
‘நாயகன்’ படத்துக்குப் பிறகு கமல்ஹாசன் – மணிரத்னம் இணையும் படம், ‘தக் லைஃப்’. இதில், சிலம்பரசன் டி.ஆர், த்ரிஷா, நாசர், ஜோஜு ஜார்ஜ் உட்பட பலர் நடிக்கின்றனர். ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ், ஆர்.மகேந்திரன் மற்றும் சிவா ஆனந்த் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்ர். ரவி.கே. சந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜூன் 5 வெளியாக உள்ள இப்படத்தின் முதல் சிங்கிள் இன்று வெளியானது. இதற்காக பத்திரிகையாளர் சந்திப்பை படக்குழு ஏற்பாடு செய்தது.
இதில கமல்ஹாசன் பேசியதாவது: “மணிக்கும் எனக்கும் இடையில் எதுவுமே மாறவில்லை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். எல்டாம்ஸ் சாலையில் நாங்கள் முதல்முறை சந்தித்தபோது, மோட்டார் சைக்கிள்களை நிறுத்திவிட்டு அதன் மீது அமர்ந்து, பேசிக் கொண்டிருப்போம். நாங்கள் பேசியதில் 25 சதவீத விஷயங்களை மட்டுமே செய்துள்ளோம். அதில் ஒன்று நாயகன், மற்றொன்று ‘தக் லைஃப்’. நாஙகள் செல்ல வேண்டிய தூரம் அதிகம். ஏனென்றால், எந்தப் படத்திலும் எங்கள் எல்லா கனவுகளையும் நனவாக்க முடியவில்லை. எதிர்காலத்தில் நாங்கள் செய்யும் படங்களில் அது நடக்கும் என்று நான் நம்புகிறேன். நாங்கள் மிகப் பெரிய கனவுகளைக் காண்கிறோம், ஆனால் நமது சந்தைக்கும் பட்ஜெட்டிற்கும் பொருந்தக்கூடிய வகையில் நாங்கள் கட்டுப்படுத்தப்படுகிறோம்.