
மணிரத்னத்தின் ‘பாம்பே’ படம் இன்று திரையரங்குகளில் வெளியானால் பெரும் சவால்களை சந்திக்கும். அந்தளவு இந்தியா சகிப்புத் தன்மையில்லாத நாடாக மாறிவருகிறது என பாம்பே படத்தின் ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தெரிவித்திருக்கிறார்.
இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்துக்கு அவர் அளித்திருக்கும் பேட்டியில், “பாம்பே திரைப்படத்தின் உயிரே உயிரே பாடலில் கதாநாயகி காதலனை தேடிப் போகும்போது அவர் அணிந்திருக்கும் புர்கா அகற்றுவது அவர் மதத்தைக் கடந்து காதலனிடம் செல்வதாகவும், அதில் உள்நோக்கம் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது.
ஆனால், உண்மையில் அந்தப் பாடல் படமாக்கப்பட்ட இடம் கடற்படையில் இருந்த என் தந்தையின் நண்பர்கள் எனக்கு அறிமுகப்படுத்திய இடம். அந்தப் பாடலில் நாயகி முழுவதும் கருப்பு நிற உடையில் வருவார். வேறு யாரும் அந்தப் பாடல் கட்சியில் இருக்கமாட்டார்கள்.
`இப்போது எடுக்க முடியாது’
ஒரே இடம், நாயகன், நாயகி என பாடல் பதிவு செய்யப்பட்டது. அப்போதுதான் நாயகி நீல நிற உடை அணிந்திருந்ததை கவனித்து, அந்த உடை இந்தப் பாடலில் இருந்தால் காட்சி அமைப்பு நன்றாக இருக்கும் என கருதினேன்.

அதனால்தான் இல்லாத நங்கூரத்தை அங்கு அமைத்து நாயகியின் ஆடை கிழிவதாக காட்சி வைத்தோம். பாம்பே படம் வெளியாகி 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இந்த 30 ஆண்டுகளில் நாட்டின் சகிப்புத் தன்மை அதிதீவிரமாக குறைந்திருக்கிறது. மதம் சார்ந்து மக்கள் மிகவும் தீவிர நிலைப்பாடுகளை எடுக்கிறார்கள். மதம் பெரிய பிரச்னையாகிவிட்டது. பாம்பே போன்ற ஒரு படத்தை நீங்கள் இப்போது எடுக்கவும் முடியாது. அதை திரையரங்கில் வெளியிடலாம் என நினைத்தாலே தியேட்டர் எரிக்கப்படும் என்று நான் நினைக்கிறேன்.” என்றார்.