர்ந்து உணவுக்காக பல திருட்டு சேட்டைகளைச் செய்வதுதான் இதன் கதைக்களம். பணம் இருப்பவர்களை நாய்போல நடத்துவதை நையாண்டியாக சொல்லியிருக்கும் கதை. பணம் இல்லாதபோது உயர்தர ஹோட்டலில் நாயைப் போல தன்னையும் எட்டி உதைத்து வெளியேற்றிவிடுவார்கள். பிறகு பணத்துடன் நாயையும் அந்த உயர்தர ஹோட்டலுக்கு சாப்ளின் அழைத்துச் செல்வதெல்லாம் ரசித்து சிந்திக்க வேண்டிய கலைநேர்த்திக் கொண்ட காட்சிகள்.
நேரம் இருந்தால் இந்தத் திரைப்படங்களையெல்லாம் பாருங்கள். காமெடி மட்டுமின்றி, கலை நேர்த்தி, அழுத்தமான அரசியல் நையாண்டிகள் நிறைய கலந்திருக்கும் திரைப்படங்கள் இவை. நீங்கள் ரசித்த சார்லி சாப்ளின் திரைப்படங்களின் காட்சிகள், அரசியல் நையாண்டிகள் குறித்து கமெண்டில் பதிவிடுங்கள்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
