
பிரபல இந்தி நடிகை திஷா பதானி. இவர் தமிழில் சூர்யாவின் ‘கங்குவா’வில் நடித்திருந்தார். இவரது மூத்த சகோதரி குஷ்பு பதானி, ராணுவத்தில் பணியாற்றியவர். தந்தை, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரி ஜக்தீஸ் பதானி. இவர்கள் உத்தரபிரதேச மாநிலம் பரேலியில் வசித்து வருகின்றனர். குஷ்பு பதானி வழக்கம் போல நேற்று முன்தினம் காலை நடைபயிற்சி சென்றபோது, யாருமற்ற கட்டிடத்தில் இருந்து குழந்தை ஒன்றின் அழுகைச் சத்தம் கேட்டது. ஆனால் அவரால் அந்தக் கட்டிடத்துக்குள் செல்ல முடியவில்லை. இதையடுத்து சுவர் ஏறி குதித்தார். அங்கு 9 முதல் 10 மாதம் கொண்ட பெண் குழந்தை ஒன்று காயங்களுடன் இருந்ததைக் கண்டார். அதற்கு முதலுதவி சிகிச்சைகளை மேற்கொண்ட அவர், பின்னர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் குழந்தையை மருத்துவமனையில் சேர்த்தனர்.
அந்தப் பகுதியில் குழந்தையை விட்டுச் சென்றது யார் என்பது தொடர்பாக, சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். குஷ்பு பதானி இது தொடர்பான வீடியோவை தனது இன்ஸ்டாவில் வெளியிட்டுள்ளார். அவரின் இந்தச் செயலுக்குப் பாராட்டுகள் குவிகின்றன. ராணுவத்தில் இருந்து ஓய்வு பெற்று விட்டாலும் ‘ஆன் டூட்டி’யில் இருப்பதாக அவரை பாராட்டி வருகின்றனர்.