
எல்லாக் காலங்களிலும் வாசிப்பு மிக முக்கியமான ஒன்று. அந்த வாசிப்பினை எல்லா தரப்பு மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான முயற்சிதான் Vikatan Play. காலத்திற்கு ஏற்ற மாற்றங்களோடு வாசிக்க சூழல் அமையாதவர்களும் கேட்டு உணரும் படியாக விகடனில் தொடராக வெளிவந்த பல புத்தகங்கள் ஆடியோ புத்தகமாக விகடன் ப்ளேயில் கிடைக்கிறது. அதன் தொடர்ச்சியாக, விகடன் ப்ளேயின் சார்பாக உறவின் உன்னதத்தைப் பேசும் நா.முத்துக்குமாரின் `அணிலாடும் முன்றில்’ தொடரை ஆடியோ பார்மட்டில் வெளியிடும் வெளியீட்டு விழா சென்னை கிஸ் கபேயில் நடைபெற்றது. இதில் வாசிப்பை ஒரு அமைப்பாக எடுத்துச்சென்று ஒருங்கிணைக்கும் பெஸ்ஸி ரீட்ஸ் என்ற வாசக குழுவினர் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்வின் முக்கிய விருந்தினராக பாடலராசிரியர் மோகன் ராஜா கலந்து கொண்டு நா.முத்துக்குமாரைப் பற்றியும், அணிலாடும் முன்றில் பற்றியும் உணர்வு பூர்மாக நம்மிடையே பகிர்ந்து கொண்டார்.
பெஸ்ஸி ரீட்ஸ் என்ற வாசக குழுவினர் அணிலாடும் முன்றில் புத்தகம், ஏன் தங்களுக்குப் ஸ்பெஷல் முக்கியம் என்று தங்களுடைய பர்சனல் அனுவங்களோடு நம்மிடையே பகிர்ந்து கொண்டனர். ஒவ்வொரு உறவுகளைப்பற்றி பேசும் போதும் அதன் ஆடியோ புத்தகம் விகடன் ப்ளேயில் ஒளிபரப்பப்பட்டது. அது இன்னும் உணர்வு ரீதியாக அங்கிருந்தவர்களை கட்டிப்போட்டது. பொதுவாக உறவிகளைப்பற்றி இவ்வளவு வெளிப்படையாக எழுதுவதற்கு நமக்கு தைரியம் வராது ஆனால் நா.மு அவருக்கு அக்கா இல்லையென்றாலும் நிறைய அக்காக்களைப்பற்றி எழுதியிருக்கார். தன் அப்பா, மனைவி, மகன் மூவருக்கும் இந்தப் புத்தகத்தில் கடிதம் எழுதியிருப்பார். என்று ஒவ்வொருவரும் அணிலாடும் முன்றில் தன்னோடு உணர்வு ரீதியாக பின்னிப்பிணைந்ததை வெளிப்படுத்தி இருந்தார்கள்.
சினிமா துறையில் பாடலாசிரியராக 15 வருடத்திற்கும் மேலாக பணியாற்றி வரும் மோகன் ராஜா சினிமாவில் நா.முத்துக்குமாருடன் கூடிய தன்னுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.
“நா.முத்துக்குமார் தான் என்னோட இன்ஸ்பிரேசன் எனக்கான நம்பிக்கையை கொடுத்தது நா.மு தான். `யாதுமாகி’ படத்தில் அவரோட நானும் பாட்டு எழுதிருக்கேன். பாடலாசிரியர்கள்ல சூப்பர் ஸ்டார்ன்னா அது நா.மு தான். நவீன கால உரைநடை, ஜென் கவிதைகளைப் பாடல்களில் ரொம்ப அழகாகப் பயன்படுத்தியிருப்பார். அவருடைய ‘ பாசமான வீட்டில் படிக்கட்டாய் மாறலாம்’ வரி இப்படியும் உறவுகளைப்பத்தி எழுதலாமான்னு தோன வைக்கும். இப்பவும் நான் அவரைத்தான் பாலோ பண்ணுறேன். நமக்கான தூண்டுகோல் யாரோ அவர்களை நிச்சயமாக மறக்கக்கூடாது. அணிலாடும் முன்றில்ல நா.மு எழுதுன அக்கா உறவு தான் `சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்துல வர்ற `ஆழி சூழ்ந்த உலகிலே’ பாடல் எழுதுறதுக்கு உதவியா இருந்தது. இப்படி எல்லா உறவுகளைப்பத்தி எழுதுறதுக்கும் எனக்கு இன்ஸ்பிரேசனா இருந்திருக்கிறார். எப்பயும் நம்முடைய மனதைப் பாதுகாத்துக்கிறது அவசியம்.

உறவுகளிடையே சில நன்றிகள் சில மன்னிப்புகள் கேட்பது அவசியம். அதைத்தான் அணிலாடும் முன்றில்ல பண்ணிருக்காரு. அவர் இன்னைக்கு உயிரோடு இருந்திருந்தால் அணிலாடும் முன்றில் 2 எழுத சொல்லிருப்பேன். அதை அவரால் மட்டும்தான் எழுத முடியும். குறைந்த வயதில் இறப்பவர்கள் இளமையாகவே இருப்பார்கள். நா.முத்துக்குமார் அண்ணனும் அப்படியே இளமையாகவே இருக்கிறார் என்றார். ”
இறுதியாக நா.முத்துக்குமாரின் `புதுப்பேட்டை’ படத்தில் வெளிவந்த ஒரு நாளில் வாழ்க்கை இங்கே பாடல் அங்கிருந்த எல்லாரோலும் பாடப்பட்டத்தோடு விழா நிறைவுற்றது.
விகடனில் வெளிவந்த முக்கியமான தொடர்களை ஆடியோ பார்மேட்டில் கேட்க இப்போதே விகடன் ப்ளேவை க்ளிக் பண்ணுங்க.