
இருபதாம் நூற்றாண்டு விடைபெற்றுக் கொள்ள இன்னும் பத்தாண்டுகளே மிச்சமிருந்தன. உலக நாடுகள் தங்கள் சந்தைகளை பிற நாடுகளுக்காகத் திறந்துவிட்டிருந்தன. அரசுத் துறைகள் தனியர் துறைகளின் பங்களிப்போடு வளர்ச்சியை நோக்கி சீறிப்பாய பயிற்சி எடுத்துக் கொண்டிருந்தன. வர்த்தகம் மட்டுமின்றி அனைத்து துறைகளிலும் உலகமயமாக்கலுக்கான விதைகள் தூவப்பட்டன. இந்திய திரைத் துறை ஹாலிவுட் உடன் சினிமாத்தனங்களை தன் மீது பூசிக்கொள்ள ஒத்திகைப் பார்த்துக் கொண்டிருந்தது. தமிழ்த் திரை இசை ரசிகர்களும் 15-16 ஆண்டுகளாகக் கட்டுண்டுக் கிடந்த இசையிலிருந்து வேறொரு இசைக்காக காத்திருந்தனர்.
சென்னை புதுப்பேட்டை மவுண்ட் சாலையில் இருக்கும் ஒரு வாடகை வீட்டின் 1967-ம் ஆண்டு ஜனவரி 6-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை 5.50 மணி அது . பாட்டி மற்றும் தந்தை அருகிலிருக்க மருத்துவ துணையின்றி, வீட்டிலேயே பிறக்கிறது அந்த ஆண் குழந்தை. இனிப்புகள் வழங்கி தனது பிறப்பைக் கொண்டாடிய தந்தையின் மகிழ்ச்சியை பின்னாட்களில் அறிந்துக் கொள்கிறது அக்குழுந்தை. வயிற்றுப் பிரச்சினைகளால் 4 வயது வரை அவதியுற்று பலவீனமான குழந்தையாக இருந்ததை அம்மா சொல்ல தெரிந்து கொள்கிறது . அந்த அம்மாவுக்கு நெடுநாட்களுக்குப் பின்னர்தான் தெரிந்தது, தான் பெற்றது பலவீனமான குழந்தை அல்ல, இசை உலகை ஆட்டிப் படைக்கப்போகும் ஓர் இசைப்புயல் என்று!