
ஆத்தூர் காவல் ஆய்வாளர் காஸ்ட்ரோ (சிபிராஜ்) துப்புகளை மின்னல் வேகத்தில் இணைத்து விடைகளைக் கண்டறியும் சூப்பர் காப். அவரது காவல் நிலையத்தில் ஒரு கல்லூரி மாணவி காணாமல் போனதாகப் புகார் வருகிறது. அந்த வழக்கை விசாரிக்கச் சம்பவ இடத்துக்குச் செல்லும்போது, அவரது எல்லைக்கு உட்பட்ட தேசிய நெடுஞ்சாலைப் பகுதியில் ஆம்னி பேருந்தில் செல்லும் ஓர் இளம்பெண் தாக்கப்பட்டதாகப் புகார் வருகிறது. அங்கே விரைந்து செல்லும்போது, அங்கு ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவருகிறது. முதலில் காணாமல் போன பெண் எங்கே, பேருந்தில் தாக்கப்பட்ட பெண் யார், இந்த இளைஞரைக் கொலை செய்தது யார் போன்ற கேள்விகளுக்கெல்லாம் ஒரே இரவில் விடை கண்டறிவதே `டென் ஹவர்ஸ்’ படத்தின் கதை.
ஷெர்லாக் ஹோம்ஸ் பாணியில் கம்பளிப்பூச்சியிலிருந்து ஏசி தண்ணீர் கொட்டுவது வரை துப்புத் துலக்கும் கதாபாத்திரத்தில் சிபிராஜ். விசாரணைக் காட்சிகளில் அவர் நடிப்பு ஓகே ரகம் என்றாலும், முழுப் படத்தையும் தாங்கிச் செல்ல வேண்டிய இடத்தில் சற்று தடுமாறியிருக்கிறார். அவரது ‘வாட்ஸன்’ ஆக காவலராக வரும் கஜராஜ், பாதி நேரங்களில் காணாமல் போனாலும், வரும் காட்சிகளில் நடிப்பில் குறையேதுமில்லை. போதையில் இருக்கும் கிளீனராக ஆடுகளம் முருகதாஸின் பர்ஃபார்மன்ஸில் சற்றே மிகை நடிப்பு எதிர்பார்க்கிறது. திலீபன், ஜீவா ரவி, ராஜ் அய்யப்பா, சரவண சுப்பையா ஆகியோர் வந்து போகிறார்கள்.
அதிவேகத்தில் செல்லும் ஆம்னி பேருந்து போல, ஸ்டாப்பிங்கே இல்லாமல் இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இடைவிடாது பின்னணி இசையை வழங்கியிருக்கிறார். சில இடங்களில் அது பொருத்தமாக இருந்தாலும், பல இடங்களில் கதையிலிருந்து விலகச் செய்கிறது. முழுக்க முழுக்க இரவில் நடக்கும் கதைக்கு, ஒளிப்பதிவாளர் ஜெய் கார்த்திக் நேர்த்தியான ஒளியமைப்பைக் கொடுத்துப் படத்தின் தரத்தை உயர்த்தியிருக்கிறார். பஸ்ஸுக்கு வெளியே நடக்கும் சேஸிங் காட்சிகள், உள்ளே நடக்கும் உரையாடல்கள் கச்சிதமாகப் படமாக்கப்பட்டுள்ளன. திரைக்கதையில் பிரச்னைகள் இருந்தாலும், பரபரப்பான வேகத்தில் (தொழில்நுட்ப ரீதியாக) இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான திரை நேரத்தில் படத்தை முடித்த படத்தொகுப்பாளர் லாரன்ஸ் கிஷோருக்குப் பாராட்டுகள்.
‘யார் கொலைகாரன்’ என்ற கேள்வியை மையமாக வைத்து, ஒரு சிலர்மீது சந்தேகத்தைத் தூண்டி, பின்னர் ‘அவர் இல்லை’ என்று சுற்றலில் விடும் வழக்கமான திரைக்கதை அமைப்பை, ஒரே இரவில் நடைபெறுவதாக இயக்குநர் இளையராஜா கலியபெருமாள் வடிவமைத்திருக்கிறார். காணாமல் போன பெண், காவலர்கள் மீது துப்பாக்கிச் சூடு, கார் துரத்தல் எனப் படம் தொடங்கும் விதமும், நாயகனின் அறிவுத் திறனைக் காட்டும் பின்கதையும் சுவாரஸ்யமாக உள்ளன. ஆனால், ஆம்னி பேருந்துக்கு மாறும் இடத்திலிருந்து படம் நாடகத் தருணங்களின் குவியலாக மாறத் தொடங்குகிறது. எல்லோரிடமும் செல்பி எடுக்கும் இளைஞன், பேருந்தில் காட்டப்படும் 2கே கிட்ஸ் சித்திரிப்பு ஆகியவை மோசமான ஸ்டேஜிங்காக மாறி, முன்பு காட்டப்பட்ட காட்சிகளின் தாக்கத்தை மழுங்கடிக்கின்றன.
வழக்கு விசாரணைத் த்ரில்லர்களுக்குப் பக்கபலமாக இருப்பது தர்க்கத்தோடு எழுதப்படும் துப்புகளும் திருப்பங்களுமே! ஆனால், படத்தில் அவை வசதிக்கேற்ப நம்பகத்தன்மையின்றி நகர்கின்றன. மர்மத்தை இயல்பாக வளரவிடாத பிளாஷ்பேக் காட்சிகள், விசாரணையின்போது கதாபாத்திரங்கள் தங்கள் பின்னணியை விளக்கும் நீண்ட உரையாடல்கள் ஆகியவை ஸ்பீட் பிரேக்கர்கள்! வில்லன்கள் ஒவ்வொரு முறையும் காரை வித்தியாசமான இடங்களில் நிறுத்தித் தப்பிக்கும் விநோதம், திடீரென பேஸ்பால் பந்தைப் பயன்படுத்தி வரும் விளையாட்டான விசித்திர சண்டைக் காட்சி, கொலை நடந்தது எப்படி என்று விடை சொல்லும் இடம் ஆகியவற்றில் நம்பகத்தன்மை மிஸ்ஸிங்! இறுதியில் வில்லனும் அவரது நோக்கமும் வெளிப்படும்போது, “இது சாத்தியமே இல்லையே” என்ற உணர்வே மேலோங்குகிறது.
மொத்தத்தில், தொழில்நுட்ப ரீதியாகக் காட்சிகள் வேகமாக நகர்ந்தாலும், எழுத்து மற்றும் திரைக்கதை ரீதியாக இந்த `டென் ஹவர்ஸ்’ பத்து மணி நேரப் பயணமாக அயர்ச்சியையே தருகிறது.