
தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் கார் சென்னை கிண்டியில் உள்ள கத்திப்பாரா மேம்பாலத்தில் விபத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த விபத்தில் 6க்கும் மேற்பட்ட வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும், பெண் உள்பட 3 பேர் காயமடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உள்ளிட்ட அனைவரும் உயிர் தப்பியிருக்கின்றனர். மது போதையில் காரை ஓட்டிய ஓட்டுநர் புஷ்பராஜ் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சேதமடைந்த காரை காவலர்கள் பறிமுதல் செய்துள்ளனர். விபத்து குறித்து ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.
பாபி சிம்ஹாவின் தந்தையை இறக்கி விட்டு வந்த போது இந்த விபத்து நடைபெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.
முதல் வாகனத்தை இடித்தபோதே காரை நிறுத்தாமல் சென்றதுதான் அடுத்தடுத்து வாகனங்களில் மோதி பெரும் விபத்தாக மாறியதற்கு காரணம் என செய்தி அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த விபத்தில் காயமடைந்த மூவரையும் பரங்கிமலை போக்குவரத்து காவலர்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.